This article is from Apr 24, 2019

ராஜராஜச் சோழனின் சமாதியை கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு!

ராஜராஜ சோழன் எனும் பெயரை கேட்டாலே தமிழ் மக்களுக்கு இனம்புரியாத மகிழ்வு ஏற்படுவது இயல்பு. தஞ்சை ஆண்ட சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் கடல் கடந்து இலங்கை, லட்சத்தீவு, மாலத்தீவு என பல நாடுகளை வென்று தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்த வரலாறுகள் இங்குண்டு.  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிபி 1010-ல் தஞ்சை பெருவுடையார் கோயிலை ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார். அதன்பின் கிபி 1012-ல் தன் பட்டத்தை துறந்து தன் மகனான ராஜேந்திர சோழனிற்கு முடி சூட்டினார்.

அத்தகைய பெருமையுடைய மாமன்னரின் இறுதி காலம் பற்றி யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. கிபி 1014 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழன் தன் கடைசி காலத்தை பழையாறையில் வாழ்ந்து அங்கு இறந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. சோழப் பேரரசை பழிவாங்க நினைத்த மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் பழையாறை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளை அழித்ததாகவும் கூறப்படுகிறது. அதில் எஞ்சிய பகுதியான உடையாளூரில் உள்ள பால்குளத்தம்மன் கோயிலில் சோழர் காலத்தில் நிறுவிய கல்வெட்டு ஒன்று உள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். உடையாளூரில் உள்ள ஓட்டத் தோப்பு பகுதியில் சிவலிங்கத்தின் மேல் பகுதி மட்டும் தெரியும் படி புதையுண்டு இருக்கும் இடத்தில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக இன்றும் தமிழகத்தின் பெருவாரியான மக்கள் நம்புகின்றன.

பால்குளத்தம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் ராஜராஜசோழனின் மணிமண்டபம் இருந்த இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கல்வெட்டு தூண்கள் என்றும், தற்போது ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாக கூறும் இடத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று இருந்து உள்ளதாக mythanjavur தளத்தில் கல்வெட்டு குறித்த விளக்கத்தை அளித்து இருந்தனர்.

சமூக வலைதளங்கள், மேடை பேச்சுகள் என எங்கும் ராஜராஜ சோழனின் சமாதி பற்றிய கருத்துகள் இல்லாமல் இருக்காது. புகழ்மிக்க மன்னரின் சமாதியை அரசும், தொல்லியல் துறையும் கண்டு கொள்ளவில்லை. அங்கு மணிமண்டபம் எழுப்பி தக்க மரியாதை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், ” கடல் கடந்து பல நாடுகளை வென்ற ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக கூறப்படும் உடையாளூரில் தொல்லியல் துறை இதுவரை எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. எனவே தொல்லியல் துறை சார்பாக ஆய்வு செய்து, அரசு சார்பில் மணிமண்டபமும், இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் உயரமான சிலையும் அமைக்க வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.

இந்த மனுவை ஏப்ரல் 11 -ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ” உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா என்பது நவீன கருவிகள் மூலம் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் ” என உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை குழு உடையாளூரில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன கருவிகள் கொண்டு அகழ்வாராய்ச்சி பணிகளை துவங்கி உள்ளனர். இதில், ஹெலிகேமில்(குட்டி விமானம்) இல் நவீன கேமராக்கள் பொருத்தி அப்பகுதியின் மேற்பரப்பு, நிலத்தடியில் உள்ள நீரோட்டம் மற்றும்  பழமையான கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள் ஆகியவற்றை படம் பிடித்து, அவற்றின் கோணத்தையும் கணினி மூலம் பதிவு செய்து வருகின்றனர். கள ஆய்வுகள் முழுமையாக முடியும் பொழுது அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளார்.

ராஜராஜ சோழரின் சமாதி இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அங்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கும். ஆய்வு அறிக்கை சமாதி இருப்பதை உறுதி செய்யும் வரை காத்திருப்போம்.

Please complete the required fields.
Back to top button
loader