This article is from Feb 24, 2021

பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தின் பின்னணி & விளைவுகள் என்ன ?

“வரலாறு காணாத உச்சம் ” , “நாடு முழுவதும் அதிர்வு” என பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளின் முகப்பு ஆன நிலையில் , “எரிபொருள் விலை உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சர்வதேச சந்தை எரிபொருள் உற்பத்தியைக் குறைத்துள்ளது மற்றும் உற்பத்தி நாடுகள் அதிக லாபத்தைப் பெற குறைந்த எரிபொருளை உற்பத்தி செய்கின்றன. இது நுகர்வோர் நாடுகளை பாதிக்கச் செய்கிறது” என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ” உலகளாவிய பெட்ரோலிய வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விகிதங்கள் படிப்படியாக குறைந்துவிடும் ” என்றும் அமைச்சர் உறுதியளித்தார். மத்திய அமைச்சர் கூறியபடி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவரிசையில் உள்ளதால் எரிபொருள் விலை கூடியிருக்கின்றது என்ற காரணம் ஏற்புடையதாக இல்லை.

பெட்ரோலிய பிளானிங் அண்ட் அனாலிசிஸ் (PPAC) செல்லின்படி, இந்தியாவில் 2020 ஏப்ரலில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் $19 (அமெரிக்க மதிப்பில்), 2021 சனவரியில் $54 என  விலை ஏற்றம் இருக்கிறது. ஆனால் வாகன எரிபொருள் விலையேற்றத்தில் இதன் பங்களிப்பு சொற்பமே. 

எரிபொருளுக்கு நாம் செலவழிக்கும் தொகையில் சராசரியாக 60% மத்திய மற்றும் மாநில  வாரியாகவும், cess ஆகவும் அரசுக்கே செல்கிறது.

மத்திய அரசு ரூ.12.40 வரியாகவும், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும் மற்றும் சாலை உள்கட்டமைப்புக்காகவும் cess ஆக ரூ.20.50 என மொத்தம் ரூ.33 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது.

கண்ட்ரோலர் ஜெனரல் ஆப் அக்கௌன்ட்ஸ் (CGA) வின்படி, 2020 ஏப்ரல்-நவம்பரில் மத்திய அரசால் வசூலிக்கப்பட்ட வரியின் மதிப்பு ரூ.1,96,342 கோடி. இது 2019ல் வசூலிக்கப்பட்ட ரூ.1,32,899 கோடியை விட அதிகம். கொரோனா காரணமாக டீசல் 10 மில்லியன் டன்னும், பெட்ரோல் 12 மில்லியன் டன்னும் குறைவாக பயன்படுத்தப்பட்டு இருப்பினும் வரி வசூல் அதிகம்.

நாடு முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கி வருமானமின்றி இருந்த 2020 மார்ச் மற்றும் மே மாதங்களில் இரண்டு தவணைகளில் பெட்ரோல் (லிட்டருக்கு ரூ.13) மற்றும் டீசல் (லிட்டருக்கு ரூ.15) கலால் வரியை உயர்த்த  முடிவு எடுத்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதற்கு  மேல் தமிழக அரசு வரி ரூ.22.64

“மாசத்துக்கு பெட்ரோலுக்குனு மட்டும் தனியா பணம் ஒதிக்கி வைக்க வேண்டிய நிலை வந்துருச்சு” .. “ எவ்வளவு ஏறினாலும் என்னால 50 ரூபாய்க்கு மேல பெட்ரோல் போட முடியமாட்டேங்குது சார்” .. “எலெக்ட்ரிசின் வேல சார் ; வண்டிய தொடர்தே இல்லை, நடக்கவெச்சுட்டாங்க “ என பலதரப்பு மக்களின் மனச்சோர்விற்கு காரணமாகிப் போனது எரிபொருள் விலை.

அத்தியாவசியப் பொருளாக விநியோகிக்கப்பட்டு இருந்த வாகன எரிபொருளை அரசின் மானியத்தில் இருந்து 2010ல் பெட்ரோலை காங்கிரஸ் அரசும், 2016ல் டீசலை பிஜேபி அரசும் விடுவித்தது . 

வாகன எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் வாகன பயன்பாட்டுக்கான சிக்கலன்றி  அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் விலையேற்றம் வரை நீளும் வாழ்வாதார சிக்கலாகும். டீசல் அரசின் மானியத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதால் போக்குவரத்துச் செலவிற்கு வித்திட்டது மத்திய அரசு.

மானியத்தைப் பொருட்படுத்தாமலும், வரியை அதிகரித்துக்கொண்டும், இறக்குமதி செய்யும் OPEC மற்றும் OPEC+ நாடுகளிடம் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் படியும் , மாநில அரசிடம் வரியைக் குறைக்கும் படியும் மத்திய அமைச்சர் வலியுறுத்துவது பொறுப்பைத் தெரிந்ததே தட்டிக்கழிப்பதாகும்.

” பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை ரத்து செய்த மத்திய  அரசிடம் வரிச்சலுகையை எதிர்பார்க்க முடியாது எனவும், cess வரியைக் குறைக்காவிடின் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த வாய்ப்பில்லை” என பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

 ” மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்காது.. மானியம் என்பது தேவைப்படுவோர்க்கு மட்டுமே.. வாகன எரிபொருள் பயன்படுத்துவோர்க்கு அதனை வாங்குவதற்கான சக்தி இருக்கும். ஆகையால் அவர்களுக்கு மானியம் தேவைப்படாது”  என மானியத்தை நீக்கியபோது மத்திய அமைச்சர் கூறியது மக்கள் மீதான அரசின் பார்வையைக் காட்டியது.

கேஸ் மானியம் நீக்கப்படாது என மத்திய அரசு கூறினாலும் மானியம் பெரும்பான்மையான மக்களை வந்தடைவதில்லை(கேஸ் மானியம் குறைந்துள்ளது) என்பதே உண்மை நிலவரம். பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரு முறை விலையேற்றி சராசரியாக ரூ.860க்கு விற்கப்படும் சமையல் எரிவாயுவின் மூலமாகவும் மக்கள் மீதான அதே பார்வையைத் தொடர்கிறது மத்திய அரசு.

  • அருண் பிரசாத், மாணவ பத்திரிகையாளர் (பயிற்சி )

References :

  1. https://www.ppac.gov.in/WriteReadData/userfiles/file/PP_1_a_CrudeOilPrice(C).xls
  2. https://www.ppac.gov.in/WriteReadData/userfiles/file/PP_2_CustomsExciseTariff.xls
  3. https://www.iocl.com/Products/PetrolDieselPrices.aspx
  4. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாகன  எரிபொருள் விலை ஏற்றம் குறித்து பேசிய காணொளி –Petroleum Min Dharmendra Pradhan Blames Fuel Price Hike On Global Crude Oil Prices | CNN News18
  5. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாகன  எரிபொருள் மானியம் குறித்து –  No returning to subsidies on petrol, diesel: Government
Please complete the required fields.
Back to top button
loader