பிரதமரின் குடியுரிமை சான்றிதழை கேட்டு ஆர்.டி.ஐ தாக்கல்| பி.எம்.ஓ பதில்.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி உள்ளிட்டவைக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எனினும், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் குடியுரிமையை நிரூபிப்பதில் பலரும் தோல்வி அடைந்து வருவதை செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், எந்த ஆவணங்களை கொண்டு குடியுரிமையை நிரூபிக்க முடியும் என்ற சந்தேகங்கள் மக்களிடையே நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அப்பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் சேதமும், உடைமை சேதமும் அதிகம். அரசியல் சார்ந்தவர்களும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா என்ற கேள்விகளை முன்வைத்தனர்.
இந்நிலையில்தான், பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று ஆர்டிஐ தகவலில் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனவரி 17-ம் தேதி ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டு இருந்தார். அதற்கு இந்திய பிரதமர் அலுவலகம் தரப்பில் பிப்ரவரி 28-ம் தேதி அளிக்கப்பட்ட தகவலில், ” இந்தியக் குடியுரிமை சட்டம் 1955-ன் பிரிவு 3-ன் படி பிறப்பால் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமகன், ஆகையால் அவர் பதிவு மூலம் குடியுரிமை சான்றிதழ் வைத்திருப்பது குறித்து கேள்விகள் எழுவதில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரி 17-ம் தேதி வெளியான செய்தியில், கேரளாவைச் சேர்ந்த ஜோஷ் கல்லுவேட்டில் என்பவர் பிரதமர் மோடி இந்தியக் குடிமகனா என ஆர்டிஐ தாக்கல் செய்து இருந்ததாக வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி 29-ம் தேதி The siasat daily என்ற இணையதளத்தில், பிரதமர் மோடியின் குடியுரிமை குறித்த ஆர்டிஐ பதில் வெளியாகி இருக்கிறது. மேலும், பிரதமர் என்பதால் பிறப்பால் இந்தியர் என்பதை கூறியது போன்று சாமானிய மனிதமும் தானும் பிறப்பால் இந்தியர் எனக் கூறினால் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி இடம்பெற்று இருக்கிறது. மேலும், சீமி பாஸா எனும் பத்திரிக்கையாளர் அந்த ஆர்.டி.ஐ தகவலை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
If PM @narendramodi does not require to register his citizenship, as per Section 3 of the Citizenship Act 1955, then why should others?
Here is the PMO’s response to an RTI filed by Subhankar Sarkar (632/2020-PME) #CAA_NRC_NPR #DelhiRiot2020 #DoubleStandards pic.twitter.com/WydrnFMZt8— seemi pasha (@seemi_pasha) February 29, 2020
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 1955 இந்திய குடியுரிமை சட்டத்தின் படி பிறப்பால் இந்தியன் என்றும், பதிவு மூலம் குடியுரிமை சான்றிதழ் இல்லை என்ற பதிலை பிரதமர் அலுவலகம் அளித்துள்ளது. இந்த தகவல், ” பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை ” என மோலோட்டமாக சில செய்தி தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிறப்பால் இந்தியக் குடிமகன் என நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது. நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்த அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் சாத்தியமா என்ற கேள்விகள் இங்குள்ளவர்களுக்கு இருக்கிறது. ஆகையால், என்னென்ன ஆவணங்கள் குடியுரிமையை நிரூபிக்க உதவும் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.
Proof links :
Modi has no citizenship certificate, he’s Indian by birth: PMO
Amid CAA stir, RTI application seeks proof of PM Narendra Modi’s citizenship
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.