This article is from Mar 14, 2019

உதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் !

சமூக வலைத்தளம் என்னும் இணைய சேவையின் அதிமுக்கிய பயன்பாடு, சமகாலத்தில் வாழும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிதாக, எத்தளத்தில் உள்ளோரையும் அணுக முடிந்தது மட்டுமல்ல, முன்பு அச்சு ஊடகங்கள் அரிதாக கிடைத்த இடங்களில் எல்லாம் இன்றைய சமூக வலைதளங்கள் மிக எளிதாக தமதாக்கிக் கொண்டன. விரல் நுனியில் படபடவென சில நிமிடங்களில் கொட்டும் அளவில்லா தகவல்கள் இதன் வீரியத்தின் மையப்புள்ளி.

நாம் அண்ணாந்து பார்த்த அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளாகட்டும், அறிவியல் தகவல்களாகட்டும், கற்க கடினமான பாடங்களாகட்டும் அத்தனையையும் மிக சர்வ சாதாரணமாக்கி நம்முன் தூக்கிப் போட்டதில் சமூக இணையத்தளங்கள் பங்கு அளப்பரியது. மிகப் பிரம்மாண்டமான உயரத்தில் இருந்தவர்களின் முகத்திரையைக் கிழித்தது மட்டுமல்லாமல், மிகச் சாதாரண சாமானியனை உச்சத்தில் தூக்கி வைப்பதும் சமூக இணையதளங்களில் ஒரே நாளில் சாத்தியம் என்பது தான் இதன் அசுர பாய்ச்சலுக்கு மற்றுமொரு முக்கிய காரணம்.

வாழ்வின் சதுரங்கத்தினை தாக்குப் பிடிக்க முடியாமல் தனிமையே துணை எனக் கொண்டவருக்கு முகமறியா நட்புகளையும், தனது திறமைகளை வெளிப்படுத்த களம் வேண்டி திரிந்தவர்களுக்கும் ஒரு மேடையையும் அமைத்துக் கொடுத்து அரவணைத்துக் கொண்டதெல்லாம் அதன் வியத்தகு செயல்கள். தமிழகத்தில் மாபெரும் புரட்சியையும் இதன் மூலம் முன்னெடுக்க முடிந்தது. அயல் நாடுகளில் ஆட்சி மாற்றத்தையும் இதன் மூலம் கொண்டு வர முடிந்தது. ஆனால் உலகின் அனைத்தும் இருமையில் தான் இயங்குகிறது என்ற விதிக்கு இதுவும் தப்பிவிடவில்லை.

எத்தனை நன்மைகளை உள்ளடக்கியதோ, அதே அளவுக்கான தீமைகளும் இதில் உண்டு. இது வெறும் இணைய பயன்பாடு தான் எனினும், இதைக் கையாளுபவர்கள் நாமும் நம்மை சுற்றியிருக்கும் நம்மைப் போன்ற மற்றும் சில மாறுபட்ட குணநலன் கொண்ட மனிதர்களும் தானே. ஒவ்வொருவரின் தேவைக்கும் எண்ணத்திற்கும் தகுந்தவாறு சமூக வலைதளங்கள் கையாளப்படுவதில் வியப்பேதும் இல்லை. இதன் தீமையின் பின்புலம் பணம், கணக்கின்றி கொட்டும் பணம் உபரியாக பெண்கள்.

ஆறுதலாக பேசி பணம் பறிப்பவர்கள், இணைய சேவை ஊடாக நமது வங்கி கணக்குகள் விபரமறிந்து அதைத் திருடுபவர்கள், இல்லாத துன்பங்களை பட்டியலிட்டு அனுதாபத்தின் மூலம் பணம் பறிப்பவர்கள், சின்ன மீன்கள் போட்டு பேராசையைத் தூண்டி பெரிய மீன்களைப் பிடிப்பவர்கள் என நீளும் பண விளையாட்டுக்கள் பலவற்றில் பெண்களும் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டோர் பிரிவில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர்.

சமூக வலைதளங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதிப்புகள் ஏற்படுகையில் அதன் விபரீதம் உணராமல் கிண்டலாக கடந்து போன தமிழ் சமூகம் இப்போது பொள்ளாச்சி சம்பவத்தில் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும் கட்டுப்பாடுகளுக்குப் பெயர் போன கொங்கு மண்டலத்தில் நடந்திருப்பது கொஞ்சம் அதிகமாகவே உலுக்கியிருக்கிறது.

பொதுமக்கள் பார்வையில், இந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இந்த பொண்ணுங்க ஏன் போய் முன்னப்பின்ன தெரியாதவங்களோட பேசுறாங்க, எத்தனையோ சினிமாவுல காட்டுராங்களே, படிக்கிற பொண்ணுங்களுக்கே அறிவில்லையே என்ற ரீதியில் இந்தியாவின் பாரம்பரியத்தை பிடித்துத் தொங்கும் கலாச்சார காவலர்கள் வழக்கம் போல அம்பை பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே திருப்பி எய்யத் துவங்கியிருக்கின்றனர். ஆம்பள அப்படித்தான் இருப்பான் என்று கிராமத்தில் அப்பத்தாக்கள் சொல்லிவிட்டு போவது போன்றது தான்.  இது குற்றவாளிகளை நியாயப்படுத்தும் மறைமுக செயலே அன்றி வேறில்லை.

