இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி எட்டுமா?

கொரோனா என்கிற சொல்லை அறிந்த நாள் முதல், நம் அனைவரின் கூட்டு மனசாட்சியும் எதிர்நோக்கி காத்திருப்பது வாக்சின் [Vaccine] (எ) தடுப்பூசிக்காகத் தான்.

Advertisement

” தடுப்பூசி அவசியமில்லாத ஒன்று, அது ஒரு ஏமாற்று ” என்கிற ஆய்வற்ற அறிவியல் (Pseudo Science) விவாதங்களுக்கு, இந்தக் கட்டுரை விடை தராது. மாறாக, தடுப்பூசிகளுக்குள் இருக்கும் அறிவியலை, பகுத்தறியும் மூளைகளுக்கான தேவையான தெளிவுரை தருவதே இந்தக் கட்டுரையின் மைய நோக்கம்.

தடுப்பூசி என்றால் என்ன?

தொடக்க கால அறிவியலின்படி, ஒரு தடுப்பூசி என்பது இறந்த வைரஸ்கள் அல்லது பெருக்கமடையாத வைரஸ்களை உட்செலுத்துவது.

எதற்காக ? இப்படியாக ஒரு சில வைரஸ்களை உட்செலுத்தும் போது, மனித உடல் அதற்கு எதிராக ஆன்டிபாடிகளை (Antibody) தயார் செய்யும். இதன்படி, தயாரான அடியாட்களை (antibody-களை), உண்மையான தொற்று வரும் போது உடல் பயன்படுத்திக் கொள்ளும்.

” அதுக்கு, வைரஸ் தாக்கும் போதே, உடம்பு சமாளிச்சுகட்டும் ” என்று உங்கள் பொது அறிவு நோண்டிவிட்டால், இதோ விடை.

சாதாரணமாக ஒரு தொற்று நம்மை தாக்கும் போது, உடல் தயார் நிலையில் இருக்காது. அப்படி உடல் சுதாரித்துக் கொண்டு, போதுமான அளவு அடியாட்களை (Antibody-களை) தயார் செய்ய, வைரஸின் வீரியம், நோயாளியின் உடல் தன்மை, இவற்றைப் பொறுத்து ஓரிரு வாரங்கள் வரை நேரமெடுக்கும்.

Advertisement

இந்த கால இடைவெளிக்குள் உடல், வைரஸுடன் போராடுவதற்காகத் தான் மருந்துகளும், இன்று நாம் பார்க்கும் மருத்துவமனைக் காட்சிகளும்.

தடுப்பூசி என்பது உடலை, வைரஸ் தாக்கத்திற்கு முன்பாக தயார் செய்ய அறிவியல் கண்டறிந்த ஒரு வழிமுறை. இன்று அம்மை நோய்க்கிருமிக்கு எதிராக இங்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் இந்த வகைதான்.

அப்படியாக கொரோனா வைரஸ்-க்கு, ஒரு தடுப்பூசியினைக் கண்டறிய ஆடப்படும் ஆட்டமாகத்தான் இந்த பல நிறுவனங்களின் செய்திகளை நாம் வாசிக்கிறோம்.

“இதோ வந்துவிட்டது, மிக விரைவில்” என்றெல்லாம் நாம் பார்க்கும் செய்திகள் இந்த ஆட்டத்தின் வேகம் குறித்த செய்திகள் தான்.

அப்படி சமீபத்தில் நாம் வாசித்தது, Pfizer-BiONtech நிறுவனத்தின் தடுப்பூசி, Phase-3 ஆய்வுகளில் 95% திறன் (Vaccine Efficacy) கொண்டதாக வந்த செய்திகள். தவிர இந்த தடுப்பூசி, இது வரை வந்த தடுப்பூசிகளைப் போல் அல்லாமல் ‘புதிய வகை’ என்றும் செய்திகள் வருகின்றன. இதனை சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு வைரஸ் நம்முள் நுழைந்த பிறகு, ஆறு படிநிலைகளில், பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகும். இந்த படிநிலைகளை ஆய்வு செய்து அதில் சரியான ஒரு நிலையைத் தாக்கி வைரஸ் பெருக்கத்தைத் தடை செய்வது தான் வேதியியல் மருந்துகளில் நோக்கம்.

