This article is from Jul 16, 2021

துணை ஆட்சியர் ஆகிய தூய்மைப் பணியாளர் ! சாதி கொடுமைகளை துடைத்தெறிய கல்வி தான் வழி என கருத்து !

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த ஆஷா கேந்திரா என்ற பெண் சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் (RAS) தேர்ச்சி பெற்றுள்ளார் . விரைவில் அவருக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆஷா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடம் இருந்து பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே பரீட்சை எழுதிவிட்ட ஆஷா கொரோனா நோய் தோற்றால் தேர்வு முடிவுகளுக்கு தாமதம் ஏற்பட்டதால் காத்திருந்துள்ளார். இதற்கு இடையில் தன் குடும்ப செலவுகளை சமாளிக்கும் பொருட்டு அவர் தூய்மை பணியாளர் வேலையை ஏற்றுக் கொண்டு செய்து வந்துள்ளார்.

தன் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் சமூகத்தில் தான் எதிர்கொண்ட சாதிரீதியான பாகுபாடுகளும், செய்யக்கூடிய வேலையை குறிப்பிட்டும், ஒரு ஆண் துணை இல்லாத சுதந்திரமான பெண்ணாக இருப்பதை குறிப்பிட்டும் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் தான், தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய உத்வேகத்தை தந்தது எனக்கூறிய ஆஷா, ஐ.ஏ.எஸ் ஆவதே தன் கனவு என்றும், ஆனால் வயது காரணமாக தேர்வுகளில் பங்குகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் நவ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,” இந்த சமூகம் என்மீது காட்டிய பாகுபாடு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது, இவை அனைத்தும் நான் வாழ்க்கையில் ஏதோவொன்றாக மாற வேண்டும், வேறுபாடுகளோடு பார்க்கும் இந்த சமுதாயத்திற்கு பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும் என தோன்றியது. இது தற்போது கல்வியின் மூலமே சாத்தியமானது.. நான் செய்துகொண்டிருந்த வேலையோடு RAS தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டேன். 2018ல் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற போது இரவு பகல் பார்க்காமல் கடைசி கட்ட தேர்வுக்கு தயாரானேன்” என தெரிவித்துள்ளார்.

2018 அக்டோபரில் இருந்து தேர்வு முடிவுக்காக காத்திருந்த ஆஷா முடிவு வரும் வரை ஜோத்பூர் தெருக்களை சுத்தம் செய்துகொண்டே இருந்துள்ளார்.

ஆஷாவின் இந்த கடின உழைப்பும் அதற்கு கிடைத்த வெற்றியும் பெண்கள் முதல் கொண்டு அனைத்து மக்களுக்கும் ஒரு உத்வேகம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது ஒரு புறம் இருக்க , செய்யும் தொழில் ரீதியாகவும், பிறப்பின் அடிப்படையில் பிரிவினையையும், வெறுப்பு உணர்வையும், சமூகம் ஏற்படுத்தும் சாதிய வன்மத்தையும், அது தடுக்கும் பெண் சுதந்திரத்தையும் உடைத்தெறிய மக்களுக்கு இருக்கும் ஒரே கருவி கல்வி தான் என நிரூபித்ததே ஆஷாவின் உண்மையான வெற்றி.

Links : 

jodhpur-sweeper-is-now-an-ras-officer

from-cleaning-jodhpur-streets-to-collectorate-woman-sweeper-clears-rajasthan-administrative-service-examination

Please complete the required fields.




Back to top button
loader