This article is from Jun 24, 2021

தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இடங்களில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம் !

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அரசால் வழங்கப்படும் 25% இடஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பிக்கும் தேதியையும், பிற விவரங்களையும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)ன் படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் படிக்க வேண்டி சிறுபான்மை (non-minority கல்வி நிறுவனங்களை) தவிர அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

இதன்படி மழலையர் (LKG) அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்க முடியும். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்) விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், HIV நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இச்சட்டத்தின் படி முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் இதற்கான சேர்க்கை பணிகள் தற்போது கொரோனா தொற்று காரணமாக தாமதமாக தொடங்கவுள்ளது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி 2021-22 கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை கொரோனா காரணத்தால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இணையம் வழியில் தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சேர்க்கைக்கான நேர அட்டவணையை வெளியிட்டு உள்ள இயக்குநரகம், மாணவர்கள் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை :

அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள எண்ணிக்கைகளின் விவரங்களை தனி பதிவேட்டில் பதிவுசெய்து பரிந்துரைக்கப்பட்ட மாவட்டக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

25% இடஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் எனும் விவரங்களை பள்ளியின் நோட்டீஸ் போர்ட்லையும், பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்திலும் 02/07/21 முதல் பதிவேற்றப்படும்.

05/07/21 முதல் 03/08/21 வரை இணையம் மூலம் மாணவ சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் .

09/08 ஆம் தேதி மாலை 5மணி முதல் விண்ணப்பித்தவர்களில் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் (காரணத்தோடு) பள்ளி அறிவிப்பு பலகையிலும் , பள்ளி கல்வித் துறையின் வலைத்தளத்திலும் தெரிவிக்கப்படும்.

10/08 முதல் தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 25% க்கும் மேலாக இருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள், ஒரு பிரிவுக்கு 5 இடங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பெயர்கள் விண்ணப்ப எண்களுடன் உடனடியாக பள்ளி அறிவிப்பு பலகையிலும் , பள்ளி கல்வித் துறையின் வலைத்தளத்திலும் பதிவு செய்யப்படும்.

மேலும், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான கல்வி அலுவலகங்களில் பெற்றோர்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பெற்றோர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான அத்தியாவசிய ஆவணங்கள் :

1. விண்ணப்பதாரரின் புகைப்படம் (150 px X 175 px)

2. பிறப்பு சான்றிதழ்

3. பெற்றோர் அல்லது கார்டியனின் ஆதார் / ரேஷன் கார்டு.

4. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் வருமான சான்றிதழ்.

5. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் சாதி சான்றிதழ்.

6. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் உள்ளோரின் முன்னுரிமை தகுதி சான்றிதழ்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.rte.tnschools.gov.in

Please complete the required fields.




Back to top button
loader