இவற்றில் குறிப்பாக, வைரஸின் பெருக்கத்திற்கு தேவையான அடிப்படை உயிரியல் கூறான எம்.ஆர்.என்.ஏ (Messenger RNA), தான் இந்த நிறுவனத்தில் இலக்கு. அதாவது, இதுவரை இறந்த (அ) வீரியம் குறைந்த வைரஸ்களை மட்டுமே தடுப்பூசியாக உருவாக்கிய அறிவியல் இன்று அதன் அடிப்படை மூலக்கூறான mRNA-வை குறிவைக்கத் துவங்கியுள்ளது. இது தடுப்பூசி அறிவியலின் முக்கிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

அது என்னய்யா mRNA? (இதுல எப்புடிணே Light எரியும்?)

இதுதான் நோய் தொற்றின் ஆதி மூலக்கூறு எனக் கூறலாம். வைரஸ் தன்னை பெருக்கம் செய்ய, சில படிநிலைகளின் வழி தனது mRNA, அதாவது அடிப்படை உயிர்க்கூறினை மனித உடலில் செலுத்தும். இந்த mRNA-வினை அடிப்படை மூலக்கூறுகளை, ஆய்வுகளின் வழி கண்டறிந்து, மனித உடலில் செலுத்துகிறது அந்த நிறுவனம். விளைவு, இந்த mRNA-விற்கு எதிராக மனித உடல், அடியாட்களை (Antibody-களை) தயார் செய்யும். இது தான் ஆய்வின் ஒரு வரி விளக்கம்.

சரி, அது வேலை செய்கிறதா? உண்மையில் Antibody-கள் உருவாகின்றனவா.? அப்படி உருவான அடியாட்கள் மனித உடலுக்கு நோய் எதிர்ப்புத்திறன் தருகிறதா?

இதனைச் சோதிக்கும் ஆய்வு தான் Phase 3 trials (1-3 phases).

அதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நபர்களுக்கு இந்த தடுப்பூசிகளை உட்செலுத்தி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு நோய்த் தொற்று வருகிறதா என்று சோதிக்கும்.

எவ்வளவு காலம்.? அறிவியல் வரையறைகளின்படி, 24 மாதங்கள். அதாவது 2 ஆண்டுகள் வரை நோய்த் தொற்று வராமல் இருந்தால் இந்த தடுப்பூசி வேலை செய்கிறது என்று பொருள்.

சரி, இப்போது தானே கொரோனா வந்தது. எப்படி இரண்டு ஆண்டு காத்திருப்பது.?

இன்று செய்திகளில் நாம் பார்க்கும் 95% தடுப்புத் திறன் (Vaccine Efficacy) என்பது மூன்று மாத கால ஆய்வு முடிவு.

இது போன்ற பெரும் கொள்ளை நோய்க் காலங்களில், இறப்பு மற்றும் மக்களில் வாழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு 50% தடுப்புப் திறன் இருக்கும் மருந்தினையே உலக சுகாதார நிறுவனம் எதிர்நோக்கி உள்ளது.

காரணம் ஆய்வில் உள்ள நுணுக்கங்கள் அத்தகையது. இந்த சூழலில் தான் 95% திறன் என்று, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்படி என்றால் தடுப்பூசி வர இரண்டு ஆண்டுகள் (ஒன்னேமுக்கால்) ஆகுமா? இதற்கு தெளிவான பதிலை ஒருவரும் இதுவரை சொல்லவில்லை.

மேற்கண்ட ஆய்வின் முடிவுகளை வைத்து அந்த நிறுவனம் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு அமெரிக்க அரசிடம் (FDA-Food and Drug Administration) விண்ணப்பித்துள்ளது. உரிய ஆவண ஆய்வுகளுக்குப் பிறகு அரசு அந்த நிறுவனத்திற்கு அனுமதி தரலாம் அல்லது இன்னும் ஆய்வினை தொடரச் சொல்லி, ஆவணங்களை சரிபார்த்து முடிவெடுக்கலாம்.

ஒருவேளை, உலக சூழலைக் கருத்தில் கொண்டு அனுமதி வழங்குவதாகக் கொண்டால், உங்களுக்கும் எனக்கும் தடுப்பூசி வரும் தானே.?

அவ்வளவு எளிதில் இல்லை என்பதே இந்தக் கட்டுரையின் வழி நாம் கூற வருவது.

Pfizer ஒரு அமெரிக்க நிறுவனம், BiONtech ஒரு ஜெர்மனி நிறுவனம். முதல் கட்ட தயாரிப்பில் வெளிவரும் ஊசிகளைப் பெறுவதற்கு இந்த இரு நாடுகளுமே தயாராக உள்ளன.

இவை தவிர சுமார் 40 கோடி ஊசிகளுக்கு, முன்பணம் (Pre-booking) செலுத்தி தயார் நிலையில் உள்ளன இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். இன்னும் பசையுள்ள (பணம் படைத்த) வல்லரசுகள் சும்மா விடுவார்களா.?

தவிர, அனுமதி கிடைக்கும் வகையில், இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள ஊசிகளின் எண்ணிக்கைத் தெரியுமா.?

130 கோடிகள். 2021-ஆம் ஆண்டு முழுக்க தயாரிக்க இயலும் மொத்த ஊசிகளின் எண்ணிக்கை இதுவென இந்த நிறுவனங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.

இந்த எண்ணிக்கை எங்கோ பார்த்த எண் போல் உள்ளதா? ஆம் இந்தியாவின் மக்கள் தொகை.

ஒரு வேளை 2021-ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியையும் இந்தியாவிடம் கொடுத்தாலும் நம்மிடம் வருமா என்பது கேள்விக்குறி தான்.

காரணம் இந்த தடுப்பூசி, Ultra Cold Chain, அதி தீவிர குளிர் சாதன வசதியுடன் பராமரிக்கப்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

அதாவது மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (-70 degree celcius).

இந்த வசதி, இன்றைய நிலையில் இந்தியாவில் பரவலாக மக்கள் பயன்பாட்டில் இல்லை என்பதே வருந்தத்தக்க செய்தி.

தவிர உலக சுகாதார நிறுவனம் (WHO), சில கொள்கைகளை வகுத்துள்ளது. அதன்படி இந்த தடுப்பூசி வரும் நிலையில், உலக தேவையினைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட வரிசையில் தான் மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த வரையறை.

உலக சுகாதாரப் பணியாளர்கள் முதலிடத்தில் (Health care Workers)

  • 80-வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • 70-வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • 60-வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • 50-வயதிற்கு மேற்பட்டவர்கள்

இப்படியாக வர வேண்டும் என்பது தான் பொதுவிதியாக WHO அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டின் உலக தரவுகளின்படி, 65 வயதினைக் கடந்தவர்கள் உலகின் 9% மக்கள். அதாவது ஏறக்குறைய 70 கோடி மக்கள் இந்த வயதினைக் கடந்தவர்கள் என்கிறது புள்ளிவிவரம்.

அப்படி என்றால் 130 கோடி ஊசிகள், மேற்சொன்ன உலக சுகாதார நிறுவன முதன்மைகளுக்கே (Priorities) போதாது என்பது தான் இன்றைய நிலை.

அப்படியே மாற்று நிறுவனங்களின் வழி தயாரித்து அதிக எண்ணிக்கையில் கிடைத்தாலும் அவற்றிற்கு இருக்கும் சந்தை மதிப்பை வைத்து, இந்தியா எப்படி நமக்கான தேவைக்கு பணம் செலுத்தி வாங்க இயலும் என்கிற கேள்வியை நான் வசதியாக மறக்க விரும்புகிறேன்.

உலக அளவில் பெருவாரியான மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தடுப்பு மருந்தினை காப்புரிமை விதிகளை (Intellectual Property Protection) நடைமுறை படுத்தும் TRIPS ஒப்பந்தத்திலிருந்து விளக்கு அளிக்குமாறு  இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் உலக வர்த்தக சபை (WTO) முன் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. இதற்கு 99 நாடுகள் ஆதரவு தெரிவித்த போதும் தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியிலிருக்கும் வல்லரசு நாடுகள் இதுவரை செவி சாய்க்கவில்லை.

இதனைவிட அறிவியல் ஒரு கேள்வியைத் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது.

மேற்கண்ட ஆய்வின் population, அதாவது ஆய்வில் ஊசிகளை ஏற்றுக் கொண்ட மக்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள்.

இதில் என்ன சிக்கல்?

வைரஸ்கள் எளிதில் நிறம் மாறக்கூடியவை. அதாவது, நமக்குள் நம்பியாராக உள்நுழையும் வைரஸ், ஒரு 100 நபர்களைக் கடந்த பிறகு பிரகாஷ்ராஜாக உருமாறும் திறன் கொண்டது.

அதாவது தன் அடிப்படை மூலக்கூறுகளில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து கொள்ளும். இது எல்லா ஜீவராசிகளிலும் நடக்கும் (நம்மூர் அரசியல்வாதிகள் போல) ஆனால் வைரஸ் இதில் சிறிது தீவிரமானது.

பெரும்பாலான வைரஸ் தொற்றுகளில் தடுப்பு மருந்துகள் கண்டறிய இயலாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் April-வரை, 8 விதமாக தன்னை வடிவு மாற்றிக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் இதன் வடிவம் பலவாறாக இருக்கும். இதில் அமெரிக்க வாழ் மக்களுக்கு மேற்சொன்ன தடுப்பூசி வேலை செய்கிறது என்றால், அந்த நிறுவனம் கண்டறிந்த mRNA, அந்த நிலத்தில் இருக்கும் வைரஸ் வடிவங்களுக்கு பொதுவானதாக உள்ளது என்று பொருள்.

அதே தடுப்பூசி, இந்தியர்களுக்கும் வேலை செய்யலாம். ஆனால் 95% திறனுள்ளதாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஆக,

  • அனுமதி விரைவில் கிடைக்குமா?
  • உலக மக்கள் தொகைக்கும், சந்தைக்குமான போட்டியில் நமக்கான ஊசிகளின் எண்ணிக்கை தயாராக ஆகும் காலம் எவ்வளவு?
  • அப்படி தயாராகும் பட்சத்திலும் அவை இந்தியர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் காலம் நிச்சயம் அவசியம்.
  • அப்படியே சோதிக்கப்பட்டு ஊசி கிடைத்தாலும் அவற்றை இந்தியா முழுக்க விநியோகிக்க ஆகும் செலவு (Ultra Cold Chain).

இப்படி பல்வேறு கேள்விகள் உள்ளன.

அப்படி என்றால் இது போன்ற அறிவிப்புகள் பெரிதாகப் பேசப்படுவதன் பயன் என்ன?

அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கும், வேறு ஆய்வு நிறுவனங்களில் கோடிகளில் முதலீடு செய்திருக்கும் பெரு முதலாளிகளுக்கு, ஒரு குறியீடாகவும் தான் (நாங்க வந்துட்டோம், காச அங்க கொட்டாதீங்க) இந்த செய்திகள் பயன்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தயாரித்து மொத்தமாக ஊசிகள் வர வாய்ப்பில்லை. தவணை தவணையாகத் தான் வரும்.

எல்லாச் சிக்கலையும் தாண்டி அவ்வாறு வரும் ஊசிகள், ‘MLA பதுக்கினார்’, ‘சந்தைப்படுத்தும் நிறுவனம் பதுக்கியது’, ‘ஊசிகள் களவு போயின’ போன்ற நகைப்புச் செய்திகளுக்கு மத்தியில், நமது கரங்களுக்கு வரும் நாள், அருகில் இல்லை என்பது மட்டும் உறுதி.

மேற்சொன்னவற்றைக் கொண்டு இது ஏதோ Pfizer-BioNTech நிறுவனத்தின் கூட்டு சதி என்று இல்லுமினாட்டி கதைகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம். இவை இரண்டும் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள், இவைகளுக்கு இருக்கும் இந்தச் சிக்கல்கள், ஏனைய சிறு, மத்திய ரக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஆக, எந்த நிறுவனத்தின் தடுப்பூசி முந்திக் கொண்டாலும், அவை நம் கைகளுக்கு வந்து சேர மேற்சொன்ன அதே தடைகளைத் தாண்ட வேண்டும்.

இந்திய நிறுவனம் ஒன்று, தடுப்பூசியைக் கண்டறியும் வகையில் இவை குறையலாம்.

ஆனால், தடுப்பூசி கண்டறிதல் என்பது அவ்வளவு எளிதான தொழில்நுட்பம் இல்லை என்பதை மேற்சொன்ன விளக்கங்கள் வழி உணர்ந்திருப்பீர்கள்.

இந்திய நிறுவனங்கள், தங்களுக்கு இருக்கும் வசதிகளைக் கொண்டு Attenuated Vaccine, அதாவது வீரியம் குறைந்த வைரஸ்களை உட்செலுத்தும் தடுப்பூசி வகைகளுக்குத் தான் ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

எனவே, சுதேசி தடுப்பூசி என்பதனை நெடுந்தூரக் கனவாகவே நாம் பார்க்க வேண்டும். காத்திருப்போம்.! 

  • அதீதன்

 

Links : 

https://www.immunology.org/public-information/bitesized-immunology/pathogens-and-disease/virus-replication

https://pfe-pfizercom-d8-prod.s3.amazonaws.com/2020-11/C4591001_Clinical_Protocol_Nov2020.pdf

https://www.pfizer.com/news/press-release/press-release-detail/pfizer-and-biontech-announce-vaccine-candidate-against

https://health.economictimes.indiatimes.com/news/industry/scientists-identify-8-strains-of-coronavirus/74931204

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button