PMAY வீடு திட்டம் : மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை !

மிழ்நாடு பட்ஜெட் 2024-25 அறிக்கையில் அறிவிக்கப்பட்ட “கலைஞரின் கனவு இல்லம்” ஆனது ஒன்றிய அரசின் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)” திட்டத்தின் பெயரை மாற்றி அறிவித்து உள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசி வந்தனர்.

மேலும் படிக்க :  ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு பெயரை மாற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன பொய் !

ஆனால், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு 1,68,000 ரூபாயும் மானியத் தொகையாக அளிக்கிறது. கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டத்தின்படி, வரும் நிதியாண்டில் 1 லட்சம் வீடுகள் 3.50 லட்சம் ரூபாய் செலவில் ஊரகப் பகுதிகளில் உருவாக்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் பெயரை மாற்றி அறிவிக்கவில்லை என்பதை விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இதுதொடர்பாக, மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ரூ2,70,000 மானியமாக அக்கவுண்டில் வருகிறது. இதை மத்திய அரசு கொடுக்கிறது. இதற்கு முன்பு இருந்த இந்திரா காந்தி யோஜனா என வேற வேற பெயரில் வீடு கட்டி கொடுத்தார்கள். அதில், 18 லட்சம் வீடுகள் மட்டும் கட்டி தரப்பட்டது. மேலும், மானியமும் குறைவு. 2014க்கு பிறகு பி.எம் ஆவாஸ் யோஜனா என சொன்ன பிறகு மானியத்தை உயர்த்தி இருக்கிறார்கள், 2,70,000ரூ. அவர் சொல்லும் 30% கணக்கு இல்லை. சில பேர் 2,80,000க்கு மேல் அவர்கள் செலவு செய்து கொள்கிறார்கள், சிலர் 2,80,000 மானிய தொகையில் செலவு செய்து கொள்கிறார்கள் எனப் பேசி இருக்கிறார்.

இதையடுத்து, அண்ணாமலையின் பேச்சு குறித்து திமுக ஆதரவு சேனல் வெளியிட்ட தவறான பதிவு நீக்கபட்டு இருப்பதாகவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிதி குறித்தும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதன் உண்மைத்தன்மை குறித்து விரிவாக பார்போம்.

உண்மை என்ன ? 

1.சன் நியூஸ் பதிவு 

அண்ணாமலை பதிவில், “திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை “எனக் கூறியுள்ளார்.

X post link | Archive link

ஆனால், சன் நியூஸ் தனது சேனலில் முதலில் வெளியிட்ட பதிவை நீக்கி விட்டு, ” அண்ணாமலை சொன்ன பொய்யும்.. புள்ளி விவரங்களுடன் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அம்பலப்படுத்திய உண்மையும்.. ” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசிய வீடியோவையும், அண்ணாமலை பேசிய வீடியோவையும் இணைத்து நேற்றே மீண்டும் பதிவிட்டு உள்ளனர்.

2. ரூ2,70,000 மானியம் :

அடுத்ததாக, ” PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ₹2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது ” என அண்ணாமலை கூறி இருக்கிறார்.

அண்ணாமலை பேட்டியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ரூ2,70,000 மானியமாக அக்கவுண்டில் வருகிறது எனக் கூறினார், ஆனால் பதிவில் வட்டி மானியம் ₹2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது என்றுள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு 1,68,000 ரூபாயும் மானியத் தொகையாக அளிக்கிறது என நமது கட்டுரையில் குறிப்பிட்டதும், அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கூறியதும் ஊரகப் பகுதியில் (PMAY-Gramin) வீடு கட்ட அளிக்கப்படும் மானியத்தொகை. அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது நகர்ப்புற(PMAY-Urban) பகுதியில் வீடு கட்ட அளிப்பது தொடர்பானது.

PMAY-Urban மானியம் குறித்து தேடுகையில், PMAY-Urban திட்டத்தின் கீழ் Affordable Housing in Partnership (AHP), Beneficiary Led Construction (BLC), Credit Linked Subsidy Scheme (CLSS), In-situ Slum Redevelopment (ISSR) எனும் பிரிவுகள் உள்ளன. இதில், AHPல் தமிழ்நாட்டில் நகரப்புறங்களில் வீடு கட்டும் பணிகளுக்கு செலவாகும் ரூ10 லட்சத்தில், ஒன்றிய அரசு ரூ1.5 லட்சமும், மாநில அரசு ரூ7 லட்சமும், பயனாளிகள் ரூ1.50 லட்சமும் அளிக்க வேண்டும் என்றுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் நிதியே அதிகம்.

இதில், Credit Linked Subsidy Scheme (CLSS) பிரிவில், பொருளாதரத்தில் பின்தங்கிய பிரிவினர்(EWS)/ நடுத்தர வருமானம் குழு(MIG) கீழ் தகுதிபெறும் நபர்கள் நகரப்புறங்களில் வீடு கட்ட வங்கிகளில் வாங்கும் கடனிற்கே அண்ணாமலை கூறிய வட்டி மானியம் ₹2.7 லட்சம் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது. 

3. PMAY-G நிதி : 

அடுத்ததாக, ” 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி. ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது ” என அண்ணாமலை கூறியுள்ளார்.

2023 டிசம்பர் 5ம் தேதி மக்களவையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்து இருக்கிறார். அப்பதிலில், PMAY-G திட்டம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டிற்கு இதுவரை ரூ.5321.64 கோடி ஒன்றிய அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசு தனது பங்கையும் சேர்த்து ரூ.7627.08 கோடியை இத்திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மாநில நோடல் கணக்கில்(SNA) ரூ.1247.27 கோடி செலவிடாமல் மீதமுள்ளது. இதன் காரணமாக ஒன்றிய அரசு மேலும் நிதியை ஒதுக்காமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகவலின்படி பார்கையில்,

மொத்த தொகையில் ஒன்றிய அரசின் பங்கு 5,321 கோடி என்பது 60% மட்டுமே. எனவே, அண்ணாமலை 80% ஒன்றிய அரசு செலவிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.

4. நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு குளறுபடி : 

அடுத்ததாக, “இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் பங்கு: ₹2004.39 கோடி மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி. தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டு ஒன்றிய அரசு அளித்த நிதி குறித்து தேடுகையில், 2024 பிப்ரவரி 6ம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதில் கிடைத்தது.

இதில், 2022-23ல் ஒன்றிய அரசு அளித்த நிதி ரூ.2,004.29 கோடி என்றும், செலவிடப்பட்ட தொகை ரூ.2290.47 கோடி என்றுள்ளது. இதை வைத்தே அண்ணாமலை தவறான உதாரணத்தை அளித்து இருக்கிறார். அதற்கு காரணம், 2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு அளித்த தொகை ரூ78.62 கோடி மட்டுமே, ஆனால் செலவிடப்பட்ட தொகை ரூ672.61 கோடி என்றுள்ளது. திட்டத்திற்காக கணக்கில் இருக்கும் நிதி முழுமையாக செலவிடாமல் மீதம் இருக்கும் போது, அந்த நிதியை அடுத்த ஆண்டு செலவிட்டு இருக்கின்றனர். இதற்கு முந்தைய பகுதியில், PMAY-G திட்டத்தில் மீதமுள்ள தொகை குறித்து தெரிவித்து இருந்தோம். எனவே, 2022-23ல் தமிழ்நாடு அரசு ரூ286.08 கோடியை மட்டுமே செலவிட்டதாகக் கூறுவது தவறான தகவல்.

மேலும் படிக்க : ‘தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்’, ‘காலை உணவுத் திட்டம்’ பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!

மேலும் படிக்க : ‘இன்னுயிர் காப்போம்’ , ‘குட் சமாரிட்டன்’ திட்டம்.. அண்ணாமலை சொல்லும் பொய்.. முழுமையான அலசல் !

இப்படி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்தும், தமிழ்நாடு திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருவதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள் : 

MINISTRY OF RURAL DEVELOPMENT – PMAY-G

Pradhan Mantri Awas Yojana (Urban)

CREDIT LINKED SUBSIDY SCHEME (CLSS)

Discourses on Affordable Housing in India and Best Practices under PMAY-U

42-RD-POLICY NOTE TAMIL 2021-2022

DEPARTMENT OF RURAL DEVELOPMENT 06/02/2024

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader