இந்திய அரசியல்வாதிகள், 40 ஊடகவியலாளர்களை பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதாக கசிந்த தகவல் !

பெகாசஸ் எனப்படும் அதிநவீன கண்காணிப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகெங்கும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான இணைய கண்காணிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என தரவு ஒன்று கசிந்துள்ளது.இதில் இந்தியாவை சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பிறர் என 300 நபர்களின் தொலைபேசி எண்கள் கசிந்த தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 40 பேர் பத்திரிக்கையாளர்கள்! இந்த பெகாசஸ் தொழில்நுட்பம் அரசாங்கங்களுக்கு மட்டுமே தன் சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பெகாசஸ் ப்ராஜெக்ட் :

‘இவர்களை எல்லாம் உளவு பார்த்துக் கொண்டிருக்கலாம்’ எனப்படும் படியான உத்தேச தரவு ஒன்று கசிந்துள்ளது. இந்த தரவு கசிவு பட்டியலில் 50,000க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் பல்வேறு அரசாங்கங்களால் இலக்குகளாக (Person of interest) கருதப்பட்டு இவர்களை கண்காணிப்பதற்காக இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தின் பெகாசஸ் தொழில்நுட்பத்தை அணுகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற பத்திரிகை அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரீஸ் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் என்.ஜி.ஓ விற்கு இந்த பட்டியல் கிடைக்க அவர்கள் தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உட்பட உலகெங்கும் உள்ள 16 செய்தி நிறுவனங்களுக்கு இந்த தரவை பகிர்ந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த தி வயர் எனும் செய்தி நிறுவனமும் அடங்கும். பெகாசஸ் ப்ராஜக்ட்டுக்காக 80 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பல மாதங்களாக ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அம்னஸ்டியின் பாதுகாப்பு ஆய்வகம் தடயவியல் பகுப்பாய்வுகள் செய்தது.

தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 67 ஸ்மார்ட்போன்களை அம்னஸ்டி ஆய்வு செய்தது. அதில் , 23 நபர்கள் கண்டிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் , 14 நபர்களின் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவல் முயற்சிக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 30 நபர்கள் தங்களது செல்பேசியை மாற்றியுள்ளதால் தெளிவான சோதனை முடிவுகள் கிட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர்கள் :

மிஸ்டு கால் , வாட்சப் மெசேஜ், எஸ்.எம்.எஸ் என எதன் மூலமாகவும் ஒருவரது ஸ்மார்ட் போனுக்குள் ஊடுருவும் இந்த பெகாசஸ், அவர்களது கேமரா, மைக் என போனில் உள்ள அஅனைத்து விசயங்களையும், பேசுகின்ற, சந்திக்கின்ற என ஒருவர் செய்யும் அனைத்தையும் உளவுபார்க்கும் தன்மை கொண்டது.

Advertisement

இந்த பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத NSO குழும வாடிக்கையாள ஏஜென்சியின் கட்டளையின் பெயரில் இந்தியாவை சேர்ந்த 40 ஊடகவியலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது அந்த தரவின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கசிந்த தரவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பிரபல செய்தி ஊடகங்களில் உயர் பதவியில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

