This article is from Feb 05, 2021

7 பேர் விடுதலையில் தமிழக அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பு !

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் விடுதலை தொடர்பான 2018-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்து இருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 161-ன் படி 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரை செய்தது. இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்(ஜனவரி 21-ம் தேதி) 7 நாள்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9-ம் தேதி தள்ளி வைத்தது நீதிமன்றம்.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், “பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அனைத்து ஆவணங்கள் மற்றும் விவரங்களை தமிழக ஆளுநர் ஆராய்ந்ததாகவும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என தன் விளக்கத்தை ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசிற்கு தெரிவித்து உள்ளார் ” என இடம்பெற்று இருக்கிறது.

ஜனவரி 25-ம் தேதியே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் நிராகரித்து குடியரசுத்தலைவரே முடிவெடுக்க முடியும் என தன்னுடைய முடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்து இருக்கிறார். ஆனால், தமிழக அரசிற்கு தெரிவிக்கவில்லை.

Archive link 

ஆளுநர் இம்முடிவை தெரிவித்த சில நாட்களுக்கு பிறகும் கூட ஜனவரி 29-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஏழுவர் விடுதலை தொடர்பாக கடிதம் வழங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூட தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தமிழக முதல்வர் தெரிவித்து வந்தார்.

ஜனவரி 25-ம் தேதி ஆளுநர் பதிலை கூறி உள்ளார் ஜனவரி 29-ம் தேதி நீங்கள் ஆளுநரை சந்தித்து உள்ளீர்கள் உங்களுக்கு தெரியாதா எனச் செய்தியாளர்கள் கேட்ட போது, ” அது எங்களுக்கு எப்படி தெரியும். எங்கள் தரப்பில் அழுத்தத்தை மட்டுமே கொடுக்க முடியும். 7 பேரும் விடுதலை பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது ” என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில், ” பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சட்டரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியான ஆலோசனை பெற்ற பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் சந்திக்கும் போது ஆளுநர் தன்னுடைய பதில் குறித்து தெரிவிக்கவில்லையா அல்லது தெரிவித்தாரா, மாநில அமைச்சரவைக்கு தன்னுடைய முடிவை அறிவிக்காமல் மத்திய அரசின் உள்துறை அமைக்கத்திற்கு மட்டும் எதற்காக தெரிவிக்க வேண்டும், எழுவர் விடுதலையில் போகும் பாதை சரியா, இனி அவர்களின் நிலை என்ன ஆகும் என்கிற பல்வேறு கேள்விகள் எழுகிறது.

Please complete the required fields.




Back to top button
loader