உலகளவில் 6,86,42,999 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு.. ‘பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்’ அறிவிக்க இது தான் காரணமா ?

இந்தியாவில் ஜனவரி 6, 2023 அன்று அறிவிக்கப்பட்ட 'பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்'.. EA 2023 அறிக்கை கூறும் தரவுகள் இதோ !

‘தவறாக நிர்வகிக்கப்படும் கழிவுக் குறியீடு’ (Mismanaged Waste Index (MWI)) என்பது பொதுவாக ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் அளவுகள் மற்றும் அந்த நாட்டின் கழிவு மேலாண்மை திறன் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. எனவே ஒருநாட்டின் MWI குறியீடு அதிகரிக்கும் போது, அந்த நாட்டில்  பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான ஆபத்தான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

‘பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்’ அறிவிக்க காரணமென்ன ?

ஒரு நாட்டில் எப்போது MWI குறியீட்டின் அளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கிறதோ, அந்த தினம் “பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்” (Plastic Overshoot Day) என்று அறிவிக்கபடும். அதன்படி பூமியில், பிளாஸ்டிக்கின் அளவு, அதன் கழிவு மேலாண்மை திறனை மீறிவிட்டதாகக் கூறி, சுவிஸ் நாட்டை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Global Earth Action (EA), கடந்த ஜூலை 28, 2023-ஐ உலகத்தின் முதல் ‘பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்’ என்று அறிவித்தது.

EA வெளியிட்ட 2023 அறிக்கையின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை தவறாக மேலாண்மை செய்யும் சீனா, பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, ரஷ்யா, மெக்சிகோ, அமெரிக்கா, சவுதி அரேபியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈரான் மற்றும் கஜகஸ்தான் உட்பட்ட 12 நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் உலகிலுள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில், 52% கழிவுகளை இந்த 12 நாடுகளே உற்பத்தி செய்கின்றன.

இத்தகைய பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரிப்பின் மூலம், 2023 ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக 6,86,42,999 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் சேரும் என்றும், 2040-க்குள் உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் ‘பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்’ :

இந்தியாவில் 2023, ஜனவரி 6 அன்று பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதன் நிர்வாகத் திறனை விட அதிகமாக இருந்ததால், இந்தியாவில் ‘பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம்’ கடந்த ஜனவரி 6  அன்று அறிவிக்கப்பட்டது.  இதே போன்று நாடுவாரியாக பிளாஸ்டிக் ஓவர்ஷூட் தினம் எப்போது அறிவிக்கப்பட்டது என்பதை கீழே உள்ள புகைப்படத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

EA அறிக்கையின் படி, இந்தியாவில் ஒரு தனிநபருக்கான பிளாஸ்டிக் பயன்பாடு 5.3 கிலோவாக உள்ளது. உலகளவில் தனிநபர் பிளாஸ்டிக் பயன்பாட்டில் ஐஸ்லாந்து (128.9 கிலோ) முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது இது 24.3 மடங்கு அதிகம். இதன் மூலம் ஒரு நபரின் உலகளாவிய சராசரி பிளாஸ்டிக் பயன்பாடு ஆண்டுக்கு 20.9 கிலோவாக உள்ளது.

இதேபோன்று, பிளாஸ்டிக் கழிவுகளை முறைகேடாக நிர்வகிக்கும் முதல் மூன்று நாடுகளில் மொசாம்பிக் (99.8%), நைஜீரியா (99.44%), மற்றும் கென்யா (98.9%) ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 98.55 சதவீதத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

மேலும் CSE india வெளியிட்டுள்ள பிளாஸ்டிக் லைஃப் சுழற்சி அ றிக்கையின்படி, இந்தியா தனது பிளாஸ்டிக் கழிவுகளில் 12.3 சதவீதத்தை மறுசுழற்சி செய்து 20 சதவீதத்தை எரிக்கிறது. இதன்படி, ஆண்டுக்கு 14.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா மறுசுழற்சி செய்து செயலாக்கம் செய்கிறது. 

பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன ?

  • பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டு EPR போன்ற வலுவான கழிவு மேலாண்மை கொள்கைகளை இந்தியா செயல்படுத்த வேண்டும். 
  • உள்ளூர் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பிற நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதையும் இந்தியா நிறுத்த வேண்டும்.
  • இந்தியாவின் பெரும்பாலான பிளாஸ்டிக் குப்பைகள், பதிவு செய்யப்படுவதில்லை. PWM வழிகாட்டுதல்களின்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தங்களது பகுதிகளில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பதிவு செய்து, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு (SPBs) ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும், இந்த மாநில அளவிலான அறிக்கைகள் CPCB-க்கு முறையாக அனுப்பப்பட வேண்டும்.
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத, மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை பயன்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.
  • Oxo-biodegradable பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். 

 

ஆதாரங்கள்:

https://www.downtoearth.org.in/news/waste/india-among-the-12-countries-responsible-for-52-of-the-world-s-mismanaged-plastic-waste-report-90927

https://plasticovershoot.earth/wp-content/uploads/2023/06/EA_POD_report_2023_Expanded_V3.pdf

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader