This article is from Dec 03, 2018

ராமர்பிள்ளை பெட்ரோல் சீமான் வெளியிடும் திட்டமே இல்லை!

Lets Make Engineering Simple குழு ராமர் பிள்ளை தங்களிடம் செய்து காட்டிய சோதனை முறைகளில் சில ஏமாற்று வேலைகளை செய்து மூலிகையின் பெயரில் தண்ணீரை எரியச் செய்ததாக வீடியோ வெளியிட்டனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியது. இதனைப் பற்றி சரியான தகவலை விசாரித்து தெரிவிக்குமாறு YouTurn-யிடம் பலரும் கேட்டு கொண்டனர்.

இங்கு யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு இருக்காது. மக்கள் உண்மையானவற்றை அறிய வேண்டும் என்பதே எங்களின் முயற்சி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் LMES வெளியிட்ட வீடியோவிற்கு YouTurn தரப்பில் இருந்து மாற்றுக்கருத்துக்கள் இருப்பதை நேரடியாக தொடர்பு கொண்டு கடுமையாகவே அவர்களிடம் தெரிவித்து இருந்தோம். இருப்பினும், ராமர் பிள்ளை விவகாரத்தில் உண்மை என்ன என்பதை கண்டறிந்து மக்களுக்கு சொல்வதில் உறுதியாக உள்ளோம்.

இதைத் தொடர்ந்து LMES அலுவலகம் சென்று அவர்களின் சோதனையின் போது எடுத்த Uncut வீடியோக்கள் மற்றும் அவர்கள் காண்பித்த ஆவணங்களை முழுமையாக சரி பார்த்து வந்தோம். பின் ராமர் பிள்ளையை தொடர்புக் கொள்ள பலமுறை முயற்சித்த பிறகு ஒருமுறை நேரில் வர ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் கூறியது போன்று YouTurn அலுவலகத்திற்கு வரவோ அல்லது அதன் பின் எங்களின் அழைப்பை எடுக்கவோ இல்லை. இருப்பினும், போன் அழைப்பில் பேசியதில் சில தகவல்களை பெற முடிந்தது. மேலும், எங்கு சென்றாலும் நாம் தமிழர் சீமான் அவர்களை குறிப்பிட்டு ராமர் பிள்ளை பேசுவதால் நாம் தமிழர் தலைமையகத்தையும் தொடர்பு கொண்டோம். இவ்வாறான பல தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறோம்.

ஆராய்ச்சிக்கான காப்புரிமை :

ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருளுக்கான சர்வதேச காப்புரிமை மறுக்கப்பட்டு வருகிறது, இது எண்ணெய் நிறுவனங்கள், கார்ப்ரேட்களின் திட்டமிட்ட சதி என பெரும்பாலானோர் குற்றச்சாட்டுகளை இன்று வரை கூறி வருகின்றனர். 2014 இல் வெளியான புதிய தலைமுறை நிகழ்ச்சி ஒன்றில், 2006-ல் ஜெனிவாவில் உள்ள சர்வதேச காப்புரிமை அலுவலகத்தை அணுகி காப்புரிமையை பெற்றதாக ராமர் பிள்ளை கூறினார் என செய்தி வெளியிட்டு உள்ளனர்.

ஆனால், ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருளுக்கான காப்புரிமை இன்று வரை வழங்கப்படவில்லை. Youturn-க்கு அளித்த பேட்டியில், தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு பதிவு செய்து உள்ளேன். வருகிற பிப்ரவரியில் கிடைத்து விடும் என்றுக் கூறினார். அவரின் ஐரோப்பியன் காப்புரிமை பதிவகத்தில் 2008-ல் தன் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளார். 2010 & 2012 காப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. US patent & Trademark office-ல் 2008 விண்ணப்பமானது அவர் பதில் அளிக்கவில்லை என கைவிடப்பட்டது, 2011 விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.

ராமர் பிள்ளையின் சோதனையில் Limonene 2% to 60% இருப்பதாக தெரிவித்து உள்ளார். அது ஒருவகை தாவரத்தில் இருந்து எடுக்கப்படுவதாக கூறியதற்கு அந்த தாவரத்தில் limonene கன்டென்ட் இல்லவே இல்லை என LMES தெளிவாக கூறியுள்ளனர். Seratta leaves என்பதில் 3.9% limonene இருப்பதையும், Limonene கன்டென்டை முழுமையாக எரிபொருளாக பயன்படுத்த முடியாது, எரிபொருளுடன் Blending component ஆக 10% அளவிற்கு limonene-ஐ பயன்படுத்த முடியும் என 1990-ல் ஒருவர் ஆராய்ச்சி செய்து approval வாங்கிய Documents-களை Youturn குழுவிடம் LMES சார்பில் காண்பிக்கப்பட்டது.

LMES vs ராமர் பிள்ளை :

ராமர் பிள்ளை பற்றி LMES வெளியிட்ட முதல் வீடியோ பற்றி கேட்கையில், மொத்தம் 4 முறை சோதனையில் முதல் இரண்டு சோதனையில் மூலிகை மூலம் தயாரித்து வைத்து இருந்த Fermented liquid உடன் தண்ணீரை சேர்த்து சூடுபடுத்தும் பொழுது எரிபொருள் போன்று எரிவதை காண முடிந்தது. மூன்றாவது சோதனையில் வெறும் குச்சியை மட்டும் தண்ணீரில் சூடுப்படுத்தி எரிய வைத்து தங்களை ஆச்சரியப்படுத்தியதாக LMES குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மூலிகை மூலம் தண்ணீரை எரியச் செய்வதாகக் கூறிய சோதனையில் இறுதியான இரண்டு சோதனையில் தண்ணீர் பாத்திரத்தின் மூடியில் ஒருவகையான மெழுகு(wax) வைத்து அடைத்து இருப்பதை கண்டறிந்த பின்னரே அவர் ஏதோ ஏமாற்று வேலைகள் மூலம் மூலிகையின் சக்தியால் தண்ணீர் எரிகிறது என்கிறார் என்பது LMES குழுவிற்கு தெரிய வந்ததாக கூறினர். அதற்கு முன்பு வரை மூலிகை எரிபொருளை உண்மை என நினைத்து மகிழ்ச்சி அடைந்ததாக LMES குழுவில் இருந்த பலரும் எங்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், LMES அலுவலகத்தில் ராமர் பிள்ளை மீண்டும் சோதனை நடத்திய போது நெருப்பை பாதியில் அணைத்தப் பிறகு தண்ணீர் பாத்திரத்தில் முழுவதும் உருகிய மெழுகு இருப்பது உறுதியானது.

ஆனால், அது மெழுகு இல்லை வெப்பத்தை அதிகரிப்பதற்கு அவ்வாறு செய்ததாகவும், Catalyst போன்று செயல்படும் என்று ஒரு விளக்கம் அளித்ததாக LMES-ஐ சேர்ந்தவர்கள் கூறினர். அது மெழுகே இல்லை என கூறிய ராமர் பிள்ளை மெழுகு எவ்வாறு தண்ணீருடன் எரியும் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், இறுதி சோதனையின் போது எடுக்கப்பட்டு காட்டப்படாத Uncut வீடியோவில் அங்கிருந்தவர்கள் சோதனை தண்ணீரில் விரல்களை விட்டு எடுத்து மீண்டும் வேறொரு தண்ணீரில் நனைக்கும் பொழுது மெழுகு போன்று இருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது.

LMES வெளியிட்ட வீடியோவால் உணர்ச்சி வசப்பட்ட ராமர்  பிள்ளை ஆதன் தமிழ் என்ற Youtube சேனலில் அளித்த பேட்டியில் LMES-க்கு எதிராகக் கடுமையாக குற்றம்சாட்டுகளை முன் வைத்தார். அதாவது, என்னிடம் Fermented liquid-ஐ LMES கேட்டதாகவும், தான் செய்து காட்டிய முதல் செய்முறையை காட்டவில்லை என பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதன் பின் LMES தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காக இரண்டாவது வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், ராமர் பிள்ளை முதல் இரண்டு வீடியோவில் உபயோகித்த Fermented liquid என்பது நைட்ரோ மீத்தேன் எனும் கெமிக்கல் மட்டுமே என நேரடியாக அதனை சோதனை செய்து காட்டினர். ராமர் பிள்ளை ஆதன் தமிழில் செய்ததும், LMES செய்து காட்டியதும் ஒன்றுபோல் புகையற்ற நெருப்பை பாத்திரத்தின் மேற்பரப்பில் காண முடிந்தது.

மெழுகு எவ்வாறு தண்ணீருடன் சேர்ந்து எரியும் எனக் கூறியதற்கு, LMES அதற்காகவும் ஒரு விளக்கத்தை செய்து காட்டினர். மெழுகால் எரியவில்லை அதற்குள் இருக்கும் எரிபொருள் மூலமே எரிந்தாக விளக்கமாக செயல்படுத்தி காட்டினர்.