 • ஷிஷிர் குப்தா, இந்துஸ்தான் டைம்ஸ்
 • பிரசாந்த் ஜா, இந்துஸ்தான் டைம்ஸ்
 • ராகுல் சிங், இந்துஸ்தான் டைம்ஸ்
 • அவுரங்கசீப் நக்ஸ்பாண்டி, இந்துஸ்தான் டைம்ஸ்
 • சைக்கத் தத்தா, முன்னாள் இந்துஸ்தான் டைம்ஸ்
 • விஜய்தா சிங், தி இந்து
 • முசாமில் ஜலீல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
 • ரித்திகா சோப்ரா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
 • சுஷாந்த் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (முன்னாள்)
 • சந்தீப் உன்னிதன், இந்தியா டுடே
 • சித்தார்த் வரதராஜன், தி வயரின் இணை நிறுவனர்
 • சுவாதி சதுர்வேதி, தி வயர்
 • தேவி ரூபா மித்ரா, தி வயர்
 • ரோகிணி சிங், தி வயர்
 • எம்.கே. வேணு, தி வயர்
 • ஜே கோபிகிருஷ்ணன், தி பியோனீர்
 • பரஞ்சோய் குஹா தாகூர்த்தா, பத்திரிகையாளர், ஆலோசகர். நியூஸ் கிளிக்
 • மனோரஞ்சனா குப்தா, தலைமை ஆசிரியர், தி ப்ரண்ட்லைனர் டிவி
 • ஷபீர் ஹுசைன் புச், சுதந்திர பத்திரிகையாளர்
 • இப்திகார் கிலானி, ஜம்மு காஷ்மீரை பற்றி எழுதும் பத்திரிகையாளர்
 • ஸ்மிதா சர்மா, சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் செய்தி தொகுப்பாளர்
 • பிரேம் சங்கர் ஜா, இந்திய பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர்
 • சந்தோஷ் பாரதியா, பத்திரிகையாளர், முன்னாள் எம்.பி.
 • தீபக் கிட்வானி, சுதந்திர பத்திரிகையாளர்
 • பூபிந்தர் சிங் சஜ்ஜன், பஞ்சாபி பத்திரிகையாளர்
 • ஜஸ்பால் சிங் ஹெரன், பஞ்சாபி பத்திரிகையாளர்
 • ஹசன் பாபர் நேரு, வழக்கறிஞர், ஆர்வலர்
 • ஜே.என்.யூ அறிஞர் உமர் காலித், தற்போது யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்
 • திருமுருகன் காந்தி, யுஏபிஏ கீழ் கைது செய்யப்பட்ட ஆர்வலர்
 • ரோனா வில்சன், யுஏபிஏ கீழ் கைது செய்யப்பட்ட ஆர்வலர்
 • ரூபாலி ஜாதவ், யுஏபிஏ கீழ் கைது செய்யப்பட்டவர்
 • பட்டம் பிரசாத் சவுகான், ஆர்வலர்
 • லக்ஷ்மன் பந்த், ஆர்வலர்

சிலர் தங்கள் பெயர் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் பகிரப்படவில்லை என தி பிரிண்ட் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது.

பெகாசஸால் குறிவைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 300 இந்தியர்கள் எண்களின் பட்டியலில் தற்போது பணியில் இருக்கும் இரண்டு ஒன்றிய அமைச்சர்கள், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் மூன்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளும் அடங்கும் என்று தி வயர் தெரிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 2018 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலங்களில் பெரும்பாலான எண்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய அரசாங்கம் ஒரு வாடிக்கையாளரா என்பதை NSO உறுதிப்படுத்தவில்லை. ஆனால் NSO, தி வயர் உட்பட பிற ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தனது ஸ்பைவேரை “சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களுக்கு” மட்டுமே விற்கிறது என்று வலியுறுத்தியது.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியாவை சேர்ந்த தனது வாடிக்கையாளர்கள் உட்பட (குறிப்பாக கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், தலித் ஆர்வலர்கள்) என உலகம் முழுவதும் தன்னுடைய 1400 வாடிக்கையாளர்களை பெகாசஸ் நிறுவனம் ஹேக் செய்துள்ளதாக வழக்கு தொடுத்தது வாட்ஸ்அப் நிறுவனம்.

தற்போது வெளிவந்துள்ள இந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான “தனியுரிமையை” மீறி நடைபெறும் ஒரு செயலாகவும்.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இதில் “அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு” ஏதும் நடைபெறவில்லை என்றும் இது அடிப்படை அற்ற தரவுகளை கொண்டு முன்கூட்டியே எடுக்கப்பட்ட ஒரு முடிவாக உள்ளது என தெரிவித்துள்ளது.

தேதி குறிப்பிடப்படபடாமல் , எந்த அமைச்சரவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது எனும் தகவல்கள் ஏதும் வெளியிடாமல், இந்த அறிக்கை யார் ஒப்புதலின் பெயரில் வெளிவந்துள்ளது என தெரிவிக்கும் படியான கையெழுக்குக்களும் இடம்பெறாமல் இந்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் ,”அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு ஏதும் நடைபெறவில்லை” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது , அப்போது அங்கீகரிக்கப்பட்டு கண்காணிப்புகள் நடைபெற்றுள்ளதா எனும் துணை கேள்வியையும் முன்னெழுப்புகிறது.

Links : 

what-is-pegasus-spyware-and-how-does-it-hack-phones

pegasus-project-spyware-indian-journalists

pegasus-spyware-bhima-koregaon-activists-warning-whatsapp

List of Indian journalists, activists allegedly put on surveillance using Pegasus

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button