தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைத்தள பிரிவின் மாநில தலைவராக சி.டி.ஆர் நிர்மல் குமார் 2022, செப்டம்பர் 18ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய பதிவு தற்போது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. 

அவர் அப்புகைப்படத்தினை முதலில் பதிவிடுகையில், அதிர்ச்சியில் முழிப்பது போன்ற இமோஜ் ஒன்றினை குறிப்பிட்டு டிவீட் செய்தார். அதில் ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பெண்ணின் கையையும் தனது கையையும் ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசுவது போல அப்புகைப்படம் இருந்தது. சிறிது நேரத்தில் அந்த டிவிட்டினை நீக்கிவிட்டார். 

நிர்மல் குமார் தான் நீக்கிய அதே புகைப்படத்தினை மீண்டும் டிவீட் செய்தார். இம்முறை இமோஜிக்கு பதிலாக சில வாசகங்களை எழுதிப் பதிவிட்டார். அந்த டிவீட்டில் “குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த பப்புவை (ராகுல் காந்தி) கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும், இப்பதிவையும் சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். மேலும், இப்புகைப்படம் குறித்து சிலர் ஒற்றுமை யாத்திரைக்கு நடுவே இப்படி நடைபெறுவதாக மிக மோசமான வார்த்தைகளில் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தியுடன் புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் ?

பாஜகவைச் சார்ந்த நிர்மல் குமார் பதிவிட்ட புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் அமர்ந்திருக்கும் அந்த பெண், ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தியின் மகள் மிரயா வத்ரா.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாள் நிகழ்வினை 2015, ஆகஸ்ட் 20ம் தேதி டெல்லியில் அனுசரிக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், அந்த நிகழ்வில் பிரியங்கா காந்தியின் மகள் மிரயா வத்ராவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது ராகுல் காந்தியும் மிரயா வத்ராவும் அருகருகில் அமர்ந்து பேசக்கூடிய புகைப்படமே இது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாள் நிகழ்வு குறித்தும், அதில் மிரயா வத்ரா கலந்து கொண்டது குறித்தும் செய்திகளும் வெளியாகியுள்ளன. 

நிர்மல் குமார் டிவீட் குறித்து முகமது ஜூபர் :

இதற்கிடையில், ஆல்ட் நியூஸ் இணைய தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபர் பாஜகவின் நிர்மல் குமார் பதிவிட்ட ராகுல் காந்தியின் புகைப்படம் குறித்து டிவீட் செய்துள்ளார். அதில் “ராகுல் காந்தி தனது சகோதரி மகளிடம் அன்பாகப் பேசக்கூடிய பழைய புகைப்படத்தினை குழந்தைகளிடம் வழிகிறார் என்ற அர்த்தத்தில் பாஜக தகவல் தொழில் நுட்ப மாநில தலைவர் பதிவிட்டுள்ளார்” என டிவீட் செய்து இருந்தார். 

முகமது ஜூபரின் பதிவிற்கு நிர்மால் குமார் தனது டிவிட்டரில், “பொய்யான பிரச்சாரத்தினை பரப்பாதீர்கள்” என தன்னுடைய தமிழ் பதிவின் ஆங்கில அர்த்தம் இதுவே எனப் பதிலளித்து இருந்தார். ஆனால், பொய்யான பிரச்சாரமாக இருப்பின் டிவீட்டினை நீக்கியது ஏன் என சமூக வலைத்தளங்களில் நிர்மல் குமாருக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தியின் யாத்திரையும் அவதூறுகளும் 

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை 2022, செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இந்த யாத்திரையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல

மேலும் படிக்க :செய்தியாளர் சந்திப்பில் போஸ்டரை திருப்ப சொன்னால் தானே திரும்பினாரா ராகுல் காந்தி ?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கியதிலிருந்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பொய்யான தகவல்களை பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர்.

நேரு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருக்கிறார், சோனியா காந்தி இருக்கும் ஒரு புகைப்படத்தில் பின்பக்க அலமாரியில் கிறிஸ்தவ மதமாக மாற்றுவது எப்படி என்பதான புத்தகம் இருக்கிறது, ராகுல் காந்தியிடம் போஸ்டரின் பின் பக்கத்தைக் காண்பிக்கப் பத்திரிக்கையாளர்கள் கேட்டால் தானே திரும்பி தனது முதுகு பக்கத்தைக் காண்பித்தார் எனப் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளின் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

மேலும் படிக்க : ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன் என பாஜகவினர் பரப்பும் தவறான படங்கள் !

சமீபத்தில் நிர்மல் குமார் பல பொய்யான தகவல்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதில் சிலவற்றை நீக்கவும் செய்துள்ளார். ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் சமையல் பட்டர் பாக்கெட்டில் ஹலால் சான்றிதழ் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மதவெறிக்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவது சரியா? என டிவீட்  செய்திருந்தார். அது பொய்யான தகவல் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Please complete the required fields.




Back to top button
loader