ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ் விராட் கப்பலை சுற்றுலாவிற்கு பயன்படுத்தினார்-மோடி குற்றச்சாட்டு.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது ஓர் குற்றச்சாட்டை தெரிவித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கிய ஐ.என்.எஸ் விராட் கப்பலை ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றுலா செல்ல பயன்படுத்தினார்கள். கப்பலை கடலில் நிறுத்தி விட்டு லட்சத்தீவில் 10 நாட்கள் சுற்றுலா மேற்கொண்டனர்.
நாட்டின் கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை சுற்றுலா செல்ல பயன்படுத்திய சம்பவத்தை எங்காவது கேட்டதுண்டா ? ராஜீவ் காந்தியின் மனைவியும், இத்தாலிய குடிமக்களான அவரின் உறவினர்களும் ஐ.என்.எஸ் விராட் கப்பலில் பயணம் செய்துள்ளனர்.
#WATCH PM Modi in Delhi: At the time when, INS Virat was positioned for protection of maritime boundaries, it was sent to take Rajiv Gandhi and his family to an island for their holiday. Even his in-laws were onboard INS Virat. Was it not a compromise of national security? pic.twitter.com/3RXdtJHF2m
— ANI (@ANI) May 8, 2019
வெளிநாட்டவர்கள் நம் நாட்டின் போர்க்கப்பலில் பயணம் செய்வது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததா ? என ராஜீவ் காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டே இருந்தார். ராஜீவ் காந்தியின் சுற்றுலா குறித்த மோடியின் குற்றச்சாட்டு 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது நிகழ்ந்தது. அது யாரும் பெரிதும் அறிந்து இருக்காத ராஜீவ் காந்தியின் லட்சத்தீவு சுற்றுலா.
ராஜீவ் காந்த் தன்னுடைய குடும்பத்தினர், இந்திய மற்றும் இத்தாலிய நண்பர்கள் உடன் கொச்சினில் இருந்து 465 கி.மீ தொலைவில் லட்சத்தீவுகளின் அருகே மனித குடியிருப்புகள் இல்லாத “ பங்காரம் ” தீவிற்கு சென்றுள்ளனர். ராஜீவ் காந்தியின் இப்பயணத்தில் அவர்களுடன் வெளிநாட்டு நண்பர்களும் இருந்துள்ளனர். இதற்காக ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை பயன்படுத்தி உள்ளார்.
அந்த சமயத்தில், ராஜீவ் சுற்றுலா பயணத்திற்கு போர்க்கப்பலை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும், அதற்கான செலவுகள் அனைத்தும் ராஜீவ் காந்தியே செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிகின்றது.
ஏனெனில், அன்றைய நாட்களில் இந்தியாவிடம் இருந்த ஒரே ஒரு விமானம் தாங்கிய கப்பல் ஐ.என்.எஸ் விராட் மட்டுமே. மேலும், ஒரு விமானம் தாக்கிய போர்க்கப்பல் கடலில் பயணிக்கும் பொழுது உடன் குட்டி போர்க்கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் என ஒரு பாதுகாப்பு படையுடன் செல்ல வேண்டும் என்பதால் அதற்கான செலவுகள் அதிகம். 10 நாட்களுக்கு போர்க்கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல், கப்பற்படை ஊழியர்கள் என்றால் அதற்கான செலவுகள் ?
இதையெல்லாம் தவிர, அவர்களின் சுற்றுலா பயண நாட்களில் லட்சத்தீவு பகுதியில் இருக்கும் அகத்தி தீவிற்கு செயற்கைக்கோள் இணைப்பு அமைப்பதில் கணிசமான செலவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஓய்வு பெற்ற இந்திய கடற்படை துணை அதிகாரி வினோத் பஸ்ரிச்சா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஐஎன்எஸ் விராட் கப்பலில் அலுவல் பணியாகவே சென்றார், விடுமுறையை கொண்டாட அல்ல என சேனலில் கூறி இருந்ததை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினர் மறுத்தனர்.
