This article is from Sep 30, 2018

ரஜினியை ” யார் நீங்க ” என கேட்ட சந்தோஷ்ராஜ் உண்மையில் யார் ?

தூத்துக்குடி போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை ” யார் நீங்க ” என்ற கேள்வி கேட்ட இளைஞர்  சந்தோஷ் ராஜின் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு விதமான பதிவுகள் பதிவிடப்படுகின்றன. இந்த சம்பவத்தால் அந்த இளைஞருக்கு பாராட்டுகளும், கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

இவை மட்டுமின்றி தேசிய கொடியை எரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட திலீபன் உடன் சந்தோஷ் ராஜ் இருப்பது போன்ற படங்கள் பதிவிட்டு தற்போது யார் சமூக விரோதி என தெரிந்து விட்டது என்று கருத்துக்கள் பதிவிடப்படுகிறது. இந்த விவகாரம் ஃபேஸ்புக்கில் சர்ச்சையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ” You Turn” தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் ராஜ் உடன் தொடர்பு கொண்டு பேசினோம். அதை பற்றி விரிவாக காண்போம்.சந்தோஷ் ராஜ் ALL COLLEGE STUDENT FEDERATION-இன் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்(DISTRICT ORGANIZER-TUTICORIN)

சந்தோஷ் ராஜ் : ரஜினிகாந்த் வந்து போன பிறகு திலீபன் மகேந்திரன் வந்து, என்னிடம் நான் சென்னையில் இருந்து வருகிறேன். அனைத்து பொது போராட்டத்திற்கும் நான் போவேன் என்று சொல்லி தான் என்னிடம் பேசினார். என்னால் போராட்டத்திற்கு வர முடியவில்லை அதனால் தான் இப்போ வந்தேன். என்ன நடந்தது என கேட்டதற்கு, இப்படி அறவழியில் போராடினோம் என்று அனைத்தையும் கூறினேன்.

அதன்பின் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்த போது என்னிடம் வந்து போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். எல்லாரும் என்கூட போட்டோ எடுத்தப்ப கேட்டதால் எடுத்துக் கொண்டேன்.

Youturn : இதுக்கு முன்னாடி அவரை உங்களுக்கு தெரியுமா ?

சந்தோஷ் ராஜ் : என் வாழ்நாளில் அவரை பார்த்ததே இல்லை.

Youturn : நேற்று எடுத்த போட்டோவை உடனே அவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணிருக்காறா ?

சந்தோஷ் ராஜ் : ஆமாம்,

Youturn : அவருக்கும் உங்களுக்கும் எந்த பிரெண்ட்ஷிப் ஏதும் இல்லையா ?

சந்தோஷ் ராஜ் : எனக்கு வேற யாரையும் தெரியாது. நேற்று மதியத்திற்கு பிறகு தான் வந்துட்டு போயிருக்கார்.

Youturn : நீங்கள் முதல் நாள் போராட்டத்தில் இருந்தே இருந்துள்ளீர்கள் ? தூத்துக்குடி மாவட்டத்தின் ALL COLLEGE STUDENT FEDERATION ஆர்கனைசராக இருக்கீங்களா.. உங்களுக்கு தலையில் தையல் போட்டு இருக்காங்க, எத்தனை போலீஸ் உங்களை அடிச்சாங்க. உங்க கூட இருந்தவங்க யாரும் இறந்துட்டாங்களா ?

சந்தோஷ் ராஜ் : 100 நாள் போராட்டத்திலும் இருந்திருக்கேன். ஆமாம், ஒரு 20 போலீஸ் சேர்ந்து அடிச்சு இருப்பாங்க. என் கூட இருந்தவங்க யாரும் இறக்கவில்லை.

 

 சந்தோஷ் பேசிய ஆடியோ மேலே  இணைப்பு : https://www.youtube.com/watch?v=HSkhM44-sw8
Youturn :
 ரஜினிகாந்த் அவர்களிடம் மட்டும் ஏன் யார் நீங்கள் என்று கேள்வி கேட்டீங்க ?

சந்தோஷ் ராஜ் : 100 நாள் போராட்டத்தில் ஒரு நாள் வந்தவங்க யாரா இருந்தாலும் அவங்க கிட்ட இந்த மாதிரி நாங்க கேள்வி கேட்டதில்லை. ரஜினிகாந்த் மட்டுமல்ல அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, துணை முதல்வர், ஸ்டாலின், டி.டி.வி தினகரன் என அனைவரிடமும் இந்த கேள்வியை எழுப்பினேன். ஒருத்தவர் கிட்ட மட்டும் இப்படி தனிப்பட்டு கேள்வி கேட்கவில்லை. டி.டி.வி தினகரன் கூட போரட்டத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனால், இவங்க ட்விட்டரில் கூட ஒரு கருத்தும் கூறவில்லை. அதனால் தான் நீங்க யார் என்று கேட்டேன். இது இந்த அளவுக்கு பெரிதாகும் என ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்போ நக்கீரனில் கூட என் போட்டோவை போட்டு உள்ளார்கள்.

Youturn : நீங்கள் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா ?

சந்தோஷ் ராஜ் : இதற்கு முன் SFI இல் இருந்தேன். ஆனால், அரசியல் சார்ந்து எதுவும் இருக்க கூடாது என்று தான் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பை உருவாக்கினோம். ஜல்லிக்கட்டு போரட்டத்திற்கு பிறகு இந்த அமைப்பை உருவாக்கினோம்.

Youturn : இதுக்கு முன்னாடி ஏதாவது போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளீர்களா ?

சந்தோஷ் ராஜ் : தூத்துக்குடி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த பொழுது, வி.ஒ.சி கல்லூரியில் போராட்டத்தை வழிநடத்தினோம். கல்விக் கட்டண உயர்வு, கல்லூரி அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்கள் பிரச்சனை தொடர்பான போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

Youturn : உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருக்கா ?

சந்தோஷ் ராஜ் : பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் எதற்காக இப்படி தவறான செய்தியை பரப்ப வேண்டும். இதுவரை எல்லார் கிட்டேயும் இதே கேள்வியை கேட்டு உள்ளேன். எல்லாரும் அமைதியாய் இருந்துட்டாங்க. ஆனா, இவங்க பாமர மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இப்படி பண்ணுறாங்களோ என்று எனக்கு தோன்றுகிறது.

Youturn : போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது அங்கு இருந்தீங்களா ? எப்படி, யார் ஆரம்பிச்சாங்க ?

சந்தோஷ் ராஜ் : முதலில் போலீஸ் தான் அடிக்க ஆரம்பிச்சாங்க. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தான் என்னையும் தாக்கினார்கள். அப்புறம் போலீஸ் கல்லை கொண்டு வீசினார்கள். அதனால் தான் மக்களும் திருப்பி கல்லை வீசினார்கள். அதற்கு பிறகு சுட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு காரணம் ஆட்சியர் அலுவலகத்தில் தீ வைத்தோம் என்று கூறியுள்ளார்கள். ஆனால், முதலில் சுடப்பட்டு இறந்தவற்கு அருகில் மண்டை உடைந்து நான் அழுது கொண்டே இருந்ததை வீடியோவில் பார்த்து இருக்கலாம். அப்போது போலீஸ் , மீடியாவில் சிலர் தவிர யாரும் இல்லை. அப்போ எடுத்த வீடியோவில் தீயே இருந்து இருக்காது. நாங்க வெளிய வர வரைக்கும் தீ இல்லை. அப்போ தீ யார் வைத்து இருப்பார்கள்.

Youturn :  நீங்க இப்போ நடந்தது பற்றி என்ன சொல்ல விரும்புறீர்கள்?

சந்தோஷ் ராஜ் : ஒன்று ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால், எங்களை போன்று போராடுபவர்களை ஒடுக்குற முயற்சி எடுக்குறாங்களா என்று தெரியவில்லை.

Youturn : நேற்று நடந்தது பற்றி என்ன சொல்லுறீங்க ?

சந்தோஷ் ராஜ் : அரசியல் கட்சிக்காரர்கள் ஆட்சியில் இருந்தால் தான் பலம். ஆனால், ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியலில் இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் பலம் ஆனவர்கள். அவர் தனி தான். அப்படிபட்டவர்கள் எங்களுக்காக வந்து ஒருநாள் ஆதரவு கொடுத்து இருந்தால் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கும். ஆனால், ஒருநாள் கூட எங்களை வந்து பார்க்கவில்லை. அவர்களின சமூக வலைத்தளமான ட்விட்டரில் போராடும் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

Youturn : உங்களை அனைவரையும் பார்த்துவிட்டு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் சமூக விரோதிகளால் தான் இது நடந்தது என்று கூறியுள்ளார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

சந்தோஷ் ராஜ் : அது தவறு, போலீஸ் மக்களை அடிக்குறதுக்கு முன்னாடி மக்கள் போலீசை தொடக் கூடவில்லை. மற்றொன்று ஒரு இடத்தில் 20 போலீஸ் தனியாக மாட்டிக் கொண்டனர். ஆனால், மக்கள் யாரும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

Youturn : 100வது நாள் போராட்டத்தில் மட்டும் ஏன் இப்படி கலவரமானது ?

சந்தோஷ் ராஜ் : 99  நாட்கள் போராட்டத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை. இரவு பகல் பாராமல் போராடினோம். ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அறவழியில் போராடுவோம் என்று அறிவித்து போராடினோம். நாங்கள் 100 வது நாள் கலவரத்தில் ஈடுபட போவதாக இருந்தால் தண்ணீர் பாக்கெட்கள், பிஸ்கட் எல்லாம் ஏன் வாங்கி வைக்க போகிறோம்.

சந்தோஷ் ராஜ் கூறியதையே திலீபனும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஃபேஸ்புக் பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=2058090497848092&id=10000941…

ரஜினி அவர்கள் இந்த விவகாரம் பற்றி Twitterஇல் எழுதி இருக்கிறார் அதைப் பற்றி இளைஞர் அறிந்திருக்கவில்லை . உள்நோக்கம் பெரிதாக இல்லாத , கேள்வி கேட்கும் துடுக்குத்தனம் உள்ள கிராமத்து இளைஞன் இவர் அவ்வளவே. ஆக, நடந்தவை ஒன்று. தவறாக திரித்தது ஒன்றாக உள்ளது . முதலில் இருந்து 100 நாட்களும் போராட்ட களத்தில் இருந்த வலியில் வார்த்தைகளை அவர் அனைவரிடமும் கேட்டிருக்கிறார்.  கேள்வி கேட்டாலே சமூக விரோதி என்று பரப்புரை செய்வது சரி அல்ல. ரஜினி என்றால் ஒரு mass என்றே கூறுகிறார் , அவருக்கு ஆட்சியில் இல்லை என்றாலும் மரியாதை இருக்கும் என்ற அடிப்படையில் கேள்வி கேட்டுள்ளார் , என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Please complete the required fields.




Back to top button
loader