பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம் (PMMVY) : 2010ல் தொடக்கம், 2017ல் பெயர் மாற்றம்.. கர்ப்பிணி பெண்களுக்கான நன்மைகள் என்ன ?

ன்றிய-மாநில அரசுகள் தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அவற்றில் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்று அழைக்கப்படுகின்ற பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம், கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதையும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்ப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த திட்டம் முதன் முதலில் “இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா (IGMSY)” என்ற பெயரில், அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் தமைமையிலான(UPA) ஆட்சியின் போது, 2010-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடியால் ‘பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம்’ என்ற பெயரில் மாற்றப்பட்டு, கடந்த ஜனவரி 2017 முதல் PMMVY என்ற பெயரில் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தை முழுமையாக கவனித்துக் கொள்கிறது. முதலில், IGMSY திட்டத்தின் மூலம் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் ரூ.4000 வழங்கப்பட்ட நிலையில், பின்னர் இது ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் அடுத்து வந்த PMMVY திட்டம், முதல் குழந்தைக்கு மட்டும் ஆரம்பத்தில் ரூ.5000 வழங்கியது, பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்குவதாக அறிவித்தது. 

இதே போன்று IGMSY திட்டத்தில், 100% ஒன்றிய அரசால் நிதியளிக்கப்பட்டது. ஆனால் PMMVY திட்டத்தில், செலவு-பகிர்வு விகிதங்கள் ஒன்றியம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் – 60:40 நிதி
 • NER மற்றும் இமயமலை சார்ந்த மாநிலங்கள் – 90:10 நிதி
 • சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் – ஒன்றிய அரசின் 100% நிதி

திட்டம் பற்றி :

மிஷன் சக்தியின் கீழ் இத்திட்டத்திற்காக, கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் (குடும்பத்தில் பிறந்த முதல் குழந்தைக்கு) அவர்களின் வங்கி/அஞ்சலகக் கணக்கிற்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.5000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் குடும்பங்களின் முதல் குழந்தைக்கு இது நேரடியாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் குழந்தை பிறப்புக்கு முந்தைய பாலினத் தேர்வைத் தடுப்பதற்காகவும், பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காகவும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் ஒரு குடும்பத்தின் முதல் குழந்தைக்கு (ஆண்/பெண்) ரூ.5000-ம், இரண்டாவது பெண் குழந்தையாக மட்டும் இருக்கும்பட்சத்தில் அதற்கு ரூ.6000-ம் வழங்கப்படுகிறது. 

திட்டம் எவ்வாறு செயல்படுகிறது ?

இந்தத் தொகை கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்பத்தின் இரண்டாவது காலம் என்று அழைக்கப்படுகின்ற Second Trimester வரை வழங்கப்படுவதில்லை. அதற்கு பின்பே பெண்களின் உடல்நலம் அதிகமாக பாதிப்படைவதால் Second Trimester-க்கு பின்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பிரசவத்திற்குப் பிறகு குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரையும் இந்த தொகை அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் மூன்று தவணைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ரூ.100 என சுமார் 50 நாட்களுக்கு பெண்களின் ஊதிய இழப்பிற்கான இழப்பீடாகவும் கருதப்படுகிறது.

 • கர்ப்பத்தை பதிவு செய்த பிறகு முதல் தவணையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
 • இரண்டாவது தவணையான ரூ.2000, ANC (Antenatal Checkup) என்று அழைக்கப்படுகின்ற குழந்தை பிறப்புக்கு முந்தைய சோதனை எடுத்தப் பிறகு வழங்கப்படுகிறது.
 • பிரசவத்திற்கு பின்பு, குழந்தைக்கு தடுப்பூசியின் முதல் தவணை முடிந்த பிறகு, மூன்றாவது தவணை ரூ.2000 வழங்கப்படுகிறது.
 • இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், பிரசவத்திற்குப் பிறகு, ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) என்ற திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம் ?

ஒன்றிய அல்லது மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) நிரந்தர வேலையில் இருப்பவர்கள் மற்றும் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் இதே போன்ற பலன்களை ஏற்கனவே பெறுபவர்களைத் தவிர மற்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை (ANC) மற்றும் பிரசவம் பார்க்கும் பெண்களும் கூட இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் விண்ணப்பிப்பதற்கு MCP (Mother-Child Protection Card) அட்டை என்று அழைக்கப்படுகின்ற தாய் குழந்தை பாதுகாப்பு அட்டை கட்டாயமாகத் தேவைப்படும்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும் ?

தாய் குழந்தை பாதுகாப்பு (MCP) அட்டையில் கடைசி மாதவிடாய் (Last Menstrual Period) தேதியிலிருந்து 150 நாட்களுக்குள் பயனாளி தனது கர்ப்பத்தை அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். 150 நாட்களுக்குள் LMP தேதியை வழங்கத் தவறினால், முதல் இரண்டு தவணைகளைப் பெற அவர்கள் தகுதி பெற மாட்டார்கள். இருப்பினும், அவர்கள் விண்ணப்பித்து மூன்றாவது தவணையை கூடப் பெறலாம்.

பிரசவத்திற்கு முன் விண்ணப்பிக்க தவறினால், குழந்தை பிறந்த நாளிலிருந்து 460 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். எனவே பயனாளிகள் தங்களுடைய கடைசி மாதவிடாய்(LMP) தேதியிலிருந்து 730 நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியும்.

கருச்சிதைவு (miscarriage) அல்லது குழந்தை இறப்பு (stillbirth) ஏற்பட்டால், எதிர்காலத்தில் மீண்டும் கர்ப்பம் ஆகும் போது, அவர்கள் புதிய பயனாளியாகவேக் கருதப்படுவர். முதல் தவணையைப் பெற்ற பிறகு பயனாளிக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர் அடுத்த கர்ப்பத்தில் 2 மற்றும் 3வது தவணைகளைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ?

மகப்பேறு பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள், அங்கன்வாடி மையத்திலோ (AWC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சுகாதார மையத்திலோ இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் PMMVY இணையதளத்திலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . படிவங்கள் 1A, 1B மற்றும் 1C ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் (LMP இன் 150 நாட்களுக்குள், ஒரு ANCக்குப் பிறகு மற்றும் பிரசவத்திற்குப் பிறகு என மூன்று முறை) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

என்ன ஆவணங்கள் தேவை?

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 1A, 1B, 1C (3 தவணைகளுக்கு)
  • MCP அட்டை
  • ஆதார் ஐடி / அடையாளச் சான்று நகல்
  • வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகத்தின் நகல் (Passbook)
  • பிரசவ பதிவு சான்றிதழின் நகல்

பயனாளிகளின் எண்ணிக்கை:

PMMVY திட்டத்தில் 2017-18 முதல் 2021-22 வரை மொத்தம் 2,57,60,007 பெண்கள் பயனடைந்துள்ளனர். குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மூலம் மொத்தம் ரூ.11,21,740 லட்சம் (11,217.40 கோடி) வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.8008 கோடி ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 14,99,516 பெண்களில் 11,47,397 பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,05,67,149 பயனாளிகளுக்கு சுமார் ரூ.13,766 கோடி வழங்கப்பட்டுள்ளதாக PMMVY இணையதளம் குறிப்பிடுகிறது.

 

ஆதாரங்கள்:

https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana

https://pmmvy.nic.in

https://wcd.delhi.gov.in/wcd/pradhan-mantri-matru-vandana-yojana-pmmvy#:~:text=%20case%20of%20miscarriage%2Fstill,the%20Anganwadi%20Centre%20(AWC )

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811392

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1846142

https://wcd.nic.in/sites/default/files/PMMVY%20Scheme%20Implemetation%20Guidelines%20._0.pdf

https://chhindwara.nic.in/en/scheme/indira-gandhi-maternity-support-scheme-igmsy/

https://wcd.nic.in/sites/default/files/IGMSYImpGuidelinesApr11.pdf

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader