தீண்டாமை கடைப்பிடிப்பதை நியாயப்படுத்தி பேசும் ரங்கராஜ் !
ஏற்கனவே சாதி திருமணங்களை ஆதரித்த ரங்கராஜ், தற்போது சாதிய தீண்டாமையை நியாயப்படுத்திப் பேச்சு !

கும்பகோணத்தின் பிரசிதி பெற்ற சரஸ்வதி கான சபாபின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் கும்பகோணம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 09 அன்று நடந்தது. அந்த விழாவில் சிறப்புரையாற்றிய பத்திரிக்கையாளர் ரங்கராஜ், “அந்தக் கால ஆச்சாரம் தான் இந்தக்கால Covid Protocol” என்று தீண்டாமையை நியாயப்படுத்தும் விதத்தில் பேசியது, சமூக வலைதளங்களில் விவாதத்தையும், கண்டனத்தையும் பெற்றுள்ளது.
கோவிலில் தீண்டாமைக் கொண்டு வருவதும், கோவிலில் சுகாதாரம் பேணுவதும் ஒன்றா ?
பொதுவாக தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவு மக்களை மற்ற சமூகக் குழுவினரோடு எந்தவித நேரடி தொடர்பும் கொண்டிராதவாறு தடுக்கும் ஒரு சிறுமையான செயல்பாடாகும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட சமூக பிரிவு மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவிகளில் உரிமை மறுப்பு, கோவில்களில் நுழைய மறுப்பு, பொதுப் பாதையில் நடக்க மறுப்பு, பொதுக் கிணறில் தண்ணீர் எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல தீண்டாமை கொடுமைகள் நிலவி வந்தன. இன்றும் தொடர்ந்து நிலவி வருகின்றன. எனவே காலங்காலமாக எந்த காரணிகளால் ஒரு குறிப்பட்ட சமூகப் பிரிவு மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அந்த காரணிகளைக் கொண்டே அவர்களின் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க கொண்டு வரப்பட்ட தீர்வு முறையே இடஒதுக்கீடு முறை.
ஆனால் கோவில்களில் நடக்கும் ஆச்சாரங்கள், சுகாதாரங்கள் என்று பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் எந்த தலைவர்களும், இட ஒதுக்கீடு முறைகள் குறித்து தனது குரல்களை எழுப்புவது இல்லை. அந்தவகையில் தற்போது பேசியுள்ள பத்திரிக்கையாளர் ரங்கராஜும் தன்னுடைய உரையில், “இன்றைக்கு கோவிட் Protocol என்று சொல்கிறார்களே, இந்த கோவிட் Protocol என்பது ஒரு Indian Protocol. இது இந்திய தத்துவத்தில், இந்து தத்துவத்தில், தமிழ்நாட்டில் இருந்த விசயம். மாஸ்க் போடுங்கள் என்று சொல்கிறார்களே, இந்த மாஸ்க் என்பது என்னது? இங்கு பெரிய சாமிகள் இரண்டு பேர் பேசிக்கொள்ளும் போது கையை, மூக்கை மூடி பேசுகிறார்களே அது தான்.“ என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
மேலும் வீடியோவின் 10:55 வது நிமிடத்தில் “…நமக்கு சொல்லிக் குடுத்தவங்க அடிச்சு சொல்லிக் குடுக்கல. என்ன மேலப் படக் கூடாதுன்னு சொல்றான். இவரைக் கேட்டா மேலப் படக்கூடாதுன்னு சொல்றாங்கிறான். அரசாங்கம் என்ன சொல்லுது ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும் ஆறடி இடைவெளி விடுவீர்னு சொல்லுது. என்னப்பா நான் வேற பாஷைல சொல்றேன் நீ வேற பாஷைல சொல்ற. யாரவது தொட வந்தா தள்ளி நின்னுக்கிறான். என்ன காரணம் ? தீட்டா? பாவமா? ஆச்சாரமா? தீண்டாமையை கொண்டு வரீயா கோவில்ல? இல்லையே.. சுகாதாரம் தான கொண்டு வரோம்… “ என்று தனது உரையில் தீண்டாமை செயல்களை நியாயப்படுத்துவது போன்று பேசி இருந்தார்.
