This article is from May 17, 2021

பிஎம் கேரில் தந்த வென்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என குமுறும் மாநிலங்கள், மறுக்கும் மத்திய அரசு !

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் , ‘பாஜக தலைமையிலான மத்திய அரசின் “பி.எம் கேர்ஸ்” நிதியை பயன்படுத்தி வாங்கிய வென்டிலேட்டர்கள் பழுதான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக மாநில அளவிலான விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி கடந்த மே 14 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவாக பதிவிட்டிருந்த சச்சின் சாவந்த் இது ஒரு மிகப்பெரிய மோசடி என குற்றம் சாட்டியுள்ளார்.

அவுரங்காபாத் மருத்துவ நிபுணர்களின் அறிக்கை முடிவு :

மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஜோதி CNC III எனும் பெயரில் ஏப்ரல் 12 ஆம் தேதி 25 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பழுதான நிலையில் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜோதி தர்மன் வென்டிலேட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வென்டிலேட்டர்களை சரி செய்ய இரண்டு நாட்கள் முயன்றனர், பின்னர் சில பாகங்கள் மாற்றப்பட வேண்டும் எனக் கூறி இது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தொடர்பு கொண்டனர்.

இரண்டு வென்டிலேட்டர்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை ஐ.சி.யு பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டன. ஆனால் அதனால் நோயாளிகளின் ஆக்சிஜன் சாச்சுரேசன் அளவு அதிகம் ஆகவே இல்லை.

இது குறித்து மீண்டும் அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டபோது “பாகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது”, உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்” எனும் பதில்களே வந்தன. இதனை அடுத்து அவுரங்காபாத் மருத்துவ கல்லூரி நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை முடிவுகளை வெளியிட்டது. அதில் இந்த வென்டிலேட்டர்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைக்கான சிகிச்சைப் பலனையும் அளிக்கவில்லை. தேவையான “டைடல் அளவை” இவை வழங்கவில்லை. எனவே இதனை ICU-வில் பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டு உள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டாக்டர். ஹர்ஷவர்தன் தலைமையிலான மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவான செய்தி அறிக்கை ஒன்றை மே 14 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன் செய்திச் சுருக்கம் பின்வருமாறு:

ஜோதி சி.என்.சி தயாரித்த வென்டிலேட்டர்கள் அவுரங்காபாத் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன. அவர்கள் “மேக் இன் இந்தியா” வின் கீழ் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களில் ஒருவர். அவர்களுக்கு “பி.எம் கேர்ஸ்” நிதியத்தின் கீழ் நிதி அளிக்கப்படவில்லை. இந்த வென்டிலேட்டர்கள் மாநிலங்களின் கோரிக்கையின்படியே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் ‘மேக் இன் இந்தியா’ வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்று சில ஊடக அறிக்கைகள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. அவை ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.

வென்டிலேட்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் ஹெல்ப்லைன் எண்களை கடந்த 2021 மே 9 ஆம் தேதியே மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. மேலும், எந்தவொரு தொழில்நுட்ப சிக்கல்களையும் உரிய நேரத்தில் தீர்க்கும் பொருட்டு, மாநிலங்கள் / யூ.டி.க்களின் சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரிகள், மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தொழில்நுட்ப குழுக்களுடன் உருவாக்கப்பட்ட மாநில வாரியான வாட்ஸ்அப் குழுக்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு மே 15 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தலைமையில் கோவிட் மற்றும் தடுப்பூசி தொடர்பான நிலைமை குறித்தான உயர்மட்டக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது அதில் “சில மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது குறித்த சில அறிக்கைகளை பிரதமர் தீவிரமாக கவனித்து, மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவது குறித்து உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்” எனும் செய்தியும் இடம்பெற்றுள்ளது.

