நியூட்டன், பிதாகரஸ் தேற்றம் எல்லாம் பொய், வேதம் மட்டுமே மெய்.. சர்ச்சையான கர்நாடகா கல்விக் குழு அறிக்கை !

2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதும் பல மாநிலங்களில் இக்கல்விக் கொள்கை அமலுக்கு வந்து விட்டது. பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசு சார்பில் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பணிக்குழு அரசிடம் சமர்ப்பித்த நிலை அறிக்கை வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் மூன்றாம் மொழியாக சமஸ்கிருதத்தை கற்பிக்க கர்நாடகா அரசு குழு முன்மொழிந்துள்ளது. மேலும், மனுஸ்மிருதி மற்றும் பூத-சாங்க்யா, கடபயாதி சாங்க்யா போன்ற பண்டைய எண் முறைகளை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதைத் தவிர, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் சேர்ப்பதற்கு அக்குழு பரிந்துரைந்த முன்மொழிகளில் ஒன்று, ” பிதாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுதல் போன்ற போலிச் செய்திகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றன ” என்ற கேள்விகளைக் கேட்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் என்சிஇஆர்டி இணையதளத்தில் அதன் நிலை ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நியூட்டனின் புவியீர்ப்பு விசை மற்றும் பிதாகரஸ் தேற்றம் ஆகியவை ” போலிச் செய்தி ” எனக் குறிப்பிட்டது குறித்து கர்நாடகா மாநிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான பணிக்குழுவின் தலைவர் மதன் கோபால் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கூறுகையில், ” இது குழுவின் விளக்கம். புவியீர்ப்பு மற்றும் பிதாகரஸ் ஆகியவை வேதக் கணிதத்தில் வேர்களைக் கொண்டுள்ளன. இது ஒரு இந்திய மைய அணுகுமுறை. இதைப் பற்றி பல தகவல்கள் கூகுளில் உள்ளன. உதாரணமாக, பெளதயன் வேத நூல்களில் பிதாகரஸ் தேற்றத்தை வகுத்ததாக நம்பப்படுகிறது. இது ஒரு கண்ணோட்டம். அதை நீங்கள் ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் இருக்கலாம் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

” பிதாகரஸ் தேற்றம் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட கோட்பாடு அல்ல. அனைத்து சர்வதேச மன்றங்களிலும் பல கோட்பாடுகள் விவாதிக்கப்படுகின்றன. இவையனைத்தும் இந்தியாவில் உள்ள வேத நூல்களில் தோன்றியவை. என்னைப் பொறுத்தவரையில் கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக்கொள்வது சரியல்ல. விவாதங்கள் இருக்கட்டும், அறிவியல் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் இருக்கட்டும் ” என இந்தியா டுடேவிற்கு மதன் கோபால் தெரிவித்து இருக்கிறார்.

” இந்த அறிக்கை பிரபல ஐஐடி பேராசிரியரின் தலைமையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. வாரணாசியில் உள்ள ஐஐடியின் ராமநாதன் என்பவர் இக்குழுவிற்கு தலைமை தாங்கி உள்ளார் “.

சமஸ்கிருதம் மூன்றாம் மொழி : 

” ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ள நாட்டில், பிராந்திய மொழி, ஆங்கிலம் மற்றும் பாரத மொழி(முன்னுரிமை சமஸ்கிருதம்) என குறைந்தது மூன்று மொழிகளாவது கற்பிக்கப்பட வேண்டும். சமஸ்கிருதம் என்பது பெரும்பான்மையான இந்திய அறிவைக் கொண்டிருக்கும் மொழி ” என நிலை ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

கிரேக்கக் கணிதத்தின் பகுதிகளை குறைக்க வேண்டும் : 

” கிரேக்க கணிதம் பற்றியப் பிரிவுகள் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக, பிதாகரஸ், ஹெரான் போன்ற கிரேக்க கணிதவியலாளர்களின் சித்தரிப்புகள் குறைக்க வேண்டும் ” என முன்மொழியப்பட்டு உள்ளது.

மனுஸ்மிருதி இலக்கியங்கள் : 

ஸ்மிருதி இலக்கியங்களில் பலவும் ” அவற்றின் நெறிமுறைகள் மற்றும் உள்ளடக்கம் பற்றிய முழுமையற்ற, மோசமான புரிதலின் காரணமாக இருட்டடிப்பு அல்லது தடைசெய்யப்பட்டது. உதாரணமாக மனுஸ்மிருதியில் பொது மற்றும் சமூக நலன் பற்றிய உயரிய இலட்சியங்கள் இருந்தாலும் கூட அதன் பெயரே நமது சமூகத்தின் ஒரு பிரிவினரிடம் இருந்து தேவையற்ற புலம்பலை ஏற்படுத்தும் அளவிற்கு சர்ச்சைக்குரியதாகிவிட்டது ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை கூறுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையின்(NEP) கீழ் பாடத்திட்டத்தில், கர்நாடகா அரசால் முன்மொழிந்து சமர்ப்பிக்கப்பட்ட சில பரிந்துரைகள் கொண்ட அறிக்கை குறித்து கர்நாடகாவில் உள்ள கல்வியாளர்களே கவலை தெரிவித்து உள்ளனர்.

Links : 

Pythagoras’ theorem has Vedic roots: Karnataka panel

Please complete the required fields.
Back to top button
loader