உலகின் முதல் விமானி இராவணன் | ஆய்வு மேற்கொள்ள போவதாக இலங்கை அறிவிப்பு !

இராமாயணத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெற்ற இராவணன் இலங்கையை ஆட்சி செய்யும் ஓர் அரசனாக குறிப்பிடப்பட்டு இருப்பார். இராவணன் சீதையை கவர்ந்து செல்லும் பொழுது புஷ்பக விமானத்தில் பறப்பது போன்று கதைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
பழமையான இதிகாச கதையாக இருந்தாலும் பழங்காலத்தில் விமானம் எப்படி இருந்திக்கக்கூடும் எனக் கேள்வி எழாமல் இல்லை. அதன் தொடர்ச்சியாக, உலகின் முதல் விமானியே இராவணன் தான் என இலங்கை தரப்பில் வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
5,000 ஆண்டுகளுக்கு முன்பாக பறந்து சென்ற இராவணன் தான் உலகின் முதல் விமானி என இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் பழங்காலத்தில் பறந்து சென்ற முறை குறித்து ஆய்வையும் மேற்கொள்ள இருப்பதாக செய்திகளில் வெளியாகியது.
” இராவணன் முன்னோடி என்பதையும், அவர் பறந்து செல்ல விமானத்தை பயன்படுத்தியது குறித்து மறுக்க முடியாத உண்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. அரசர் இராவணன் ஓர் மேதையாவர். முதன் முதலில் பறந்த மனிதர் அவரே. அவர் ஒரு விமானி ஆவார். இது கட்டுக்கதை அல்ல. இதுவே உண்மை. இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் அதனை நிரூபிப்போம் ” என கொழும்புவின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி-யின் துணை தலைவர் சாஷி தனடுங்கே நியூஸ் 18 செய்திக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இது தொடர்பான கூட்டமானது இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் பண்டாரநாயக்கா அமைந்துள்ள கட்டுநாயக்காவில் நடைபெற்றது. இதில், சிவில் ஏவியேஷன் வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமீப காலமாக இலங்கை அரசு இராவணன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் ஜூன் 2019-ல் இலங்கை முதன் முதலில் வடிவமைத்த ” ராவணா 1 ” என்ற செயற்கைக்கோளை புவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இராவணன் மிகப்பெரிய அறிஞர் என இலங்கையில் பலரும் நம்பி வருகின்றனர்.
Proof :
Sri Lanka successfully launches its first satellite ‘Ravana-1’ into orbit