புதிய தலைமுறை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் பேசிய தவறான தகவல்களின் தொகுப்பு !

புதிய தலைமுறை கடந்த (அக்டோபர்) 27ம் தேதி வட்டமேசை விவாத நிகழ்ச்சியை வேலூரில் நடத்தியது. ‘2024 மக்களவைத் தேர்தல்.. மகளிர் வாக்கு யாருக்கு?’ என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி (காங்கிரஸ்), முன்னாள் மேயர் கார்த்தியாயினி (பாஜக), டாக்டர். யாழினி (திமுக), அப்சரா ரெட்டி (அதிமுக), அரசியல் விமர்சகர் டாக்டர் ஷர்மிளா மற்றும் பாத்திமா ஃபர்கானா (நாம் தமிழர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இவ்விவாத நிகழ்ச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, திருநங்கை நல வாரியம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றின் உண்மை குறித்து இங்குக் காண்போம். 

1.பிரதமர் வீடு கட்டும் திட்டம் : 

திமுக-வை சேர்ந்த டாக்டர்.யாழினி பேசுகையில் (18:21) “மோடி வீடு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 13.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ஒதுக்கப்படுகிறது. அதில் ஒன்றிய அரசு 1.5 லட்சம் அளிக்கிறது. மாநில அரசு 8.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அளிக்கிறது. ஆனால், வீட்டுக்கு பேரு மோடி வீடு” எனக் கூறினார். 

அவர் கூறிய பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) குறித்துத் தேடியதில், இத்திட்டத்திற்கு அரசு ரூ.2.75 லட்சம் மானியமாக அளிப்பதை அறிய முடிந்தது. மேலும், இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் வீடு கட்ட அரசு அளிக்கும் மொத்த தொகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறையே 60:40 என்கிற விகிதத்தில் பங்களிப்பு செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் இது 90:10 என்ற விகிதத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு என்பது 40 சதவீதம்.

2.பெண் காவல் நிலையம் : 

அரசியல் விமர்சகர் டாக்டர்.ஷர்மிளா பேசுகையில் (30:40), பெண்களுக்கான காவல் நிலையத்தை 1973ம் ஆண்டு கலைஞர் அமைத்ததாகக் கூறினார். ஆனால், 1973-74 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் முதல் மகளிர் காவலர்களை கலைஞர் பணி அமர்த்தினார். மகளிருக்கென தனிக் காவல் நிலையம் 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதுதான் தொடங்கப்பட்டது. 

இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசையில்’ வெளியான செய்தியில், ‘தமிழ்நாட்டில் முதன் முறையாக திமுக ஆட்சியின்போது 1974ல் தான் காவல் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி பெண் துணை ஆய்வாளர், தலைமைக் காவலர், 20 பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் மகளிர் காவல் படைகள் உருவாக்கப்பட்டன” எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், “1992ல் அதிமுக ஆட்சியில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

3.தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு : 

டாக்டர்.ஷர்மிளா பேசுகையில் (30:54), “உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைக் கலைஞர் அவர்கள் 1996ம் ஆண்டு வழங்கினார். அதனை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 50 சதவீதமாக நடைமுறைப் படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் “உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்” என அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா பேசியுள்ளார் (43:24).

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து 2016, ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது திமுக அரசுதான் என்று  கீதாஜீவன் கூறிய போது, அதிமுகவினர் குறுக்கிட்டு பெண்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அதிமுக அரசுதான் கொண்டு வந்தது என்று கூறியுள்ளனர். 

இந்த விவாதம் நடைபெற்ற போதே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் தந்து தேர்தலை நடத்தியது திமுக ஆட்சிதான்’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கையில், “1996ம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலின் முக்கிய அம்சமே பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

2016 பிப்ரவரி மாதம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தி சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் “அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மூன்றில் ஒரு பங்கு எனப் பெண்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் 50 சதவீதம் ஆக உயர்த்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், 20.2.2016 அன்று இதற்கான சட்டத் திருத்த சட்ட முன்வடிவு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் கொண்டு வரப்பட்டது” என்றுள்ளது. 

இவற்றில் இருந்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் கலைஞர் முதல்வராக இருந்த 1996லும், 50 சதவீதம் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2016லும் கொண்டு வரப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

4.திருநங்கைகள் நல வாரியம் : 

அப்சரா பேசுகையில் (42:41), “திருநங்கை என்ற பெயர் வைத்தது கலைஞர் எனக் கூறினார்கள். பெயர் வைத்தால் மட்டும் போதாது. திருநங்கை வாரியத்தை அமைத்தது அதிமுக” எனக் கூறியுள்ளார்.

இது முற்றிலும் தவறான தகவல், 2008ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலும் ‘இந்த ஆணையம் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது’ என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அப்சரா இது குறித்துக் கூறும்போதே நெறியாளர் குறுக்கிட்டு ‘நீங்கள் சொல்லுவது தவறான தகவல்’ எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

5.மகளிர் சுய உதவிக் குழு : 

அதிமுக சார்பாக அப்சரா பேசும் போது (16.30), ‘மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிறார். டாக்டர் ஷர்மிளா பேசுகையில் (31:06), ‘மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தவர் டாக்டர்.கலைஞர்’ எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ‘தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’ இணையதளத்தில் சில தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாகத் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் திட்டம் என்ற பெயரில் மகளிரின் முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்தியது” என்றுள்ளது.

இத்திட்டம் தொடர்பாகப் புதுக்கோட்டை அரசு இணையதளத்திலும் மேற்கண்ட இதே தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், 1991-1992 காலக்கட்டத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் இருந்து இத்திட்டம் முதன் முதலில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது தருமபுரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 

Link : 

Implementation of the rural housing scheme of Pradhan Mantri Awaas Yojana — Gramin to achieve Housing for All by 2022.

சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: முதல் மகளிர் காவல் நிலையம்

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader