முதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா ?

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் பெயலாளருமான கார்த்திகேய சிவசேனாபதி சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், திமுகவில் ” சுற்றுச்சூழல் அணி ” எனும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இந்திய நாட்டிலேயே முதன் முறையாகச் சுற்றுச்சூழலுக்காக ஒரு தனி அணியை உருவாக்கி நமக்கெல்லாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகக் காண்பித்துள்ளார் ” என கார்த்திகேய சிவசேனாபதி முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதற்கு உடனடியாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. திமுகவிற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் ” சுற்றுச்சூழல் பாசறை” எனும் அணியை உருவாக்கி பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ஆரம்பித்த திமுகவினர் முதன் முதலாக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியதாக வெளிப்படையாக பொய் பேசுகிறார்கள் எனக் குற்றம்சாட்டி மீம்ஸ், பதிவுகள் வைரலாகி வருகின்றன.
திமுகவில் இருக்கும் 18 துணை அமைப்புகளுடன் “சுற்றுச்சூழல் அணி” புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது. ஆனால், திமுகவிற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் “சுற்றுச்சூழல் பாசறை” மூலம் பனை விதை நடுவது, மரங்கள் நடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கான பனை விதைகளை நடுவதை முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள்.
எனினும், நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாக பசுமை தாயகம் எனும் அமைப்பு 1995-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் சுற்றுச்சூழலியல் மற்றும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ மற்றும் அரசு சார்பற்ற அமைப்பாக பசுமைத் தாயகம் விளங்குகிறது. இதன் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா உள்ளார்.
நடிகர் விஜய் திரைப்படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை நன்கு அறிந்து இருப்போம். 2003-ம் ஆண்டில் உலக புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக ” புகையில்லா சினிமா ” எனும் வாசகங்களுடன் பசுமை தாயகம் சார்பில் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய புகைப்படம் நமக்கு கிடைத்தது. 2002-ம் ஆண்டில் தமிழகத்தில் 1,000 குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களை தூர் வார பசுமைத் தாயகம் அமைப்பு திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தியும் கிடைத்துள்ளது.
பாமகவின் ” பசுமை தாயகம் ” அமைப்பை போல, 2016-ம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ” பசுமை தமிழகம் திட்டத்தை ” தொடங்கி இருந்தார். இதன்மூலம் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1,000 மரக்கன்றுகள் 234 தொகுதியில் நட வேண்டும் என அறிவித்ததாக விகடன் கட்டுரையில் வெளியாகி இருக்கிறது.
பாமகவின் ” பசுமை தாயகம் ” 1995-ம் ஆண்டு தொங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பாக இருந்தாலும், அது அக்கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாகும். நாம் தமிழர் கட்சியிலும் ” சுற்றுச்சூழல் பாசறை ” செயல்பட்டு வருகிறது. தற்போது திமுக சார்பில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அணியை இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டதாக கூறுவது தவறானது.
ஆதாரம் இணைப்புகள் :
is-vijayakanth-following-ramadoss
Rajinikanth-smoking-in-movies.
ஏரி, குளங்களை தூர் வாரப் போகிறார் ராமதாஸ் மகன்