இதை சுட்டிக்காட்டிய சச்சின் சாவந்த், “இந்த நிதி தணிக்கையை ஒரு வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும், ஆனால் தணிக்கை மட்டுமே போதுமானதாக இருக்காது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த உற்பத்தியாளர்கள் குஜராத் பாஜக தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டு அறிக்கையே உண்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். அதுவே பொது நலன் கருதி இருக்கும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செயலற்ற வென்டிலேட்டர்களை மத்திய அரசு வழங்குவதாக ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையில் நடந்த கோவிட் மறு ஆய்வுக் கூட்டத்தில் உதய்பூர் ரவீந்திரநாத் தாகூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லகான் போஸ்வால், “நாங்கள் பி.எம். கேர்ஸின் கீழ் 85 வென்டிலேட்டர்களைப் பெற்றுள்ளோம், எங்களைத் தவிர, மற்ற மருத்துவக் கல்லூரிகளின் கருத்து என்னவென்றால் அவை பயனுள்ளதாக இல்லை. எங்கள் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்களுக்கு பி.எம் கேர்ஸ் வென்டிலேட்டர்கள் மீது நம்பிக்கை இல்லை. வென்டிலேட்டர்கள் 1-2 மணி நேரம் இயங்கும், பின்னர் அவை வேலை செய்வதை நிறுத்துகின்றன” என கூறியுள்ளார்.

“பி.எம் கேர்ஸிடமிருந்து சுமார் 1,200 வென்டிலேட்டர்களைப் பெற்றோம். நாங்கள் அனைத்து வென்டிலேட்டர்களையும் பயன்படுத்த முயற்சித்த போது, அனைத்து வென்டிலேட்டர்களிலும் அழுத்தம் வீழ்ச்சி (Pressure dropping) சிக்கல் உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம், ”என்று அம்மாநில மருத்துவக் கல்விச் செயலாளர் வைபவ் கால்ரியா இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எம் கேர்ஸ் நிதி மூலம் பெறப்பட்ட 320 வென்டிலேட்டர்களில் குறைந்தது 237 குறைபாடுள்ளவை மற்றும் செயல்படாதவை என செய்திகள் வெளியாகின. இது குறித்து அம்மாநிலத்தின் நிபுணத்துவ ஆலோசகர் டாக்டர் ராஜ் பகதூர் தி இந்து வில் கூறியுள்ளதாவது, ” பாட்டியாலாவில் உள்ள மருத்துவக் கல்லூரி பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 98 வென்டிலேட்டர்களைப் பெற்றது. அவற்றில் 48 பழுதுபார்ப்புக்குப் பிறகு செயல்பட்டன என்றாலும், அவை முக்கியமான நேரங்களில் செயலற்று போகலாம் என்று மயக்க மருந்து நிபுணர்கள் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதால் அவை இன்னும் பயன்படுத்தப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களும் பி.எம் கேர்ஸிடமிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்களில் அழுத்தம் வீழ்ச்சி (Pressure dropping) சிக்கல் உள்ளது என்றும் சில இடங்களில் பயனற்ற நிலையில் அவை உள்ளன என்றும் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில்,  மத்திய பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சரான பாஜகவை சேர்ந்த விஸ்வாஸ் சரங் கூறுகையில், “ பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்கள் மோசமானவை என்று எந்த தகவலும் இல்லை. நாட்டில் தொடர்ந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த நாங்கள் பணியாற்றியுள்ளோம். மத்திய அரசு உயிர்களை காப்பாற்றும் வென்டிலேட்டர்களை மிகப்பெரிய எண்ணிக்கையில் வழங்கி உள்ளது . பிரதமர் மோடிக்கு நன்றி ” என தெரிவித்துள்ளார்.

Links :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718677

237-of-320-ventilators-received-by-punjab-through-pm-cares-fund-defective

rajasthan-raises-faulty-pm-cares-ventilators-with-centre

in-madhya-pradesh-chhattisgarh-pm-cares-ventilators-lie-unused

Please complete the required fields.




Back to top button
loader