சாதி ஒழிப்பு பேசிய பெரியாரின் பல்கலை தேர்வில் “தாழ்த்தப்பட்ட சாதி எது ?” எனக் கேள்வி !

“சாதி ஒழிப்பே சமூக விடுதலை ” எனக் கூறி சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் அளிக்கப்பட்ட வினாத்தாளில், ” தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?” என்ற கேள்வி இடம்பெற்றது கடும் விமர்சனத்தையும் , கண்டனத்தையும் பெற்று வருகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவுபெற்ற கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ பட்டப் படிப்பின் இரண்டாம் செமஸ்டரில் வரலாறு பாடத்தின் வினாத்தாளில் 11வது கேள்வியாக ” தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது ?” என்ற சர்ச்சைக் கேள்விக்கு, ” மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன்” என நான்கு சமூக பிரிவுகள் விடையாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கேள்வியானது, 1880 முதல் 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் என்கிற தலைப்பில் கேட்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் வினாத்தாளில் சாதிப் பற்றி கேட்கப்பட்ட சர்ச்சைக் கேள்விக்கு சமூக ஆர்வலர்களும், சமூக வலைதளவாசிகளும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்விக் குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன்ம், ” தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது அல்ல. பிற பல்கலை/கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்டது. வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பது இல்லை. மேலும், சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்து யார் ? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ” என விளக்கம் அளித்து உள்ளார்.
இதற்கு முன்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு நடப்பதாக எழுந்த புகாரால் தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பாக சர்ச்சைக்குரிய மற்றும் கண்டனத்துக்குரிய கேள்வி இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.