அறிமுகமற்ற நபர்களை இத்தனை தூரம் நம்பி தன் வாழ்வைத் தொலைப்பது அறியாமையால் அல்லது ஆர்வக் கோளாறில் செய்யும் தவறு. ஆனால் நம்பி வந்த ஒரு பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் துரோகம் அல்லவா முன்னிறுத்தப்பட வேண்டும். துரோகத்தையும், அதைச் செய்தவர்களையும், குற்றம் செய்தவர்களை காப்பாற்ற முனைபவர்களையும் அல்லவா கேள்விகளால் கிழித்தெறிய வேண்டும். அதை விடுத்து இன்னும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட மமதை. குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதோடு இந்த விவகாரம் நிறைவு பெற்றுவிடாது. பாதிக்கப்பட்ட பெண்களின் மனவுளைச்சலை சரி செய்ய வேண்டும். அவர்களது அடையாளங்கள் வெளிப்படாத வகையில் யார் யார் பாதிக்கப்பட்டனர் என்பதை தகுந்த பெண் அதிகாரியை நியமித்து அறிய வேண்டும். அவர்கள் எதிர்காலத்தை தயக்கமோ, பயமோ இன்றி எதிர்கொள்ளும் திடனை அளிக்க வேண்டும். இதுவே முக்கிய கடமையாகும்.

ஆனாலும், இது எதிர்காலத்தில் நடக்காதென்று உறுதியாகச் சொல்ல இயலாது. இது போன்ற சம்பவங்களால், முதலில் சொல்வது இனி பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் இருக்காதே, கணக்கை முடக்கி வை என்ற அதட்டல் உருட்டல்களும் கண்காணிப்புகளும் தான். கொங்கு மண்டலம் பெண் குழந்தைகளுக்கான கட்டுப்பாட்டில் பெயர் போனது. வேறு சாதியில் காதலோ, திருமணமோ நடந்துவிடக் கூடாது என்பதற்காக, பெண் குழந்தைகளை படிக்க வைத்து விட்டு, வேலைக்கு அனுப்பாமல் அல்லது உள்ளூரில் மட்டுமே வேலைக்கு அனுப்புவோம் என்ற எண்ணப் போக்கே இங்கு அதிகம்.

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு வேலைக்குப் போக வேண்டும், உலகை அறிய வேண்டும், நிறைய பயணம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவியும் தனக்கான விருப்பங்களைக் கொட்டுவாள். அவர்களின் ஆசிரியையாக அவர்களது விருப்பங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் வேலைக்கு அனுப்ப விரும்பாத பெற்றோரிடம் நாம் ஏதும் விளக்க இயலாது, எந்த உத்திரவாதமும் கொடுக்க இயலாது. எவரின் வாழ்க்கைப் போக்கையும் நம்மால் தீர்மானிக்க இயலாது. ஆனால் எப்போதும், எங்கிருந்தாலும் நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் தான் இருக்கிறது என்ற ஒற்றை வாசகத்தை மட்டும் சொல்ல மறந்ததில்லை.

இந்த பயங்கரத்தால் இன்னும் கட்டுப்பாடுகள் இறுகவே செய்யும், இது அக்குழந்தைகளின் மன நலத்தை இன்னும் அதிகமாகவே பாதிக்கும். கிணற்றுத் தவளைகளாகவே வாழ்ந்து போகும் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரே நாளில் பேசிவிட்டு, விவாதிவிட்டு அடுத்த நாள் இன்னொரு விடயத்தைப் பற்றி பேச நகர்ந்துவிடுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. எனவே தான் இது போன்ற விடயங்களை எதிர்கொள்ளும் திடனை வளர்ப்பது பற்றி பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட வேண்டும். இதை தன்னார்வ பெண்கள் தொண்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்களோடு பேசி அவற்றின் மூலமாக இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

விழிப்புணர்வின் நோக்கம் தவறு நடக்ககூடாது  என்பது மட்டுமல்ல, தவறு நடந்துவிட்டாலும் அதை துணிந்து எதிர்கொள்ளும் பக்குவத்தையும் கொடுப்பதாக இருக்க வேண்டும். சமூக இணையதளங்களில் தனது புகைப்படமோ, வீடியோவோ வெளியாகிவிட்டால் அதற்காக முடங்காமல் அது நானில்லை என்று சொல்லி நகர்ந்து போகலாம், அல்லது நான் தான் அதற்கென்ன என்றும் எதிர்கொள்ளலாம். ஆனால் இரண்டாவது பதிலை எதிர்கொள்ளும் அளவிற்கு சமூகம் இன்னும் முற்போக்கு சிந்தனைகளை கொண்டிருக்கவில்லையாதலால், முதல் வகை எதிர்கொள்ளல் உத்தமம்.

தவறு செய்தவர்களே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இரண்டாம் நாள் பிணையில் வெளிவந்து உலவுகையில், பாதிக்கப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை. அறிமுகமற்ற நபர்களின் சந்திப்புகளை தவிருங்கள், சந்திக்க விரும்பினால் பொது இடங்களில் சந்திக்கலாம். நயமாக பேசினாலும் எவரையும் எளிதில் நம்பிவிடாமல் சற்று தள்ளியே பழகுங்கள். மனித உலகம் கொடூரமானது தான், அதற்காக அதை விடுத்து தனித்து வாழ்வதும் இயலாது என்பதால் கொடூரத்தை கையாளும் திறனைக் கற்றாலே போதும் இனிமையாக நடை போடலாம்.

சமூகமே கற்பு, கலாச்சாரம் போன்ற கட்டமைப்புகளை உடைத்து,  முற்போக்கு சிந்தனைகளை புகட்டி பெண்களுக்கு உதவ வேண்டும். உதவவில்லையாயினும் அவர்களை மேலும் உடைக்காமல் இருக்க வேண்டும். குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வாருங்கள் குழந்தைகளே. நீங்கள் எந்த துரோகமும் செய்துவிடவில்லை, உங்கள் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவும் இல்லை. தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்தல் இனிது தான்.

– சிந்தியா லிங்கசாமி, கல்லூரி உதவிப் பேராசிரியர்

Please complete the required fields.
Back to top button
loader