பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு !

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. சாமானிய பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக வலைதளவாசிகள் என பலராலும் தொடர் கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதும் ஆளும் அரசு மெளனம் காத்தது. தற்போது, சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான கருத்துக்களின் தொகுப்பை இங்கே காண்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ” பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமானது. விலை உயர்வைக் குறைப்பதை தவிர வேறு என்ன காரணம் கூறினாலும் யாரையும் திருப்திப்படுத்த முடியாது. மக்களும் வேறு எந்த பதிலையும் ஏற்க மாட்டார்கள்.
இந்த விவகாரத்தில் எந்தவொரு அமைச்சராலும் யாரையும் சமாதானப்படுத்த முடியாது. எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பது குறித்து மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் ” எனப் பேசி இருந்தார்.
பாஜக தலைவர் ஹெச்.ராஜா, ” காங்கிரஸ் ஆட்சி முடியும் போது பெட்ரோல் விலை 74ரூ, இன்று 93ரூ. ஆக, கடந்த 7 ஆண்டுகளில் 19 ரூபாய் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. பணவீக்கத்தின் அளவுப்படிதான் விலை உயர்வு. விலை ஏற்றம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட குறைவுதான். உணவுப்பொருட்களின் விலை ஏற்றமும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட குறைவுதான் ” எனத் தெரிவித்து இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ” இந்தியாவில் எரிவாயு விலை உயர்விற்கு முந்தைய அரசுகளே காரணம் என குற்றம்சாட்டி இருந்தார். இந்தியா 85% அளவிற்கு எண்ணெய் இறக்குமதியை நம்பி இருப்பதை குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை ” எனப் பேசி இருந்தார். பிரதமர் மோடி பேசியது குறித்த விரிவான கட்டுரையை இங்கே படிக்கவும்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ” இது தற்காலிகமான விலை உயர்வு. பெட்ரோல் விலை உயர்விற்கு சர்வதேச மந்தநிலை தான் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆனது எங்கள் வாக்கு சதவீதத்தை பாதிக்காது. பெட்ரோல் விலை விரைவில் கட்டுக்குள் வரும். இதற்கு மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும் ” எனப் பேசியுள்ளார்.
My suggestion is that this is the time for the country to go for alternative fuel. I’m already propagating electricity as a fuel because India has surplus electricity: Union Minister Nitin Gadkari on increasing fuel prices pic.twitter.com/XWJ8VITzmp
— ANI (@ANI) February 16, 2021
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ” இந்தியா மாற்று எரிபொருள் நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய பரிந்துரை. இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் நான் ஏற்கனவே மின்சாரத்தை எரிபொருளாக பயன்படுத்த பிரச்சாரம் செய்து வருகிறேன். மேலும், அரசு அதிகாரிகள் மின்சார வாகனம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் ” எனப் பேசி இருக்கிறார்.

பாஜக தலைவரும், பீகார் அமைச்சருமான நாராயண் பிரசாத், ” சாமானிய மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். பொதுமக்கள் பெரும்பாலும் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் மட்டுமே போக்குவரத்திற்கு தனியாக வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். மக்கள் அதற்கு பழகிக்கொள்வார்கள் ” எனப் பேசியது சர்ச்சையாகியது.
மேலும் படிக்க : வைரலாகும் 2012ல் பெட்ரோல் விலை உயர்விற்கு பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் !
2012-ல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்து பதிவிட்ட இந்திய பிரபலங்கள் மற்றும் பாஜக கட்சியினரின் வைரல் ட்வீட் குறித்த தொகுப்பையும் விரிவாக படிக்கவும்.
Links :
Electric vehicles usage should be made mandatory for all government officials: Gadkari