ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்.. குடிநீர், மின்சாரம் கட் !

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 47 நாட்களுக்கு மேலாக கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அக்கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகரான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் விதிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க அரசிற்கு வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் யூடர்னை தொடர்பு கொண்டு பேசுகையில், ” ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்குவதாக 2013-ல் தமிழக அரசு அறிவித்தது. நான் பிடிஎஸ் டென்டல் 2019 பேட்ஜ். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் ரூ2.5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழக கட்டணக் கமிட்டி கட்டணத்தை முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததால், எங்களுக்கு 3.5 லட்சம் கட்டணம்(டியூசன் ஃபீஸ் மட்டும்) வாங்குகிறார்கள். மேலும், இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு 2.5 லட்சம் கட்டியதால் மீதமுள்ள 1 லட்சத்தையும் சேர்த்து கட்ட சொல்கிறார்கள். மற்ற கட்டணத்தை சேர்த்தால் 5 லட்சம் மேல் செல்கிறது.
அதிக கட்டணம் விதிப்பதற்கு எதிராக மருத்துப் படிப்பு மாணவர்கள் கடந்த 47 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இத்தனை நாள் போராட்டத்தில் முதல்வருக்கு மனு அனுப்பும் வகையில் 3 முறை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி உள்ளோம். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகேயும் போராட்டம் நடத்தினோம். அரசு தரப்பில் சரியான பதிலும், நடவடிக்கையும் இல்லை.
கல்லூரிப் போராட்டத்தில் மாணவ, மாணவியர் 300 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இதில், மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். போராட்டத்தை நிறுத்துவதற்காக அனைவருக்கும் காலவரையற்ற விடுமுறையை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது, விடுதியை காலி செய்யுமாறு கூறி விட்டனர். நாங்கள் போராட்டத்தை நிறுத்தாத காரணத்தினால் மின்சாரம், குடிநீர் வழங்குவதை நிறுத்தி உள்ளனர். விடுதி மாணவர்களுக்கு உணவும் நிறுத்தப்பட்டது. நாங்களே வெளியில் இருந்து உணவு ஏற்பாடு செய்து சாப்பிட்டு வருகிறோம். விடுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் நுழைவாயிலையும் கல்லூரி நிர்வாகம் பூட்டி விட்டனர் ” எனத் தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டம் குறித்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் டீன் அவர்களை தொடர்பு கொண்ட போது, பதில் அளிக்க மறுத்து கல்லூரியின் ரெஜிஸ்டரரைத் தொடர்பு கொள்ளுமாறு நம்மிடம் கூறினார்.
இது தொடர்பாக ஆர்.எம்.எம்.சி ரெஜிஸ்டரர் ஞானதேவன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து நடத்தும் போராட்டம், எங்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்வித சச்சரவும் இல்லை. மேலும் தொடர்ந்து கல்லூரிக்கு வராமல் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதால் தான் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு நிர்வாகம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து உள்ளது ” எனக் கூறினார்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் காலி வாளியுடன் அமர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜா முத்தையா கல்லூரியின் கட்டணத்தை மற்ற அரசு கல்லூரியில் இருப்பதை போல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.