சென்னை புளியந்தோப்பு குடியிருப்பில் 864 வீடுகளுக்கு 1.50 லட்சம் கட்டணுமா ? களநிலவரம் என்ன ?

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதா கிருஷ்ணன் நகர் கூவம் நதிக்கரையோர வீடுகள் அகற்றப்பட்ட போது எழுந்த விவாதங்களில் சென்னை புளியந்தோப்பின் கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் அங்குள்ளவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டுமானால் தலா 1.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற நிலை உள்ளதாக குறிப்பிட்டும் சிலர் தங்கள் பதிவுகளில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அரும்பாக்கம் மக்களின் நிலை குறித்து அறிய பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி தங்கள் குழுவுடன் கே.பி.பார்க் சென்ற போது ஏ முதல் ஈ பிளாக் வரை உள்ள மக்களின் நிலை குறித்தும், வீடுகளுக்கு 1.50 லட்சம் பணம் கேட்பதாகவும் தன் முகநூல் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருந்தார்.

Facebook link 

இதுகுறித்து, வளர்மதி அவர்களிடம் பேசுகையில், 1980-களில்எம்.ஜி.ஆர் ஆட்சியில் அங்கு நான்கு அடுக்கு ஹவுசிங் யூனிட் கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். அது புறம்போக்கு நிலம் அல்ல. கேசவப்பிள்ளை என்பவர் தலித் மக்களுக்காக தானமாக கொடுத்த நிலம். 2016-ல் அதிமுக அரசு புதிய வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை காலி செய்ய சொல்லியுள்ளனர். அப்படி காலி செய்தவர்களுக்கு அதே பகுதியில் தகர கூடாரங்களை அமைத்து கொடுத்துள்ளனர், ஆனால் 864 குடும்பங்களுக்கும் அல்ல. வீடுகளை இடிக்கும் போதும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். வீடுகள் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு 2021 பிப்ரவரியில் தான் வீடுகளை மக்களுக்காக அளிக்க டோக்கன் அளிக்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் 1.50 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள்.

குடிசை மாற்று வாரியம் பணம் வாங்கவே கூடாது, அது நடைமுறையில் இல்லை. ஆனால், அரசு ஆணையே வெளியிட்டு இருக்கிறார்கள். அங்குள்ள அனைவரும் தலித் மக்கள், துப்புரவு தொழிலாளர்களாக உள்ளனர். 1.50 லட்சம் கட்ட முடியாது எனக் கூறி கட்டிய வீடுகளுக்கு மார்ச் மாதம் குடி போய்விட்டனர். ஆனால், லிப்ட் மற்றும் தண்ணீர் வசதியை அரசு தரப்பில் துண்டித்து விட்டனர். சமீபத்தில் தான் தெரு விளகு க்கு அமைத்துள்ளனர். இவர்கள் உள்ள 9 அடுக்கு மாடியில் லிப்ட் வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் தண்ணீரை வெளியே வாங்கி வீடுகளுக்கு சுமந்து செல்கின்றனர். எம்.எல்.ஏ உள்பட அனைத்து கட்சிக்காரர்களுக்கும் இது தெரியும். அனைவரும் அதை மூடி மறைக்கின்றனர். இதுதொடர்பாக மனு ஒன்றை எழுதி அங்குள்ள மக்களிடம் கையெழுத்து வாங்கி வந்துள்ளோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் வீடுகள் அகற்றிய போது களத்தில் இருந்த மாநகராட்சி செயற் பொறியாளரிடம் பேசுகையில், ” தற்போது கூவம் ஆற்றின் பகுதியில் அகற்றப்பட்ட குடும்பங்களுக்கு குடிசை மாற்று குடியிருப்பில் அளிக்கப்படும் வீடுகளுக்கு இதுபோன்று எந்த பணமும் செலுத்த வேண்டியது இல்லை, அரசே பணம் செலுத்துகிறது. அவர்களுக்கு தண்ணீர் மற்றும் லிப்ட் வசதி இருக்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

2008-ல் புளியந்தோப்பு குடியிருப்பு வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் தொடங்கியது. அவற்றில் முதலில் அங்குள்ள 672 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. மீதமுள்ள 864 வீடுகள் 2016-ல் இடிக்கப்பட்டன. இந்த வீடுகளுக்கே தலா 1.5 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள்.

அதற்கு காரணம், 864 குடும்பங்களுக்கான வீடுகள் கட்டும் பணி பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்றிய அரசு 1.50 லட்சமும், மாநில அரசு 7 லட்சமும், பயனாளி பங்களிப்பு தொகையாக 1.50  லட்சமும் செலுத்த வேண்டும். இதுகுறித்து, வீடுகளுக்காக காத்திருந்த மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பின்னர், வீடுகளை பெறும் பயனாளிகள் தலா 1.50 லட்சம் செலுத்த வேண்டும் என்கிற முந்தைய ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஜூலையில் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட தமிழக ஊரக தொழில்முறை மற்றும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன், ” பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளர் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது அடிப்படைவிதி. பயனாளர் பங்களிப்புத் தொகையை பெறாவிட்டால் ஒன்றிய அரசு தன் பங்களிப்பை நிறுத்திவிடும். ஆகையால், பிற குடியிருப்பு திட்டங்களும் பாதிக்கப்படும். அதேநேரத்தில், இந்த மக்கள் அனைவராலும் 1.50 லட்சம் ரூபாயை உடனடியாக செலுத்த முடியாது. ஆகையால், தவணை முறையில் வங்கிக்கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் பேசியிருந்தேன். பெரும்பாலானோர் இந்த தீர்வை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆடி மாதத்திற்குள் ஒதுக்கப்பட்ட வீடுகளில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள்” என ஆனந்த விகடனுக்கு தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக வீடுகளுக்கு காத்திருக்கும் கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” பிப்ரவரி மாதம் டோக்கன் கொடுக்கையில் 1.50 லட்சம் பணம் கட்ட சொல்லி கூறினர். வீடுகளை இடித்த போது 8 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்த பணத்தில் தான் தகர கொட்டகை அமைத்து கொடுத்தனர். தற்போதும் அங்கு தான் இருக்கிறோம். தண்ணீர் மற்றும் லிப்ட் வசதி இருந்து இருந்தால் எப்போவோ அங்கு போய் இருப்போம். அந்த 1.50 லட்சத்திற்கு அரசு தரப்பில் லோன் போட்டு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால், அதிலும் உங்களிடம் இருக்கும் பணத்தை (10 ஆயிரம் முதல் 30 ஆயிரம்) வைத்து முதல் தொகையை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை வங்கியில் லோன் வாங்கி தருகிறோம் கட்டுங்கள் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். கொரோனா காலத்தில் வருமானம் இன்றிய சூழ்நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டும் எங்களைப் போன்றவர்களால் எப்படி பணம் செலுத்த முடியும் ” எனக் கூறி இருந்தார்.

மேலும் படிக்க : அரும்பாக்கத்தில் வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டதா ?| பாதிக்கப்பட்டவர், செயற் பொறியாளரின் தகவல் !

கூவம் நதிக்கரை பகுதியில் அகற்றப்படும் வீடுகளுக்கு புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு(கே.பி.பார்க்) பகுதியில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் பெறுவதில்லை என மாநகராட்சி செயற் பொறியாளர் உறுதியாக தெரிவித்து இருக்கிறார். புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பில் முன்பே இருந்த 864 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வந்ததால் பயனாளர் பங்களிப்பாக தலா 1.50 லட்சம் கேட்கப்பட்டு இருக்கிறது. அனைவராலும் அந்த தொகையை செலுத்த முடியாது என்பதால் வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்து இருக்கிறார். எனினும், முதல் தொகையை செலுத்த சொல்லுவதாகவும், தண்ணீர் வசதி, லிப்ட் வசதி துண்டிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ளவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அங்குள்ள மக்களின் தேவை அரசு கவனத்திற்கு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Please complete the required fields.




Back to top button