எனினும், மோடியின் குற்றச்சாட்டு உண்மை எனக் கூறும் விதத்தில் மற்றொரு ஓய்வுப் பெற்ற கடற்படை அதிகாரி கருத்து தெரிவித்து இருந்தார். ஓய்வுப் பெற்ற கப்பற்படை தளபதி விகே ஜேய்ட்லி, ராஜீவ் காந்தி குடும்பம் விடுமுறை நாட்களில் கடற்படையை பயன்படுத்தினர் என உறுதியாக கூறியுள்ளார்.
” ராஜீவ் மற்றும் சோனியா ஆகியோர் ஐஎன்எஸ் கப்பலை பங்காரம் தீவில் விடுமுறை பயணத்திற்கு பயன்படுத்தினர். அப்பொழுது கடற்படை பயன்படுத்தப்பட்டது. அதற்கு நானே சாட்சி. அந்த நேரத்தில் ஐஎன்எஸ் கப்பலில் பதவியில் இருந்தேன் ” என்று தன் ட்விட்டரில் தெரிவிதித்து இருந்தார்.
தளபதி விகே ஜேய்ட்லி டைம்ஸ் நவ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ” இதை நீங்கள் அலுவல் சார்ந்த பயணம் அல்லது அலுவல் அல்லாத பயணம் என ஏதுவாக வேண்டுமாலும் அழைக்கலாம், எனக்கு அதைப் பற்றி தெரியாது. ஆனால், அவர்கள் லட்சத்தீவிற்கு சென்ற போது விராட் கப்பலை பயன்படுத்தி உள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை..அவர்கள் இருந்த பொழுது, அலுவல் அறை அவர்களுக்காக தயார் செய்யப்பட்டது, அதை 100 சதவீதம் உண்மை என்பேன். அதன்பின் அவர்கள் லட்சத்தீவிற்கு சென்றனர். ஆனால், அதனை அலுவல் ரீதியான பயணமா அல்லது தனிப்பட்ட பயணமா என உறுதி செய்ய இயலாது ” என தெரிவித்ததாக செய்தி வெளியிட்டு உள்ளனர்.
மேலும், மற்றொரு கடற்படை தளபதி ஹரீந்தர் சிக்கா, குற்றச்சாட்டை உண்மை என்றே கூறி இருந்தார். எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை. எங்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை. அயல்நாட்டவர்கள் போர்க்கப்பலில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். கட்டுப்பாட்டு அறை திறந்தே வைக்கப்பட்டது. கடற்படையானது விடுமுறை நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இது சரியில்லை. எங்களுக்கு கோபம் இருந்தாலும் பணியாற்றும் அதிகாரியாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என டைம்ஸ் நவ்க்கு தெரிவித்து உள்ளார்.
1987 ஆம் ஆண்டில் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விராட் தன் 30 ஆண்டுகள் சேவைகளுக்கு பிறகு ஓய்வு பெற்றது. ராஜீவ் காந்தி தனது சொந்தப் பயணத்திற்காக பயன்படுத்தினாரா அல்லது அலுவல் ரீதியான பயணமா என்பது தெரியவில்லை, உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் தன் குடும்பத்தோடு சென்று இருக்கிறார் என்பது உண்மை. இந்த குற்றச்சாட்டை முதன்முதலில் வைத்தது மோடி அவர்கள் இல்லை, அப்பொழுதே இது சர்ச்சையாக இருந்தது. ஆக, ஒரு பயணம் செய்தது உண்மை, அப்போது சர்ச்சையானது உண்மை. பயணம் அலுவல் ரீதியானது என்று ஒரு தரப்பும், அலுவல் ரீதியானது என்று எனக்குத் தெரியவில்லை என்று ஒரு வீரரும் சொல்லியிருப்பது தெளிவுக்கு வர முடியாமல் செய்கிறது. அலுவல் ரீதியாக சென்றால் அங்கு குடும்பத்தையே ஏன் அழைத்து சென்றார் என்பது நியாயமான கேள்வி !
Proof
Rajiv Gandhi took INS Viraat for family vacation, jeopardised national security: PM Modi
Rajiv Gandhi used INS Viraat for official visit: Congress
Idyllic vacation for the Gandhis in the Lakshadweep archipelago