This article is from May 24, 2021

PSBB பள்ளியின் சாதிய மனநிலை, பாலியல் குற்றச்சாட்டு – கொதிக்கும் இணையம்

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், பயின்ற, பயிலும் மாணவர்கள் அங்கு உள்ள ஆசிரியர்கள் பலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அந்த பள்ளி சாதியை போற்றுகின்ற, பெண்களை ஏளனம் செய்கின்ற பிற்போக்கு வாதம் மிகுந்த பள்ளியாக உள்ளது என பல மாணவிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பலரும் அப்பள்ளியின் உரிமையாளராக கருதப்படும் நடிகர் ஒய்.ஜி மஹேந்திரனிடமும், அவரது மகள் மதுவந்தியிடமும் புகார்களை தெரிவித்து வந்த நிலையில் , ஒய்.ஜி.மஹேந்திரன், “தானோ, தன் மகளோ அந்த பள்ளியை நடத்தவில்லை, என் தம்பியும், அவரது மனைவியும் தான் அந்த பள்ளியை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளியை நடத்துபவர் யார் ?

நடிகர் ஒய்.ஜி.மஹேந்திரனின் தாயார் ஆன ஒய்.ஜி.பி என்று அழைக்கப்படும் ராஜலட்சுமி பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் 1958 ஆம் ஆண்டு பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் ஒய்.ஜி.மஹேந்திரனின் தம்பி ஒய்.ஜி.ராஜேந்திரனின் மனைவி சுதா ராஜேந்திரன் நிர்வாக தலைமையில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒய்.ஜி.ராஜேந்திரன் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார்.

ஒய்.ஜி.மஹேந்திரன் இப்பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அப்பள்ளியின் நிர்வாக பொறுப்பில் பெரும்பாலானோர் அவரது குடும்ப உறுப்பினர்களே.

தொடரும் பாலியல் ரீதியான புகார்கள்..

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்கள் அனைத்தையும் தொகுத்து பகிர்ந்துள்ளார்.

இரவு நேரங்களில் வீடியோ கால் பேச அழைப்பது, சினிமா பார்க்க மாணவிகளை அழைப்பது, உடைகளின் அடிப்படையில் தரக்குறைவாக பேசுவது, பல சமயங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது, ஒரு முறை இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புக்குள் நுழைந்தது, பள்ளி வாட்ஸாப் குரூப்பில் ஆபாச பட வீடியோ லிங்குகளை அனுப்பியது என அவர் மீது பல புகார்ககளை மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பல முறை நிர்வாகத்திடம் கடிதம் எழுதி உள்ளோம், ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்தது இல்லை என பதிவுகளில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

அந்த பதிவுகளில் கே.கே நகர் கிளை மட்டும் அல்லாமல் அப்பள்ளியின் நுங்கம்பாக்கம் கிளை, கெருகம்பாக்கம் கிளை மற்றும் அவர்களது இடைநிலை பள்ளிகளிலும் இதுபோன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் பகிரப்பட்டு வருகிறது.

பகிர்வுகளை எழுதும் பெயர் வெளியிட விரும்பாத மாணவ மாணவிகள் “அப்பள்ளி சாதி வெறி பிடித்தவர்களால் நிரப்பப்பட்டது. பார்ப்பனீய சித்தாந்தத்தை முன்வைக்கக்கூடிய பள்ளி, இளம் மாணவிகளை அவர்களின் உடை தேர்வு உட்பட அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து சித்தரவதை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

கெருகம்பாக்கம் கிளையில் உள்ள பவானி எனும் ஆசிரியர் பற்றி ஒரு மாணவி பதிவு செய்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அவரின் பதிவு,

“எனக்கு உடல்நிலை சரியில்லாமல், விடுப்பு எடுக்க வேண்டியிருந்தபோது அவர் என்னை கீழ்த்தரமாக பேசினார். மற்றறொரு மாணவரை தண்டனை எனும் பெயரில் வகுப்பறையில் உடைகளை கழட்ட வைத்தார்.”

PSBB இடைநிலை பள்ளி ஒன்றில் பணியாற்றிய சமஸ்கிருத ஆசிரியர் குறித்து, “அவர் மிக கேவலமாக பேசுவார், மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவார், மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வார், பெண்களின் மாற்று அறைக்குள் தற்செயலாக நுழைந்தது போல் உள்ளே வருவார். எல்லோருக்கும் இது பற்றி தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏனெனில் அவர் YGP ஆல் நியமிக்கப்பட்டவர் ” எனக் கூறப்பட்டு இருக்கிறது.

இப்பகிர்வுகள் அதிர்ச்சி ஏற்படுத்தவே, திமுகவின் எம்.பி கனிமொழி, பாடகி சின்மயி உட்பட பலரும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோலப்பனை இடைநீக்கம் செய்தது PSBB பள்ளி. புகார்கள் தொடர்பாக கே.கே நகர் பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேச பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்ட போது, அழைப்பு இணைக்கப்படவில்லை, துண்டித்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பதில் அளிக்கும் பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.

முந்தைய வழக்கு :

கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படிக்கும் ரஞ்சன் எனும் மாணவன் கே.கே நகர் கிளையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார், இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அப்பள்ளியின் இயக்குனர் ஷீலா ராஜேந்திரனை கைது செய்தனர். எனினும், அன்றே அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Links :

School correspondent booked in swimming accident case

YGMadhuvanthi tweet

students-alumni-of-chennai-school-allege-sexual-harassment-by-class-12-teacher

Please complete the required fields.
Back to top button
loader