பொதுத்துறை நிறுவனங்களின் நியமன இயக்குநர்கள் பெரும்பாலானோர் பாஜகவினர் -ஆர்டிஐ தகவல்

இந்தியாவில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் (CPSE) இருக்கும் நியமன இயக்குநர்களில்(Independent Directors) பாதிக்கும் மேற்பட்டோர் பாஜக அரசுடன் பிணைப்பில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

Advertisement

தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் நிதிக் கொள்கை முடிவுகளில் ‘தாராளமயமாக்கல்’ எனும் சித்தாந்தத்தை முன்னிறுத்தி இயங்கிவருகிறது. அரசின் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் அரசின் நிதி சுமையை குறைத்து வருமானத்தை பெருக்க “ தாராளமயமாக்கப்பட்ட சந்தையை” பாஜக அரசால் முன்னிறுத்தப்படுகிறது.

2019 கணக்கெடுப்பு முடிவுகளின்படி, இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில போதுமான செயலாற்றல் இன்றி வருவாய் ஈட்டாத நிலையில் முடங்கிய நிலையில் உள்ளன. (உதாரணம்: பிஎஸ்என்எல்) இருப்பினும் முறையாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில் கோர் (core) துறையில் இயங்காத , சரியான வருவாய் ஈட்டாத பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கப்போவதாக தெரிவித்திருந்தார். இதில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவையும் அடங்கும். இதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட 12 பொதுத்துறை நிறுவனங்களே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாக அமையும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் படி , அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள், வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் ஆகியவை மூல துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் இருப்பு குறைந்தபட்சமாக இருக்கும் , மீதமுள்ள மூல பொதுத்துறை நிறுவனங்கள் பிற நிறுவனங்களோடு இணைக்கப்படும் அல்லது மானிய நிறுவனங்களாக மாற்றப்படும் அல்லது தனியார்மயம் ஆக்கப்படும். மூல துறைகளில் இல்லாத நிறுவனங்கள் ஒன்று தனியார்மயம் ஆக்கப்படும் இல்லையென்றால் மூடப்படும் என்பதே கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை கண்டித்து தான் தற்போது வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சுயாதீன இயக்குநர்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020ல் அவர்களது எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்த குறைப்புக்கு முக்கிய காரணம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன வாரியங்களில் இயக்குநர்களை நியமிக்கப்படாமல் இருப்பது தான் என நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் இந்தியா லிமிடெட் (ஐஐஏஎஸ்) அறிக்கை குறிப்பிடுகிறது.

நிறுவனங்கள் சட்டம் 2013 படி “பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு பொது நிறுவனத்திலும் மொத்த இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காவது நியமன இயக்குநர்கள் வகிக்க வேண்டும்.” எனக் கூறுகிறது

நியமன இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள் ஆவர். அவர்கள் நியமிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும், அவருக்கும் எந்த நேரடி தொடர்பும் இருக்காது. அவர்கள் நிறுவனங்களின் அன்றாட செயல்பாட்டில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் கொள்கை வகுத்தல் மற்றும் திட்டமிடல் சார்ந்து அவர்கள் முடிவெடுப்பார்கள். இப்படி அவர்கள் நியமிக்கப்படுவதற்கு காரணம் சார்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதற்காகவே.

Advertisement

இந்நிலையில் இந்தியாவில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் (CPSE) இருக்கும் நியமன இயக்குநர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜக அரசுடன் தொடர்பு  உள்ளவர்களாக இருக்கின்றனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் பெறப்பட்ட RTI தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல் மற்றும் 146 ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் (பிஎஸ்யு) மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, 98 பிஎஸ்யு களில் மொத்தம் 172 நியமன இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர் , அவற்றில் 67 பிஎஸ்யு களில் பணியாற்றும் 86 நபர்களாவது ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் பாஜகவின் செயலாளராக , மாநில துணைத் தலைவராக, முன்னாள் எம்.எல்.ஏவாக, முன்னாள் செய்தித் தொடர்பாளராக என பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளனர்.

“பொதுத்துறை நிறுவனங்களின் நியமன இயக்குநர்கள்- வளரும்
சவால்கள்” எனும் தலைப்பில் முன்னாள் கெயில் (GAIL) நிறுவன தலைவரும் , தற்போதைய பொது நிறுவன மாநாடுகளின் (SCOPE) பொது இயக்குனர் டாக்டர். யு. டி. சவ்பே நியமன இயக்குநர்களின் நியமனம் குறித்து பேசியதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “போதுமான நியமன இயக்குநர்களை நியமிப்பது சவாலாக உள்ளது. இதில் இருக்கும் முக்கிய சவால்கள் நியமனம் செயல்முறையை குறைப்பது , வலுவான மற்றும் வெளிப்படையான முறையை நிறுவுவது ஆகியனவே. நாம் உயர் தொழில்முறையை அடைவதற்கு ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை நிறுவ வேண்டும். தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிதி மற்றும் மேலாண்மை வல்லுநர்கள் போன்ற தகுதிமிக்கவர்களை நாம் கண்டறிய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

மக்களுக்காக இயங்கும் ஒரு அரசாங்கம் மக்களின் வரி பணத்தை மட்டுமே வருவாய் ஈட்டும் வழியாக பார்க்காமல் பல்வேறு தொழில்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு , அரசு வேலைவாய்ப்புகளை பெருக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றவை அரசு பொது நிறுவனங்கள். அவற்றை தனியார்மயம் ஆக்குவதும், அரசியல் காரணத்திற்காக தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களையே பணியில் நியமிப்பதும் பொது துறை நிறுவனங்களின் தரம் குறைவதற்கு வழிவகுக்கும்.

Links :

how-independent-are-independent-directors-of-psus-half-from-bjp

india-business/300-psus-may-shrink-to-barely-two-dozen

number-of-independent-directors-on-decline-psus-mainly-responsible-for-reduction-report

upa-govt-gujarat-hc-public-sector-bank-directoris

https://www.primedatabase.com/article/2017/12.Article-U.D.Choubey.pdf

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button