பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனைக் கொன்ற இளம்பெண்| விடுவித்த எஸ்.பி !

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல்லிமெடு பகுதியில் ஜனவரி 2-ம் தேதி அன்று 19 வயது இளம்பெண்ணை கத்தி முனையில் இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அப்பெண் இளைஞரின் கையில் இருந்த கத்தியை பிடிங்கி அவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் இளம்பெண் சரணடைந்து இருக்கிறார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இயற்கை உபாதைக்கு சென்ற போது அப்பெண்ணின் உறவுக்காரரான அஜித் குமார் என்பவர் குடிப்போதையில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
முதலில், இந்த வழக்கை IPC 302 கீழ் பதிவு செய்து இருந்தாலும், பாலியல் பலாத்கார முயற்சியின் போது தற்காப்பிற்காக கொலை செய்த காரணத்தினால் வழக்கை IPC சட்டப்பிரிவு 100-ன் கீழ் மாற்றி அந்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் எனத் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக எஸ்.பி அரவிந்தனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்கும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் ஐபிஎஸ்-க்கும் நன்றி தெரிவித்து பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இதற்கு முன்பாக, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒருவர், குறிப்பாக பாலியல் பலாத்கார முயற்சியில் பெண்கள் செய்யும் கொலையானது IPC பிரிவு 100-ன் படி தற்காப்பிற்காக என சட்டம் கூறுவதாக முன்பே கட்டுரைகள் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : பாலியல் வன்புணர்வின் போது தன்னை தற்கொள்ள பெண் சுட்டாலும் குற்றவாளி அல்ல – ஏ.டி.ஜி.பி ரவி