பேரறிவாளன் விடுதலை : வழக்குகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் !

1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்திய வெடிகுண்டுக்கு தேவையான 9 வோல்ட் பேட்டரியை வாங்கித் தந்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். ஆனால், ” பேரறிவாளன் வாங்கிய பேட்டரி எதற்காக பயன்பட போகிறது என்ற உண்மையை அவர் அறிந்திருக்கவில்லை ” என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறி இருந்தார்கள்.

ராஜீவ் காந்தி கொலை சம்பவம் தொடர்பாக 41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 3 பேர் தலைமறைவாக இருந்தனர், 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர், 26 பேர் சிறையில் இருந்தனர். இந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 1999 மே 5-ம் தேதி, ” நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றியும், ஒருவர் குற்றமற்றவர் என்றும், மற்ற 18 பேரும் சிறையில் இருந்த காலத்தை தண்டனையாக கருதி விடுதலை செய்வதாக ” தீர்ப்பு வழங்கப்பட்டது.

1999 அக்டோபரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 4 பேரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். ஆனால், 1999 அக்டோபர் 27-ம் தேதி ஆளுநர் பாத்திமா பீவி அமைச்சரவையுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து கருணை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

2000 ஏப்ரல் மாதம் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் அரசாணையால் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

ஆனால், 11 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் சாந்தன், முருகன், பேரறிவாளன் உடைய கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக குடியசுத் தலைவர் அறிவித்தார். இதை எதிர்த்து, 2011 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 பிப்ரவரி 18-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.

2014 பிப்ரவரி 19-ல் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தின்படி, 3 நாட்களில் எழுவரை விடுதலை செய்வதாக அறிவித்து இருந்தார். ஆனால், இதற்கு ஒன்றிய அரசு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது.

7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக அரசியல் சாசனத்தில் உள்ள 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்து இருந்தது. இதையடுத்து, 2018 செப்டம்பர் 9-ம் தேதி, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

ஆனால், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். 2021-ம் ஆண்டு மே 20-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, 7 பேரையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேரறிவாளன் தொடர்ந்து பல மாதங்கள் பரோலில் தான் இருந்து வந்தார். எனினும், 2022 மார்ச் மாதம் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையில், 2016-ல் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்விற்கு வந்த போது, ” யார் விடுதலை செய்ய வேண்டும் என்கிற குழப்பத்துக்கு இடையே அவர்(பேரறிவாளன்) ஏன் சிக்க வேண்டும் ? நாங்களே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது ? ” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதையடுத்து, மே 4-ம் தேதி விசாரணையின் போது, ” விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் ?. 30 ஆண்டுகளில் பேரறிவாளன் நன்னடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை ” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மே 11-ம் தேதி பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய, மாநில அரசுகளில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என வாதங்கள் நடந்தது. இறுதியாக, மாநில அரசிற்கு தான் முக்கியத்துவம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, மே 18-ம் தேதி, பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில், ” பேரறிவாளன் சிறையில் இருந்த போதும், இருமுறை பரோலில் இருந்த போதும் எந்த புகாரும் இல்லை . சிறையில் அவருடைய நன்னடத்தை மட்டுமின்றி, 12 வகுப்பு, இளங்கலை, முதுகலைப் பட்டம், டிப்ளமோ மற்றும் 8 சான்றிதழ் படிப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் மாநில அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இரண்டரை ஆண்டுகாலமாக எவ்வித காரணமுமின்றி முடிவெடுக்காமல் தாமதித்தது தவறான காரியம். ஆகையால், அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜாமீனில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் ” எனத் தெரிவித்து இருந்தனர்.

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசினுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தன்னுடைய அதிகார எல்லையைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் உறுதியாகி இருக்கிறது. மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்திருக்கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.
.
மீதமுள்ள 6 பேர் விடுதலையில், நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் வந்த பிறகு சட்ட வல்லுநர்களோடு நாங்கள் கலந்துபேசி அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும் ” என அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
links : 
Please complete the required fields.




Back to top button
loader