This article is from Feb 18, 2021

குற்றச்சாட்டை மாற்றி மொழிப்பெயர்த்து கூறிய நாராயணசாமி பலே விளக்கம் !

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த போது, முத்தியால்பேட்டை கிராமத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மக்களின் பேச்சை புதுச்சேரி முதல்வர் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து கூறி வந்தார்.

அப்போது பேசிய வயதான பெண் ஒருவர், கடலோர பகுதி இப்படியே தான் இருக்கிறது. எங்களின் வாழ்க்கைதரம் முன்னேறவே இல்லை. புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுப்பது இல்லை. அவரே(முதல்வர் நாராயணசாமி) எங்களை வந்து பார்த்தாரா ” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்(வீடியோவில் 35வது நிமிடத்தில் பார்க்கலாம்).

அதற்கு, ” புயல் தாக்கிய போது பாதிக்கப்பட்ட இடங்களை நான் வந்து பார்வையிட்டதை அவர் கூறுகிறார் ” என கூறாத ஒன்றை மொழிமாற்றம் செய்து கூறி இருந்தார் முதல்வர் நாராயணசாமி. இந்த வீடியோவே சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தங்கள் மீது மக்கள் கூறும் குற்றச்சாட்டை கூறாமல், அதை மாற்றி ராகுல் காந்திக்கு தவறாக மொழிப்பெயர்த்து கூறுகிறார் முதல்வர் என அரசியல் கட்சிகள் தரப்பிலும், நெட்டிசன்கள் தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.

Twitter link | Archive link 

சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என வீடியோ வைரலாகி வருவதால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரப்பில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பேசும் பெண்ணின் குற்றச்சாட்டு பொய் என மறுத்து, நிவர் புயல் பாதிப்பின் போது ராஜ் பவன் மற்றும் முத்தியால்பேட்டை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பார்வையிட்டதாக வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்கள்.

” அப்பெண் நிவர் வந்த பொழுது முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறிய பொழுது திரு.நாராயணசாமி அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் திரு.ராகுல்காந்தி அவர்களிடம் நான் வந்தேன் என்று மாற்று மொழியில் பதிலளித்தார் அவர் தவறாக மொழி பெயர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ” என ட்விட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, மக்களின் குற்றச்சாட்டை கூறாமல் அதற்கான பதிலை ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியதாக விளக்கம் அளித்து உள்ளனர். ஆனால், வயதான பெண்ணின் குற்றச்சாட்டை ராகுல்காந்தியிடம் கூறவில்லை, ராகுல்காந்தியிடம் கூறிய குற்றச்சாட்டிற்கான பதிலை கேள்வி கேட்ட மக்களிடம் கூறவில்லை. தன் மீதான குற்றச்சாட்டை கூற மனம் இல்லாமல் இருந்தாலும், அதற்கான பதிலை மக்களிடம் கூறி இருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

எதுவாயினும், ராகுல் காந்தியையே ஏமாற்றுவதாகவும், சமூக வலைதளம் பெருகிய இந்த காலத்திலும் நேரடியாக பொய் கூறுவதாகவும் முதல்வர் நாராயணசாமி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் தொடர்ந்து வைரல் செய்து வருகிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader