This article is from Nov 24, 2020

மருத்துவருக்கு படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர்| விரிவான தகவல்!

மதுரையில் மருத்துவப்படிப்பு முடித்துவிட்டு ஆதரவில்லாமல் யாசகம் பெற்று சுற்றித்திரிந்த திருநங்கையின் மருத்துவர் கனவை காவல்துறையினர் நிறைவேற்றியதாக பெண் காவல் ஆய்வாளரும், திருநங்கை மருத்துவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்து இருப்பீர்கள். அதுகுறித்தப் பதிவை தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தனர்.

Facebook link | Archive link 

அதில், ”  திருநங்கையின் டாக்டர் கனவிற்கு ஒளியேற்றிய காவல் ஆய்வாளர். மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தபோது தான் MBBS முடித்து உள்ளதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் தனது நிலையை கூறி அழுதார்.

அவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

தற்போது மருத்துவராக திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார். கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வர தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் ” என இடம்பெற்று உள்ளன.

இதுகுறித்து மதுரை மாநகர் திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய போது, ” நாங்கள் ரோந்து பணிக்கு சென்ற போது, திருநங்கைகள் சிலர் சாலை கடைகளில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்களில் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து உள்ளதாகவும், திருநங்கையாக மாறி ஓராண்டு மேலாகியுள்ளது, அதற்கான சான்றிதழ்கள் வரவில்லை என்பதால் பணியாற்றி வந்த கிளினிக்கில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. தன்னுடைய வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை எனக் கூறினார்.

அவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் 2018-ம் ஆண்டில் மருத்துவம் முடித்து உள்ளார். அவரது மருத்துவப் படிப்பு சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்து, மருத்துவக் கல்லூரியிலும் விசாரித்தோம். இதையடுத்து, அவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என உறுதியாகியது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடிக்கும் வரை ஆணாகவே இருந்துள்ளார். அதன்பின் திருநங்கையாக மாறியுள்ளார். ஆணாக இருந்து மருத்துவம் பயின்றதால் மருத்துவ சான்றிதழிலும் அவ்வாறே பதிவாகி இருக்கிறது. திருநங்கை என உரிய சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அவரால் தொடர்ந்து பணிக்கு செல்ல முடியவில்லை.

மருத்துவ சான்றிதழில் திருநங்கை என திருத்தம் செய்ய மற்றும் அவருக்கு சான்றிதழ்களை பெற்று தர காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அவர் மருத்துவராக பணியபுரிய தயாரான நிலையில் இருப்பதாகத் ” தெரிவித்து இருந்தார்.

Please complete the required fields.




Back to top button
loader