பியுஷ் மானுஷ் கைது..! ஊடகங்களில் அதிகம் வெளியாகாதது ஏன் ?

இயற்கை ஆர்வலரான பியுஷ் மானுஷ் தற்போது கைதாகி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஊடகங்களில் கைது பற்றிய செய்திகள் ஏதும் பெரிதாக வெளியாவில்லை.
சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் பியுஸ் மானுஷ். இந்த திட்டத்தில் வனப் பகுதிகள், மலைகள், மக்களின் நிலங்கள், விவசாயப் புரியும் நிலங்கள் என பல பகுதிகள் கையகப்படுத்தி சாலை அமைப்பதால் மக்களுக்கு பயன் ஏதுமில்லை. மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான செலவை விட அதிக தொகை நிர்ணயித்துள்ளனர் என்று அரசின் மீது குற்றம் சுமத்தினார்.
தன் வீடியோ பதிவுகள் மூலம் திட்டத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்தார். இந்நிலையில், காவல்துறை திடீரென பியுஷ் மானுஷை கைது செய்துள்ளனர். இவருக்கு முன்பாக சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவர் மற்றும் சுங்கவரி மூலம் கொள்ளை நடக்கும் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகானையும் போலீசார் கைது செய்தனர்.
மக்களின் நலனுக்காகவும், இயற்கை காக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் ஆர்வலர் பியுஷ் மானுஷ் கைதாகி இருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும், பியுஷ் மானுஷ் மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று விவரமாக தெரியவில்லை. விரைவில், கைது நடவடிக்கை பற்றிய விவரங்கள் போலீசார் தெரிவிக்கும் போதே அறிய முடியும்.