தேடுதலில் முடிவு :

LMES தரப்பில் வெளியிடப்படாத Uncut வீடியோக்களில் தெரிந்த சில விசயத்தை பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறோம்.

“ ராமர் பிள்ளை வீட்டில் முதல் சோதனையில் LMES-ஐ சேர்ந்த அனைவரும் நெருப்பு எரிவதை பார்க்கும் பொழுது ராமர் பிள்ளை பயன்படுத்திய பாட்டில்களில் ஒன்றை மறைத்து வேறொரு பாட்டிலை மாற்றுவதை பார்க்க முடிந்தது “

மூடியை மாற்றுவது : uncut வீடியோக்களில் தண்ணீர் பாத்திரத்தின் மூடியை ராமர் பிள்ளை மாற்றும் செயலை தெளிவாக காண முடிந்தது. மூலிகை குச்சியை நனைத்து எடுக்கும் வரை மூடியை நன்றாக காட்டி விட்டு பிறகு அந்த மூடியை நேராக தன் பையில் கொண்டு வைப்பார். பின் உடன் இருப்பவர்களை அங்கே பாருங்கள், அதை செய்யுங்கள் எனக் கூறி விட்டு வேறொரு மூடியை மாற்றி எடுப்பார். அதில், மெழுகு(wax) தடவி இருப்பதால் யாரும் பார்க்க முடியாதவாறு வைத்து கொண்டு போய் பாத்திரத்தை மூடுவார். சில காணொளி பதிவில் மெழுகு தெரியாதவாறு எடுத்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.

இதைத் தவிர, மெழுகு மூடியை பையில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுப்பதற்குள் அங்கும் இங்கும் பார்ப்பது, யாரும் வந்தால் அதை எடுக்காமல் விட்டு விடுவது போன்ற அவரின் பயத்தையும், பதட்டத்தையும் வீடியோவில் எங்களால் தெளிவாக பார்க்க முடிந்தது.

ராமர் பிள்ளையின் Fermented liquid-ஐ நீங்கள் கேட்டீர்களா என LMES-யிடம் நாங்கள் கேட்டதற்கு, Fermented liquid-ஐ நாங்கள் கேட்கவில்லை. ஆனால்,  அவர்களுக்கு யாருக்கும் அளிக்காத அற்புத மூலிகை குச்சி என இரண்டு குச்சியை கொடுக்கும் வீடியோவையும் பார்த்தோம்.

மேலும், LMES பிரேம் ஆனந்த் குழு பாதியில் தீ எரிந்து கொண்டிருக்கும் போது அணைக்க முயற்சிக்கும் போது தடுக்கவில்லை என்று வேறு பேட்டிகளில் சொல்லியுள்ளார் ராமர் பிள்ளை. ஆனால், எதற்காக தீயை அணைக்கிறீர்கள், எரியட்டும் என்று சொன்னவர் மீண்டும் அதை எரிய வைக்க முயற்சித்தும், அவர்களை எரிய வைக்க சொன்னதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும், அந்த மூடியை பிறர் திறக்க முயற்சிக்கும் போது அதை தடுத்து தானே எடுக்க முயற்சித்ததும் தெரிந்தது.

தமிழ் தேசியம் ஆதரவு :

ஆதன் தமிழ் வீடியோவில் பேசும் பொழுது அண்ணன் சீமான் சார்பில் இரு விஞ்ஞானிகளிடம் செய்து காண்பித்து உள்ளேன், செந்தமிழன் சீமான் தலைமையில் வெளியிட போறேன் என்று விடாமல் சீமான் பெயரையே பயன்படுத்தி உள்ளார். இதற்கு காரணம் அவருக்கு ஆதரவாக சீமான் ஆதரவாளர்கள் இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியம் பேசும் இளைஞர்கள் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசியுள்ளார் என நினைக்கத் தோன்றுகிறது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை கழகத்தைத் தொடர்பு கொண்ட போது சோதனையைப் பார்த்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால், தற்போது வெளியிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்கின்றனர். தொடர்ந்து பேசும் ராமர் பிள்ளை விஞ்ஞானிகளை சீமான் அனுப்பி உள்ளார் என்றும், அவர் தலைமையில் 10 நாட்களில் வெளியிடுவேன் என்றும் கூறி வருகிறார். ஆக, தமிழ் தேசியம் பேசும் இளைஞர்களின் ஆதரவை பெற ராமர் பிள்ளை இவ்வாறு பேசியுள்ளார் என்பது தெளிவாகிறது.