இவர் பேசுவதைப் பார்க்கும் போது காலங்காலமாக பட்டிலின மக்கள் கோவில்களில் நுழைய மறுக்கப்பட்டு வந்ததையும், மற்ற சமூகத்தினரை நேரடியாக தொடர்புகொள்ள மறுக்கப்பட்டு வந்ததையும், சுகாதாரக் காரணத்திற்காகத் தான் என்று இவர் தெரிவிப்பது போன்றே உள்ளது.
சுகாதாரம் (Hygiene) என்பது என்ன? சுகாதாரம் என்பது மருத்துவ அறிவியலின்படி பொது மக்களின் நல்வாழ்விற்காக பின்பற்றப்பட்டுவரும் ஒரு பழக்கவழக்க முறை. இந்த முறை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. மாறாக தீண்டாம முறை என்பது, பிறப்பின் அடிப்படையில் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மனிதர்களை மட்டும் மற்ற பிரிவை சேர்ந்த மனிதர்களைத் தொடக்கூடாது என சமூக வேறுபாடு பார்க்கும் ஒரு முறை. இந்நிலையில் கோவிலில் தீண்டாமைக் கொண்டு வருவதும் கோவிலில் சுகாதாரம் பேணுவதும் ஒன்று என்பது போல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பேசியிருப்பது ஒன்றுக்கு பின் முரணாகவே உள்ளது.
சுத்தம் செய்யலாம்! சாமியைத் தொடாதே!
இவர் சுகாதாரம் தொடர்பாக பேசியிருப்பது போன்றே இதற்கு முன்பு புதுக்கோட்டையின் நார்த்தாமலை கிராமத்தின் அமைந்துள்ள விஜயாலீசுவரர் கோவில் அருகே ஒரு சம்வம் இதே போல் நடந்தது. அக்கோவிலுக்கு செல்லும் பாதையில் இருந்த சுனை நீரில் மூழ்கிய சிவ லிங்கத்தை மீட்டெடுத்த “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பின்னர் தமிழ் ஆகம விதிகளின் படி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி பூஜை செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த அர்ச்சகர்கள் “சுத்தம் செய்ய வந்தால் சுத்தம் செய்து விட்டு போக வேண்டும், உள்ளே வரக் கூடாது. இதேபோன்று தஞ்சாவூர் கோவிலில் உங்களால் பண்ண முடியுமா ?” என்றெல்லாம் பேசியுள்ளனர். இதன் மூலம் இவர்களுக்கு கோவில்களில் சுகாதாரம் செய்ய மட்டுமே பாமரமக்கள் தேவைப்படுகின்றனர் என்ற உண்மையை அறிய முடிகிறது. மேலும் இது தொடர்பாக யூடர்ன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையைக் கீழேக் காணலாம்.
மேலும் படிக்க: சுத்தம் செய்யலாம், சாமியை தொடாதே !
இதே போன்று, இதற்கு முன்பும் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் தன்னுடைய யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் “மணி ஆட்டிக்கொண்டு இருந்த குடும்பத்தில் (பிராமணர்) ஒருத்தர் கூட கொலை செய்தது கிடையாது. வன்முறைக்குச் சென்றதில்லை. இதைப் பற்றிப் பாராட்ட உங்களிடம் தைரியம், நேர்மை, மனசாட்சி இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு யூடர்ன் தரப்பில், இதுவரை பிராமணர்கள் செய்த வன்முறை மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க: பிராமணர்கள் வன்முறை, சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டது இல்லையா ?
மேலும், EWS, நீட் பற்றி அவர் பேசிய பொய்கள் தொடர்பான கட்டுரையையும் கீழேக் காணலாம்.
மேலும் படிக்க: EWS பற்றி வீடியோவில் பொய்.. ட்விட்டரில் கவனப் பிசகு எனப் பதிவிட்ட ரங்கராஜ் !
மேலும் படிக்க : “நீட்” சரியான புள்ளிவிவரங்கள் !
இதன்மூலம், பத்திரிகைத் துறையில் இத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வரும் ரங்கராஜ் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவு மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக கோயில்கள் மற்றும் பொதுவெளிகளில் நடத்தப்பட்ட சாதிய தீண்டாமையை, “அந்தக்கால ஆச்சாரம் தான் இந்தக்கால Covid Protocol ” என்று தீண்டாமையை நியாயப்படுத்துவது போன்று பேசியிருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளாக மாறி வருவதைக் காண முடிகிறது.