ராமரின் இந்தியாவில் பெட்ரோல் ரூ93.. வைரலாகும் பதிவின் உண்மை என்ன ?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய பலரும் கண்டனமும், விமர்சனமும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்த வந்த ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
” ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93, சீதா தேவி பிறந்த நேபாளத்தில் பெட்ரோல் ரூ.53, ராவணனின் இலங்கையில் ரூ.51 ” என பிப்ரவரி 2-ம் தேதி பதிவிட்டு இருந்தார்.
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2021
சுப்பிரமணியன் சுவாமியின் பதிவை பலரும் பகிர்ந்து வந்தாலும், தவறான தகவலை அவர் பதிவிட்டு உள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுப்பிரமணியன் சுவாமி மட்டுமின்றி பலரும் அண்டை நாடுகளுடன் இந்தியாவின் பெட்ரோல் விலையை ஒப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.
பிப்ரவரி 3-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் முன்னணி நிதி மையமான மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 92.86 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ரூ86.30/லி ஆக உள்ளது.
2021 பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி, இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 161 (LKR) இலங்கை ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61 (இந்தியா 1 ரூபாய் = 2.65 இலங்கை ரூபாய்).
பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி, நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 (NPR) நேபாள ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதன் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69 (இந்திய 1 ரூபாய் = 1.59 நேபாள ரூபாய்).
சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டது போன்று, சீதா தேவி பிறந்த நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 53ரூ அல்ல, 69 ரூபாயாக உள்ளது. அதேபோல், இராவணனின் இலங்கையில் பெட்ரோல் விலை 51ரூ அல்ல, 61 ரூபாயாக உள்ளது (இந்திய மதிப்பில்). அண்டை நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை அந்நாட்டு மதிப்பில் அதிகமாக தெரிந்தாலும், இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்றும் போது குறைவாக இருக்கும்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரிகள் அவற்றின் விலை உயர்விற்கு காரணமாகி உள்ளன. தற்போதைய 2021 பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல், டீசல் மீது புதிய வேளாண் செஸ் வரி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர், சீதா, இராவணன் என இதிகாச கதையைத் தொடர்புப்படுத்தி இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை பற்றி வைரலாகும் பதிவில் இருப்பது போல் அந்நாடுகளில் பெட்ரோல் விலை 50ரூ ஆக இல்லை. எனினும், இந்தியாவுடன் ஒப்பிடும் போது 20, 30 ரூபாய் குறைவாகவே இருக்கின்றன.
Link :
Petrol price Rs 93 in Ram’s India, Rs 53 in Sita’s Nepal, Rs 51 in Ravan’s Lanka: Subramanian Swamy
Nepal Gasoline prices, 01-Feb-2021
Sri Lanka Gasoline prices, 01-Feb-2021