ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை : உண்மை என்ன ?

துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ” 1971-ல் சேலத்தில் பெரியார் அவர்கள் , ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொன்டு போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால் திமுக அரசுக்கு பெரிய கேட்ட பெயர் வந்தது. இதனால் துக்ளக் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். எனினும் பிளாக்கில் துக்ளக் பத்திரிகை விற்பனையாகியது ” என பேசினார்.

Advertisement

துக்ளக்யில் வெளியான செய்தி குறித்து ரஜினிகாந்த் பேசிய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்து, செய்திகளில் விவாதமாகியது. மேலும், இதற்கு எதிராக திராவிட கழகத்தினர் கண்டனங்கள் தெரிவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ” 1971-ல் நடந்த நிகழ்வு குறித்து நான் பேசியது போல் எதுவும் நடக்கவில்லை எனக் கூறுகிறார்கள். இது இந்து குழுமத்தின் அவுட்லுக் இதழில் 2017-ல் வெளியாகி இருக்கிறது. அதில், அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை உருவபொம்மைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி செருப்பு மாலை அணிவித்து அடித்ததாக கூறப்பட்டுள்ளது. இல்லாத ஒன்றை நான் கூறவில்லை. மற்றவர்கள் பேசியையும், பத்திரிகையில் வெளியானதையும்தான் நான் பேசியுள்ளேன் ” எனக் கூறினார். இதையடுத்தும், பிரச்சனை இன்னும் பெரிதாகியது.

முதலில், இதற்கான பதிலை பெரியரிடம் இருந்தே ஆரம்பிப்போம். இந்த விவகாரம் பெரிதாகிய போது நக்கீரன் தரப்பில் ” ரஜினிக்கு அன்றே பதில் சொன்ன பெரியார் ” என்ற தலைப்பில் ஊர்வலம் குறித்து பெரியார் பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Youtube link

” சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மகாநாடு நடத்திட்டு இருந்தேன். ஜனங்களிடம் இருந்து ஆதரவு இருந்தது. அதுல கடவுள் பத்தின ஆபாசத்தை பத்தியும்தான் வெளியிட்டு இருந்தேன். கடவுள் இல்லை கண்டிக்குற மாதிரி. அங்கே ராவணனை கொளுத்தினா, இங்கே ராமனை கொளுத்த ஏற்பாடு பண்ணி அதற்கு காரணம் சொல்லுற விதமா இத பண்ணான், அத பண்ணானு அட்டையில் எழுதி, துணியில் எழுதி ஊர்வலத்தில் விட்டேன். ஊர்வலத்தில் ராமன், அவன் பொண்டாட்டி சிலையா இருக்கிற மாதிரி, புராணத்தில் என்ன இருக்குதோ அதையே செய்தேன், நானா கற்பனை செய்யல. அந்த ஊருல இருந்த தேவாலய பாதுகாப்பு சங்கம் கருப்பு கொடி காமிச்சுக்கிட்டு வந்தான். நம்ம ஆளுங்க ராமன் ஒழிகனு சொல்ல, ஆனா அவன் நம்ம பேரை சொல்லி ஒழிகணு சொல்லிட்டான். அந்த கூட்டத்தில இருந்த ஒருத்த கால்ல இருந்த செருப்பை கழட்டி எறிஞ்சிட்டான். நம்ம கூட்டத்தில வந்து விழுந்தது. அதை எடுத்தவங்க அதவச்சே ராமன் படத்தை அடிச்சாங்க. ஒருத்தன் அடிச்சான், இரண்டு பேர்  அடிச்சான், அப்புறம் சுத்தி அந்த படத்தை அடிச்சாங்க..இத எடுத்துகிட்டாங்க. ராமனை செருப்பால அடிச்சுட்டாங்க, செருப்பால அடிச்சவங்களுக்கா உங்களோட ஓட்டுனு பிரச்சாரம் பண்ணான். ஒரு பத்திரிகை நடத்தினான் இன்னமும் நடக்குது..சோ னு என்னமோ. 3 லட்சம் சுவரொட்டி விளம்பரம், அதுல நான் செருப்போட இருக்குற மாறியும் எதுத்தாப்ல ராமன் படம், பக்கத்தில கருணாநிதி சபாஷ்னு சொல்லுற மாறியும் ஊரெல்லாம் ஒட்டுனாங்க ” என நிகழ்ந்த சம்பவத்தை என்ன நடந்ததோ பெரியாரே பேசி இருக்கிறார்.

Advertisement

Facebook link | archived link 

ரஜினி காட்டிய அவுட்லுக் கட்டுரையை எழுதிய ஜி.சி.சேகர் நியூஸ் 18 செய்தி சேனலின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதில், ” ராமன் மற்றும் சீதை உருவ பொம்மைகள் நிர்வாணமாக கொண்டு வரப்பட்டது என தினமணி செய்தியை மேற்கொள்காட்டி பேசிய பொழுது இடையில் தடுத்த நெறியாளர் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தியில் நிர்வாணமாக என எங்கும் இல்லை எனக் கூறினார். அடுத்து, அன்றைய நேரத்தில் புகைப்படத்தை வெளியிட்ட ஒரே பத்திரிகை துக்ளக் மட்டுமே. நிர்வாணமாக வந்ததா, நிர்வாணமாக வரவில்லையா என அதில் கொஞ்சம் factual error இருந்து இருக்கலாம். ஒருபுறம் இந்து கடவுள்களின் பல நிர்வாண புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டன, மறுபுறம் ராமரின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. அவர் இதை இரண்டையும் இணைத்து சொன்னதால் தப்பு வந்திருக்குமே தவிர. ” என்று வீடியோவின் 10-வது நிமிடத்தில் இருந்து பேசியுள்ளார்.

அவுட்லுக் இதழில் ” The tamil gag raj ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் 1971-ல் நிகழ்ந்த சம்பவம் என துக்ளக் இதழை மேற்கொள்காட்டியே வெளியாகி இருக்கிறது. அதிலும் ராமன் மற்றும் சீதை பொம்மைகள் நிர்வாணமாக இருந்ததாக புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் தனது பேச்சிற்கு ஆதாரமாக 2017-ல் இந்து குழுமத்தின் அவுட்லுக் இதழில் வெளியான கட்டுரையில் கூறியுள்ளதாக காண்பித்து இருந்தார். ஆனால் உண்மையில் அவுட்லுக் இந்து குழுமத்தைச் சேர்ந்தது அல்ல என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

நியூஸ் 18 விவாதத்தில் 21-வது நிமிடத்தில் பிஜேபியின் மூத்த தலைவரும், அந்த நாளில் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கே.என்.லட்சமணன் பேசியதாவது, ” ராமர் படம் ஆடையில்லாமல் இல்லை. ராமர் படம், பாலாஜி படம், முருகன் படம், கிருஷ்ண படமெல்லாம் கடைகளில் விலைக்கு விற்கும் படங்களை வாங்கியுள்ளனர். கட்அவுட் படத்தின் மீது செருப்பு மாலை போட்டு, கடவுள் இல்லை என கோஷம் எழுப்பினர். ஆபாச மொழியில் கோஷமிட்டு செருப்பால் அடித்துக் கொண்டே வந்தார்கள் ” எனக் கூறியுள்ளார். ராமர் மற்றும் சீதாவின் சிலையோ, படமோ ஆடையில்லாமல் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்து உள்ளார்.

அடுத்ததாக, 1971-ல் வெளியான துக்ளக் இதழில் ராமர் மற்றும் சீதாவின் சிலை ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகவில்லை. வெளியாகி இருந்தால் அதை ஆதாரமாக துக்ளக் பத்திரிகை வெளியிட்டு இருப்பார்கள். மேலும், 1971 சேலம் ஊர்வலம் தொடர்பாக பெரியாருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அளித்த பதிலை , அவர்களுக்கு எதிராக ஆஜராகிய வழக்கறிஞர் துரைசாமி ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Twitter link | archived link 

” பெரியாருக்கு எதிரான வழக்கில் நான்தான் ஆஜராகினேன். சங்பரிவார் அமைப்பினர் சோ ராமசாமியை சாட்சியாக அழைத்து இருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராமர் படத்தை எரித்தது சம்பந்தமாக துக்ளக்-ல் அட்டைப்படம் போட்டு இருந்தார்கள். வழக்கில் சுமார் 5 மணி நேரம் நான்தான் அவரை குறுக்கு விசாரணை செய்தேன். குறுக்கு விசாரணையின் போது அவர் சொன்னது, நான் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை. சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது. ஜன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தை பற்றி எழுதி இருந்தார்கள், சொன்னார்கள். அவர்கள் சொன்னதை வைத்துதான் நான் அட்டைப்படம் போட்டேன். பெரியார் மீது செருப்பை வீசியது கண்டிக்கத்தக்கது அதற்காக அவர்கள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் ” எனக் கூறியதாக வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார்.

Youtube link

அடுத்ததாக, துக்ளக் ரமேஷ் அவர்கள் behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில் 16-வது நிமிடத்தில், ” ராமர் மற்றும் சீதை படங்கள் நிர்வாணமாக வந்தனவா என கேள்வி எழுப்பினால் இல்லை. ராமர் அவமதிக்கப்பட்டார், அப்படி அவமதிக்கப்பட்ட படங்களை துக்ளக் வெளியிட்டது. வெளியிட்ட காரணத்தினால் துக்ளக் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எந்த கடவுளின் படத்தையும் நிர்வாணமாக எடுத்து வரவில்லை எனச் சொல்வதற்கு திராவிட கழகமோ, வேறு யாரோ எதிர்கொள்ள தயாராக இருந்தால் அதை எதிர்கொள்ள துக்ளக் தயாராக உள்ளது. பிற இந்து கடவுள்களின் நிர்வாண புகைப்படங்களை பயன்படுத்தினர் என்பது துக்ளக்கில் வெளியாகி இருக்கிறது ” எனக் கூறியுள்ளார்.

முதலில் பெரியார் பேசிய ஆடியோ பதிவில், புராணக் கடவுள்களின் ஆபாசப்படங்கள் எடுத்து வரப்பட்டதாகவும், புராணத்தில் உள்ளதையே தாம் செய்ததாக பெரியார் பேசி இருப்பார். அவ்வாறே, துக்ளக் ரமேஷ் அவர்களின் ராமர், சீதை உருவம் நிர்வாணமாக கொண்டு வரப்படவில்லை, ஆனால் பிற இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் நிர்வாணமாக கொண்டு வரப்பட்டன எனக் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், 1971-ல் நடைபெற்ற ஊர்வலத்தில் பெரியார் ராமரின் உருவத்தை செருப்பால் அடித்ததாக திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் கீ.வீரமணி ஒப்புக் கொண்டதாக வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், 2018-ல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து கீ.வீரமணி பேசியதில் இருந்து கட், கட் செய்து பெரியார் ராமரின் உருவத்தை செருப்பால் அடித்ததாக ஓர் வீடியோவை உருவாக்கி இருந்தனர். இதுகுறித்து நாம் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ராமரின் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாக கீ.வீரமணி ஒப்புக்கொண்டாரா ?

நியூஸ்18 சேனல் விவாதத்திலும் ஜி.சி.சேகர் பேசுகையில், ராமரின் உருவத்தை பெரியார் செருப்பால் அடித்ததாக கீ.வீரமணி சொன்னார் எனக் கூறும் பொழுது இடைமறித்த நெறியாளர் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என கூறி இருந்தார்.

1971-ல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் ஊர்வலத்தில் இந்து கடவுள்களின் நிர்வாணப் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. அதை பெரியரே குறிப்பிட்டு உள்ளார். ராமர் மற்றும் சீதாவின் ஆடை இல்லாத உருவமோ அல்லது புகைப்படங்களோ கொண்டு வரப்படவில்லை என அன்றைய ஆர்ப்பாட்டத்தில் இருந்த லட்சுமணன், துக்ளக் ரமேஷ் உள்ளிட்டோர் தெரிவித்து உள்ளனர். அதேபோல், பெரியார் ராமரின் படத்தை செருப்பால் அடித்ததாக கூறுவதற்கும் அன்றே பெரியார் பதில் அளித்து இருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் தேர்தல் நேரம் என்பதால், பெரியார் ராமரின் உருவத்தை செருப்பால் அடிப்பது போலவும், அதற்கு கருணாநிதி சபாஷ், சபாஷ் என கூறுவது போன்றும் பல போஸ்டர்கள், படங்கள் பயன்படுத்தி உள்ளனர். அந்த படங்கள் தற்பொழுது வைரலாகியது.

ரஜினிகாந்த் அவுட்லுக் எனும் ஆங்கில செய்தியை ஆதாரமாக கொண்டு பேசியது தகுந்த ஆதாரமில்லாமல் பேசியதாக உருவெடுத்து உள்ளது. இதற்கிடையில், ரஜினியின் சர்ச்சை பேச்சால் நாட்டில் பேச வேண்டிய பல முக்கிய பிரச்சனைகள் பேசப்படாமலேயே கடந்து செல்கிறோம் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button