“ராமர் பாலம்” கட்டப்பட்ட அதிசய மிதக்கும் கல் எனப் பரவும் செய்தியின் உண்மைத் தெரியுமா ?

சிதம்பரத்தில் சுரேஷ் என்பவர் கொடியம்பாளையம் கடற்கரையில் இருந்து மிதக்கும் கல் ஒன்றை தனது வீட்டிற்குக் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். இது திமிங்கிலத்தின் எச்சமாகக் கூட இருக்கலாம் என சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ராமர் பால கல் விற்பனை : 

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை செல்வதற்கு ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய மிதக்கும் கல் எனச் கூறி சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாகக் கற்கள் தண்ணீரில் மிதக்கும் வீடியோக்கள் பல பரவி வருகிறது.

மேலும், இந்த மத நம்பிக்கையைப் பயன்படுத்தி சிலர் ராமர் பாலத்தின் புனிதமான கல் என்று இதனை ஆன்லைனில் விற்பனை செய்தும் வருகிறார்கள்.

இதுகுறித்து 2022 மார்ச் மாதம் பிபிசி செய்தித்தளம், “பவளப் பாறைகளை ‘ராமர் பாலம் கட்டிய கல்’ என்று கூறி ஆன்லைனில் விற்பனை செய்யும் தளம்” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

பவளப்பாறைகள் : 

தண்ணீரில் மிதக்கும் திறன் உடைய இறந்துபோன பவளப்பாறைகளையே(Coral Reef) ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் எனப் பலர் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

பவளப்பாறை(Coral Reef) என்பது ஒரு கடல்சார் உயிரினம். பவளம் எனப்படும் உயிரினத்தின் உடம்பில் இருந்து சுரக்கப்படும் கால்சியம் கார்போனேட்(Calcium Carbonate) மூலம் பவளப்பாறைகள் உருவாகின்றன. சூசாந்தலே(Zoozanthale) எனும் பாசி மூலம் பவளப்பாறைகளுக்கு உணவு கிடைக்கும். பதிலுக்குப் பவளப்பாறைகளை சூசாந்தலே(Zoozanthale) பாசிகள் தங்களுடைய பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

மேலும், பவளப்பாறைகள் பச்சை, நீலம், சிகப்பு போன்ற நிறங்களில் காண முடியும். பவளம் இறந்த உடன் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். பவளப்பாறைகளைச் சார்ந்து பல கடல் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பவளப்பாறைகள் கடலின் மழைக்காடு என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் பவளப்பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பவளப்பாறைகளைச் சார்ந்து உள்ள உயிரினங்களும் பாதிப்படைகிறது.

இந்நிலையில், மீன் தொட்டி அலங்கரிக்க அல்லது ராமர் பாலம் கட்டிய கல் என விற்பனை செய்வதற்காகப் பவளப்பாறைகளை சிலர் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இந்தியாவில் பவளப்பாறைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள். இவற்றை வெட்டி எடுப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டலம்(Costal Regulation Zone) சட்டத்தின்படி தண்டனைக்குரியது.

உலகில் அதிகமான பவளப்பாறைகள் இருக்கும் இடமாக ஆஸ்திரேலியா நாட்டின் வட  கிழக்கில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப்(Great Barrier Reef) அமைந்துள்ளது.

இந்தியாவின் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மன்னர் வளைகுடா(Gulf of Mannar) மற்றும் பால்க் ஜலசந்தி(Palk Strait) போன்ற இடங்களில் பவளப்பாறைகளைக் காண முடியும். மேலும், கட்ச் வளைகுடா(Gulf of Kutch), அந்தமான் தீவு மற்றும் லட்சத்தீவிலும் பவளப்பாறைகள் இருக்கின்றன.

இந்தியாவில் பவளப்பாறைகளை அழிப்பது, வெட்டி எடுப்பது, விற்பனை செய்வது போன்ற செயல்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இதுகுறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் முத்தமிழ்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இறந்துப்போன பவளப்பாறைகளில் உள்ள துளைகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதற்குள் வாயு அதிகமாக இருக்கும். மேலும், பவளப்பாறையின் அடர்த்தி தண்ணீரை விட குறைவாக இருக்கும். இதனால் ஒரு சில பவளப்பாறைகள் மிதக்கும் திறனை கொண்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

புமிஸ் கற்கள் : 

பவளப்பாறைகள் மட்டுமின்றி எரிமலை(Volcano) வெடிப்பதில் இருந்து உருவாகும் புமிஸ்(Pumice) கற்களும் தண்ணீரில் மிதக்கும் திறன் உடையது. எரிமலையில் இருந்து வெளியேறும் மாக்மா(Magma) மிக அதிகமான வெப்பநிலையில் இருக்கும். வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ச்சியான வெப்பநிலை காரணமாக எரிமலையில் இருந்து வெளியேறிய மாக்மா உடனடியாகக் கல்லாக மாறும்.

புமிஸ் கற்களில் சிறு சிறு துளைகள் நிறைய இருக்கும். துளைகளில் உள்ள வாயுவின் காரணமாக புமிஸ் கற்கள் தண்ணீரில் மிதக்கும் திறனை பெற்றுள்ளது. புமிஸ் கற்கள் நீண்ட நாட்களுக்குத் தண்ணீரில் மிதக்கும் திறன் படைத்தவை.

20,000 கால்பந்து மைதானம் அளவு கொண்ட புமிஸ் பாறையானது பசிபிக் பெருங்கடலில்(Pacific Ocean) மிதக்கிறது என பிபிசி செய்தித்தளம் Giant volcanic pumice rock raft floating in Pacific ocean எனும் தலைப்பில் 2019ம் ஆண்டுக் கட்டுரை வெளியிட்டிருந்தது.

 

இதிலிருந்து, இந்தியாவில் ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய மிதக்கும் கல் எனப் பவளப்பாறை அல்லது புமிஸ் கற்களை தவறாக பரப்பி வருகிறார்கள். இதை வைத்து மக்களை ஏமாற்றி விற்பனையும் செய்கின்றனர்.

Links :

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல்

Flipkart Link

பவளப் பாறைகளை ‘ராமர் பாலம் கட்டிய கல்’ என்று கூறி ஆன்லைனில் விற்பனை செய்யும் தளம்

How Coral Reefs Are Made

16 Law and Policy for Conservation and Management of Coral Reef Areas in India

What is Pumice?

Giant volcanic pumice rock raft floating in Pacific ocean

Please complete the required fields.
Back to top button
loader