This article is from Nov 30, 2019

இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு, கொலையில் மத சாயம் பூச நினைப்பது ஏன் ?

தெலங்கானா மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவரின் மரணம் தொடர்பாக மதம் சார்ந்த தவறான செய்திகள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் நரசய்யாப்பள்ளியைச் சேர்ந்த 26 வயதான கால்நடை மருத்துவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வேலை விசயமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அப்பெண் தன்னுடைய தங்கைக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசிய போது, தன்னுடைய வாகனம் பஞ்சர் ஆகி இருப்பதாகவும், அருகில் இருப்பவர்களின் பார்வை சரி இல்லை, பயமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை.

அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். இறுதியாக, ரங்காரெட்டி மேம்பாலத்தின் கீழே இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தி நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இளம்பெண்ணின் கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முகமத் பாட்ஷா என்ற நபரும் அவரின் கூட்டாளிகளும் ஒன்று சேர்ந்து அப்பெண்ணிற்கு உதவுவது போன்று நடித்து அவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்று பின்னர் எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில், முகமத் பாட்ஷா என்ற குற்றவாளி முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த பெயர் என்பதால் ஹிந்து-முஸ்லீம் மதம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், குற்றவாளிகள் மற்ற மூவரின் பெயரை கூறாமல் முகமத் பாட்ஷா என்பவரின் பெயரையும், புகைப்படத்தை மட்டும் இந்திய அளவில் பரப்பி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இன்-சார்ஜ் அமித் மால்வியா என்பவரும் முதன்மை குற்றவாளி என முகமத் பாட்ஷா என்ற பெயரை மட்டுமே பதிவிட்டு இருந்தார். மீதமுள்ள குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிடவில்லை.

Twitter archived link 

வலதுசாரி ஆதரவு இணையதளமான swarajya-வில் வெளியான செய்திகளில் முக்கிய குற்றவாளி முகமத் பாட்ஷா எனக் குறிப்பிட்டு, மற்ற குற்றவாளிகளின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

உண்மை என்ன ? 

கொலை சம்பவம் குறித்து சைப்ராபாத் போலீஸ் கமிஷ்னர் வி.சி.சஜ்ஜனர் கூறுகையில், ” லாரி ஓட்டுனர்கள் முகமத் ஆரீப் (26) , சென்னகேசவுலு (20) மற்றும் கிளீனர்கள் சிவா , நவீன் நான்கு பேரும் , சம்ஷா பாத்  டோல் கேட் பகுதியில் இளம்பெண் ஸ்கூட்டியை பார்க்கிங் செய்யும் பொழுதே பாலியல் வன்பணர்வு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். 9 மணி அளவில் தனது ஸ்கூட்டியை எடுக்க வந்த அப்பெண் டயர் பஞ்சராகி இருப்பதை கண்டுள்ளார். போலீஸ் விசாரணையில், அதை செய்ததும் குற்றவாளிகள்தான் எனக் கூறியுள்ளனர்.

ஆரீப் உதவதாகக் கூறி பெண்ணிடம் பேசியுள்ளார். வண்டியின் டயரை சரி செய்வதாகக் கூறி சிவா வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். அந்நேரத்தில், மற்ற மூவரும் அப்பெண்ணை அருகில் இருந்த இடத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். திரும்பி வந்த சிவாவும் வன்புணர்வு செய்துள்ளார். தன்னை காப்பாற்றும் படி அப்பெண் கதறிய பொழுது ஆரீப் அப்பெண்ணை மூச்சுத்திணறச் செய்துக் கொன்றுள்ளனர். அதன்பின் உடலை லாரியில் கொண்டு சென்று எரித்து உள்ளனர் ” எனத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

தெலங்கானாவில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்த சம்பவத்தில் எந்த மத ரீதியான வன்மமும் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படவில்லை. ஆனால், குற்றவாளிகளில் ஒருவரான முகமத் என்பவரின் பெயரையும், புகைப்படத்தையும் மட்டுமே பதிவிட்டு மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்தவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டுமே தவிர, ஒரு பெண்ணின் இறப்பில் ஒருபக்கமாக மத சாயத்தை பூசி மத வன்மத்தை உருவாக்க முயல்வதை கண்டிக்க வார்த்தைகளே இல்லை.

Proof links :

4 held for gang-rape, murder of Hyderabad’s Nirbhaya

Prime Suspect Mohammed Pasha Arrested In The Brutal Murder Of Dr Priyanka Reddy

Please complete the required fields.




Back to top button
loader