பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ வர்ணாசிரமத்தை ஊக்குவிக்கிறதா ?

பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திரதின உரையில் பாரம்பரிய தொழில்கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ‘விஸ்வகர்மா திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 16 அன்று இதற்கான அரசாணையையும், இந்தத் திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் ஒன்றிய அரசு வெளியிட்டது.
விஸ்வகர்மா திட்டமும், அதற்கான தகுதிகளும் :
இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 18 பாரம்பரிய தொழில்களுக்கு ரூ.13,000 கோடி நிதியை ஐந்தாண்டுகளுக்காக (FY 2023-24 முதல் FY 2027-28 வரை) ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் கைவினை கலைஞர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி பணிபுரிவதை ஊக்கப்படுத்துவதோடு, “குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய திறன்களை” வலுப்படுத்தி வளர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்புரியும் கைவினைஞர்களுக்கு இந்த திட்டத்திற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளுடன் சேர்த்து கடன் உதவியாக முதல் தவணையில் ரூ. 1 லட்சமும், இரண்டாம் தவணையில் ரூ. 2 லட்சமும் 5% வட்டி விகித சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் பாரம்பரிய தொழில்கள் பின்வருமாறு,
-
-
- தச்சர்;
- படகு தயாரிப்பவர்;
- கவசம் தயாரிப்பவர்;
- கொல்லர்;
- சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்;
- பூட்டு தொழிலாளி;
- பொற்கொல்லர்;
- குயவர்;
- சிற்பி/கல் உடைப்பவர்;
- காலணி தைப்பவர்/காலணி தயாரிப்பவர்;
- கொத்தனார்;
- கூடை/பாய்/துடைப்பம் தயாரிப்பவர்/கயிறு சார்ந்த தொழில் செய்பவர்;
- பாரம்பரிய பொம்மைகள் தயாரிப்பாளர்;
- முடி திருத்துபவர்;
- பூமாலைகள் கட்டுபவர்;
- சலவைத்தொழிலாளி;
- தையல்காரர்;
- மீன்பிடி வலை தயாரிப்பாளர்.
-
இந்தத் திட்டத்தின் மூலம் முதலில் பயனாளிகள் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக தலைவர்களால் சரிபார்க்கப்படுவார்கள். அதன்படி பயனாளிகள் பாரம்பரியமாக சுயதொழில் அடிப்படையில் தான் தொழிலில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். மேலும் இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் மூன்று சரிபார்ப்பு நிலைகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி முதல் கட்ட சரிபார்ப்பு கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக தலைவர்களாலும், இரண்டாம் கட்ட சரிபார்ப்பு மாவட்ட அமலாக்கக் குழுவாலும், மூன்றாம் கட்ட சரிபார்ப்பு ஸ்கிரீனிங் கமிட்டி என்று சொல்லப்படுகின்ற அமைப்பாலும் அங்கீகரிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு 40 மணிநேர அடிப்படைப் பயிற்சியும் (5-7 நாட்களுக்கும்), 15 நாட்களுக்கு 120 மணிநேர மேம்பட்ட திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இத்தகைய அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகளின் போது உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதமும், உபகரணங்கள் மற்றும் கருவிகள் (Tool Kits) வாங்குவதற்கு ஊக்கத்தொகையாக ரூ.15,000-ம் வழங்கப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் கட்டண முறையை மேம்படுத்த, ஒவ்வொரு மாதமும் பயனாளிகளின் (eligible transaction means a digital pay-out or receipt in the bank account of the beneficiary) தகுதியான முதல் 100 டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.1 என்ற வீதம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டியது அவசியம்.
குலக்கல்விமுறையும் வர்ணாசிரமும் :
1953-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி ‘Modified scheme of Elementary Education’ என்ற பெயரில் “சாதி அடிப்படையிலான குலக்கல்வித் திட்டத்தை” அறிமுகப்படுத்தினார். அதன்படி ஆரம்பப்பள்ளிகளின் வேலைநேரத்தை 5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைத்து, காலை, மாலை என இரு அமர்வுகளாக (shift) பிரித்து, முதல் அமர்வில் மாணவர்கள் பள்ளியில் கல்வியையும், இரண்டாவது அமர்வில் அவர்கள் தங்கள் தந்தைகளிடம் குலத்தொழிலையும் கற்குமாறு ஆணையிட்டார்.
இத்திட்டம் முதலில் 1953–54 கல்வியாண்டில் கிராமப்புறப் பள்ளிகளிலிலும், பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் அமல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டம் தொடங்கப்பட்டதற்கான ஆதாரத்தை அப்போதைய 1952-1957 மெட்ராஸ் சட்டசபையின் அறிக்கை மூலமும் உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் இந்த திட்டத்தை அப்போதே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர், நீதி கட்சியைச் சேர்ந்த பெரியார் உட்பட பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இராஜாஜியின் இந்த திட்டத்தைப் போன்றே, தற்போதைய ‘பிரதமரின் விஸ்வகர்மா திட்டமும்‘ குடும்பம் சார்ந்த பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறது. இதன்படி தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியற்றவர்களாகிறார்கள்.
மேலும் இந்தத் திட்டம் கலாச்சார நடைமுறைகள், தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் குலத்தொழில்கள் மற்றும் குரு-சிஷ்ய பரம்பரை தொழில்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முடிவெட்டும் ஒரு தொழிலாளியின் மகன் முடி வெட்டும் தொழிலை செய்ய மட்டுமே மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகின்றார். அதே போன்று சலவை செய்யும் தொழிலாளியின் மகன் சலவைத்தொழில் செய்யவே ஊக்குவிக்கப்படுகின்றார்.
எனவே இதன்மூலம் எப்படி வர்ணாசிரமம் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக சொல்லப்படுகின்ற பிராமணர்கள் (பூசாரிகள் மற்றும் ஆசிரியர்கள்), க்ஷத்ரியர்கள் (ஆட்சியாளர்கள் மற்றும் போர்வீரர்கள்), வைசியர்கள் (விவசாயிகள் மற்றும் வணிகர்கள்), மற்றும் சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) என்ற தொழில் வரிசையில் மட்டுமே மக்கள் தொழில் செய்ய வேண்டும் என்று எப்படி சாதி அமைப்பு ஊக்குவிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில் இந்த விஸ்வகர்மா திட்டமும் சாதி அமைப்பை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது???
மேலும் ‘முடிதிருத்தும் தொழில்’, ‘செருப்பு தைக்கும் தொழில்’, ‘சலவைத் தொழில்’ உட்பட மேலே குறிப்பிட்டுள்ள ’18 பாரம்பரிய தொழில்’ செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளும், மற்ற குழந்தைகளைப் போலவே ஒரு பொறியாளராகவோ, ஒரு ஆசியராகவோ, ஒரு மருத்துவராகவோ (அ) முதுகலை படிப்புகள் படித்த ஒரு முனைவராகவோ நல்ல கல்வி தரத்துடன் உயர்ந்து எப்போது இந்த குலத்தொழிலில் இருந்து மீண்டு வருகிறார்களோ அப்போது மட்டுமே இந்த சமுதாயம் ஒரு ஆரோக்கியமான சமுதாயமாக மாறும். மாறாக தொழில்முறைகளை பாரம்பரியமாக செய்ய சலுகைகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுவது எப்போதும் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்காது..!!
Links
https://pmvishwakarma.gov.in/FileHandling/ViewFile/MiscFiles%5CPM%20Vishwakarma-Guidelines.pdf
https://govtschemes.in/pm-vishwakarma-yojana#gsc.tab=0
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949411