9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட 10.76 லட்சம் கோடி நிதி என பாஜக வெளியிட்ட அறிக்கையில் உள்ள பொய்கள்!

2014-2023 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது, பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் எனக் கூறி நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் பேசிய வீடியோவை பாஜகவினர் வைரல் செய்தனர். ஆனால், அது தவறான தகவல். மறைமுக வரி, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்டவை குறிப்பிடப்படவில்லை என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க: தமிழ்நாடு செலுத்தும் வரியை காட்டிலும் அதிக நிதியை ஒன்றிய அரசு தந்துள்ளதாகப் பரப்பப்படும் பொய் !

இதையடுத்து,ரேந்திர மோடி 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10,76,000 கோடிக்கும் மேலான நிதி வழங்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினைக் குறிப்பிட்டு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார். அவ்வறிக்கையில் தவறான தகவல்கள் மற்றும் குளறுபடிகள் பல உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் காண்போம். 

அறிக்கை : தமிழ் | ஆங்கிலம்

மெட்ரோ இரயில் : 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் அமைவதற்கான செலவு ரூ.72,868.71 (கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ இரயில் தொடர்பான முதற்கட்ட பணிகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே போதே மேற்கொள்ளப்பட்டது. மெட்ரோ பணிகள் குறித்து 2022ல் PIB வெளியிட்ட தகவலில், சென்னை மெட்ரோவின் முதல் கட்ட பணிக்கான ரூ.9,622.31 கோடி ரூபாய் ஜனவரி 2014  முதல் தற்போது வரை ஒன்றிய அரசு சார்பாக அளிக்கப்பட்டுள்ளது என இடம்பெற்று இருக்கிறது. 

ரூபாய் 63,246 கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்  தற்போது நடைபெற்று வருகிறது. இச்செலவினை ஒன்றிய மற்றும் மாநில அரசு 50-50 சதவீதம் எனப் பங்களிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு தொகையையும் சேர்த்து மொத்தமாக குறிப்பிட்டு உள்ளனர். 

ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரையில் இன்னும் ஒப்புதலே அளிக்கவில்லை. இதற்கென எந்த நிதியும் ஒதுக்கவில்லை. PIB தளத்திலும் இது மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளது.

 

உண்மை இப்படி இருக்கையில் சென்னை மெட்ரோ பணிக்காக ஒன்றிய அரசு அளிக்காத ஒரு தொகையினை அளித்ததாக பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

முத்ரா கடன் உதவி திட்டம் (PMMY) : 

பாஜக தனது அறிக்கையில் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம் 4 கோடி பேருக்கும் அதிகமானோர் (4,08,49,942 பேர்) தமிழ்நாட்டில் பயன் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்டத் தொகை ரூ.2,02,603.94 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் முத்ரா கடன் உதவித் தொகை மூலம் எவ்வளவு பேர் பயன் அடைந்தனர் என மாநிலங்கள் அவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

2018-19 நிதியாண்டில் இருந்து 2022-23 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3,15,37,719 பேர் முத்ரா திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த தொகை 1,74,660 கோடி ரூபாய் என ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

இந்த கடன் உதவி திட்டம் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் பாஜக அறிக்கையில் இருப்பது போல் சுமார் 4 கோடி பேர் பயன் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இது வங்கிகளிடம் இருந்து பொது மக்கள் பெறக்கூடிய கடன் என்பதால் அதனை பெறுபவர் வங்கிக்கு திருப்பி செலுத்தியாக வேண்டும். இந்த கடன் உதவி திட்டத்தைத் தமிழ்நாட்டிற்கு அளித்த நிதி உதவி போல் விளம்பரம் செய்துள்ளது பாஜக. 

மதுரை எய்ம்ஸ் : 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,978 கோடி என பாஜகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2019, ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படவில்லை. திறக்கப்படாத கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. அம்மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தங்கி பயில்கின்றனர். 

இது ஒருபுறம் இருக்க 2023, டிசம்பர் நிலவரப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்காக 1977.8 கோடி ரூபாய் ஒதுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், 18.37 கோடி ரூபாய் மட்டுமே இது வரையில் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வழங்கப்படாத நிதியை வழங்கியதாக பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

PMSVANidhi : 

தமிழ்நாட்டில் 2020-23 ஆண்டு வரை PMSVANidhi திட்டத்தின் மூலம் 1,80,027 பேர் பயன் அடைந்ததாக பாஜக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது சாலையோர சிறு வணிகர்களுக்கான கடன் உதவி திட்டம். இத்திட்டம் மூலம் பெறக்கூடிய தொகையினை வணிகர்கள் திருப்பி செலுத்த வேண்டும். இதனையும் ஒன்றிய அரசின் மூலம் கொடுக்கப்பட்ட நிதி என்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் மூலம் 15,54,249 பேர் பயன் அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2023, ஜூலை 22ம் தேதி வரையில் எவ்வளவு பேர் பயன் அடைந்தனர் என்கிற விவரத்தினை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 16,739 நிறுவனங்களும் 8,17,340 பணியாளர்களும் பயன் அடைந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் எண்ணிக்கைக்கும் பாஜகவின் அறிக்கையில் உள்ள எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. 

MSME – சிறு மற்றும் குறு தொழில்கள் : 

சிறு மற்றும் குறு தொழில்களுக்குத் தமிழ்நாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட நிதி என்று 26,659 கோடியை பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் கடனாக அளிக்கப்பட்டத் தொகைதான். இதனையும் பெறுபவர்கள் திருப்பி செலுத்தவேண்டும். இது நிதி கிடையாது. 

இதே அறிக்கையை ஆங்கிலத்திலும் பாஜக வெளியிட்டுள்ளது. அதில், ‘Loan Amount’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதனை தமிழில் கடன் எனக் குறிப்பிடாமல் நிதி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளது. 

ஜன்-தன் யோஜனா (PMJDY) : 

பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா என்னும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 49 கோடி பேருக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1.97 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், இதே போல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட 1.4 கோடி வங்கிக் கணக்குகளில் 4,896.73 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் பாஜக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மோடி பிரதமரானதும் ஜீரோ பேலன்சில் வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன்-தன் யோஜனா திட்டத்தை 2014, ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தையொட்டி தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் சுமார் 10 கோடி செயல்படாமல் இருப்பதாக கூறப்படுவது உண்மையா? என நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சகம், PMJDY திட்டம் மூலம் தொடங்கப்பட்ட  51.11 கோடி கணக்குகளில் 20 சதவீத கணக்குகள் செயல்படவில்லை எனக் கூறியுள்ளது.  

மேலும் பாஜக தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் 4,896.73 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அந்த தொகை ஒன்றிய அரசு பொது மக்களின் வங்கி கணக்கில் செலுத்திய மானியமா? கடனா? அல்லது அது பொது மக்களின் சொந்த பணமா என எந்த விவரத்தினையும் குறிப்பிடவில்லை. 

இப்படி வழங்கப்படாத நிதி, கடன் அளிக்கும் திட்டங்களைச் சேர்த்து 10.76 லட்சம் கோடி நிதி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டதாக பாஜக அறிக்கை கூறுகிறது. 


Update: ‘பிபிசி தமிழில்’ வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து ரூ.3,273 கோடி ரூபாயை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளதாக இதற்கு முன்பாக எழுதி இருந்தோம். தற்போது தயானந்த் கிருஷ்ணன் என்பவர் மூலம் கிடைத்த RTI தகவலை அடிப்படையாக வைத்து அதனை திருத்தி இருக்கிறோம்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader