இராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை சம்பவம்| மதப் பிரச்சனை இல்லையென காவல்துறை தகவல் !

இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 23 வயதான அருண் பிரகாஷ் மற்றும் 20 வயதான யோகேஸ்வரன் ஆகிய இருவரும் கள்ளர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் அவ்விருவரையும் வளைத்து தாக்கியுள்ளனர். தப்பிக்க முயன்ற இருவரையும் துரத்திய கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்கி இருக்கிறார்கள்.
இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு இராமநாதபுர அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யோகேஸ்வரன் அங்கு சிகிச்சை பெற்ற பிறகு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடற்கூராய்வு முடிந்த பிறகு அருண் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் கொலை சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் துவங்கி உள்ளது. அருண் பிரகாஷ் கொலைக்கு நீதி வேண்டும் என இந்திய அளவிலும் கூட பதிவுகள் வெளியாகி வருகின்றன. மறுபுறம், அருண் பிரகாஷ் கொலை மதம் சார்ந்த கொலை என்றும், அதற்கான நீதி வேண்டுமென பதிவிட்டு வருகிறார்கள்.
இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். pic.twitter.com/n2cF4L4GbO
— H Raja (@HRajaBJP) September 1, 2020
இராநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக அருண்குமார் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.@CMOTamilNadu எந்த பாரபட்சமும் இன்றி இந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மாநில தலைவர் @Murugan_TNBJP#BANPFI_SDPI pic.twitter.com/MAZ6uGYKWj
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 1, 2020
அருண் பிரகாஷ் கொலை இஸ்லாமிய அடிப்படைவாத கும்பலால் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கிய பிறகு இராமநாதபுரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
” இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர் ” என இராமநாதபுர காவல்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.
இராமநாதபுரம் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை.@VarunKumarIPSTN
மேலும் விவரங்களுக்கு:https://t.co/00HO5dDRoG
Picture Credit: https://t.co/95VmpYrupH pic.twitter.com/y6OHbt7pol
— Ramanathapuram District Police (@RmdDistPolice) September 2, 2020
தி ஹிந்து செய்தியில், ” அருண் பிரகாஷ் கொலை சம்பவத்தில் ரியாஸ், காமாட்சி, சுரேஷ் மற்றும் ஷாஹுல் அமீத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், ஷீக் அப்துல் ரஹ்மான் மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருவதாகவும் ” வெளியாகி இருக்கிறது.
” அருண் பிரகாஷ் கொலை மதவாத காரணம் அல்ல, தனிப்பட்ட முன்பகை காரணமாக நிகழ்ந்தது ” என மாவட்ட எஸ்பி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார்
அருண் பிரகாஷ் கொலை வழக்கில் லெப்ட் சேக், சதாம், வாக்கிம், இம்ரான் கான், அசார், சரவணன், வெற்றி, காமாட்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், மதம் சார்ந்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்.கொண்டுள்ளனர்.
Link :
Youth killed in Ramanathapuram; four held
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.