ராமர் பிள்ளை LMES-க்கு செய்து காட்டியது வெறும் சோதனை முயற்சி தான் அதைக் கொண்டு எரிபொருளாக மாற்ற முடியாது என்கிறார். தன் கண்டுபிடிப்பு எனக் கூறுவதின் உண்மையான செயல்முறையை எங்கும் செய்து காட்டியது இல்லை. விரைவில் அதனை செய்து காட்டுவதாக கூறியிருந்தார், அதிலும் சீமானின் பெயரையே கூறினார்.

எரிபொருள் விற்பனையும், சிபிஐ வழக்கும் :

1996-ல் IIT-யில் ராமர் பிள்ளையின் எரிபொருள் சோதனையின் போது இரும்பு குழாயில் எரிபொருளை நிரப்பி மெழுகினை வைத்து அடைத்து வெப்பப்படுத்திய போது எரிந்ததாக செய்திகளில் வெளியாகியது. அதில் சோதனை செய்வதற்கு முன்பு இரும்பு குழாயின் எடை 170.88 கிராம் ஆகவும், சோதனைக்கு பிறகு 28.68 ஆக குறைந்ததை கண்டுபிடித்தனர். தற்போது வரை மெழுகை விடவில்லை.

இதேபோன்று Ministry of Non-conventional energy sources அறிக்கையில், ராமர் பிள்ளை  பயன்படுத்தியதில் பெட்ரோல் பொருட்களோ அல்லது மூலிகை பொருட்களோ இல்லை என்று குறிப்பிட்டு ஏமாற்றும் வார்த்தைகள் என தெரிவித்து இருந்தனர். அவர் பயன்படுத்தும் Fermented liquid ஆனது மூலிகை அல்ல, அதில் Tetra hydro furan & Lauric acid கலந்து இருப்பதாக தெரிவித்து இருந்தனர் என்பதற்கான ஆவணத்தை LMES எங்களிடம் காட்டினர்.

1999-ல் ராமர் பிள்ளை மூலிகை எரிபொருளை விற்பனை செய்யத் தொடங்கிய பிறகு அவரின் மீது 2000-ல் சிபிஐ-யின் வழக்கு பாய்ந்தது. 2016-ல் அவரின் கண்டுபிடிப்பு மூலிகை எரிபொருள் இல்லை, 2.27 கோடி அளவிற்கு மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டு ராமர் பிள்ளை மற்றும் அவரின் உதவியாளர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவிக்கவில்லை. இதற்கு முன்பாக, 2010-ல் தன் எரிபொருள் கண்டுபிடிப்பு பற்றி அறிவிக்க செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த முயற்சித்த போது அதைத் தடுக்க ராமர் பிள்ளையை சிபிஐ கைது செய்தனர். சமீபத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி மீண்டும் மூலிகை எரிபொருளை விற்பனை செய்வதாக அறிவித்த போது போலீசாரால் அவரின் பணிகள் தடுக்கப்பட்டது.

ராமர் பிள்ளை சோதனை செய்து காண்பிப்பதற்கும், அவரின் உண்மையான சோதனைக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள் சிலர். ஏனெனில், தண்ணீரை எரிய வைப்பதால் அதனைக் கொண்டு விற்பனையில் இறங்கி இருக்க முடியாது. அதே நேரத்தில், சில ஆண்டுகளாக குச்சியை வைத்து தண்ணீரை எரிய வைக்கிறேன் என்பதில் சில update-களை கொண்டு வந்துள்ளார் என்று வேண்டுமானால் கூறலாம். தமிழர் என்ற ஒரு காரணத்திற்காக திறமைகள் மறுக்கப்படுவது எத்தகைய கொடுமையோ அதுபோன்று தான் தமிழன் எனக் கூறிக் கொண்டு தமிழ் மக்களையே ஏமாற்றுவதும் கொடுமையானது.

எங்கு வேண்டுமானாலும் தன் சோதனையை செய்து காண்பிப்பதாக ராமர் பிள்ளை கூறியுள்ளார். அதை Youturn-யிடம் செய்து காண்பிக்க தயாராக இருந்தால் நாங்கள் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். மக்களுக்கு தெரிவிக்கவும் தயாராக இருக்கோம். உண்மை என்னவென்று எத்தனை ஆண்டுகள் ஆயினும் மறைக்க முடியாது, சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அதனை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் சுய விருப்பம்.

 

Ramar Pillai gets 3-year RI

Scientist casts doubts on Ramar Pillai’s claim

Velar Bio Hydrocarbon Fuel

Membrane biohydrocarbon fuel

 

Please complete the required fields.




Back to top button
loader