ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக விசாரிக்க பிரான்சில் தனி நீதிபதி நியமனம் !

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையிலான ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதபதி ஒருவரை நியமனம் செய்துள்ளது பிரெஞ்சு அரசாங்கம்.
பிரான்ஸ் பாதுகாப்பு குழுவான டசால்ட் தயாரித்த 36 ரஃபேல் ஜெட்களை வாங்குவதற்காக 2016 ஆம் ஆண்டில் பிரான்சும் இந்தியாவும் சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி தற்போதுவரை 22 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டிற்குள் அனைத்து விமானங்களும் இந்தியா வந்தடையும் டசால்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட் கடந்த ஏப்ரல் 2021ல், இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் மூலமாக பல கோடிகள் கைமாறியுள்ளது என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், இந்த வெளிப்பாடுகள் குறித்து இந்தியா அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும் , எனினும் விசாரிக்காமல் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா (Sherpa) பாரீஸ் தீர்ப்பாயத்தில் “ஊழல்”, “செல்வாக்கை தவறான முறையில் பயன்படுத்துதல்”, “பணமோசடி”, “ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருத்தல்” மற்றும் ஒப்பந்தத்தை சுற்றியுள்ள தேவையற்ற வரி தள்ளுபடிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பொது வழக்கு சேவை (பி.என்.எஃப்) எனப்படும் குற்ற விசாரணை பிரிவு , ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையை அதிகாரப்பூர்வமாக ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது பதவியில் இருந்த முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் நடவடிக்கைகள் மற்றும் அப்போது பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரின் நடவடிக்கைகளைச் சுற்றியுள்ள கேள்விகளை குற்றவியல் விசாரணை ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் டசால்ட்டின் இந்திய கூட்டு நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இரு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பை பற்றியும் விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
மீடியா பார்ட் வெளியிட்ட ஆவணங்களின் படி, டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் முதன் முதலாக மே 26, 2015ல் தங்களது கூட்டு செயல்பாட்டுக்கான அடிப்படை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
ரஃபேல் ஜெட் வாங்குவதில், இந்தியா மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் அசல் ஒப்பந்தம் 36 விமானங்கள் வாங்குவது இல்லை, 126 விமானங்களை டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதாகவும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியாவின் சார்பில் டசால்ட் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனும் நிறுவனமாகும்.
பின்னர், திடீரென்று 126 விமானங்கள் 36 ஆக குறைக்கப்பட்டு , இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் டிபென்ஸ் ஒப்பந்தம் ஆனது. 36 விமானங்கள் என பிரதமர் மோடி செய்தி தெரிவித்த 15 நாட்களுக்கு முன்பு தான் டசால்ட் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதன் முதலாக மே 26, 2015ல் தங்களது கூட்டு செயல்பாட்டுக்கான அடிப்படை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
இப்படி ஆரம்பம் முதலே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளன நிலையில் அனைத்தையும் விசாரிக்க, நீதித்துறை விசாரணைக்கு தலைமை தாங்க ஒரு பிரான்ஸ் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
விரிவாக படிக்க : ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை மட்டும் இந்திய அரசு பரிந்துரை செய்ததா ?
இந்திய அரசாங்கம் தற்போது வரை இதுகுறித்து மௌனம் காக்கும் நிலையில்
போர் விமானங்களை வாங்குவதில் “ஊழல்” பற்றிய உண்மையை கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை அமைத்திட உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
Links :
congress-urges-pm-to-order-joint-parliamentary-panel-probe-into-rafale-deal
setback-for-modi-macron-as-french-judge-opens-criminal-investigation-into-rafale-deal-with-india
french-judge-tasked-with-investigating-rafale-fighter-jet-sale-to-india