This article is from May 15, 2021

ரெம்டெசிவிர் ஒரு “உயிர் காக்கும் மருந்து இல்லை”, பிறகு ஏன் மக்கள் அலையனும் ?

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்திற்காக சென்னை கீழ்பாக்கம், கோவை அரசு மருத்துவ கல்லூரி உட்பட மருந்து விநியோகிக்கும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து எந்த பயனும் அளிக்கவில்லை என உலக சுகாதார மையத்தில் இருந்து பல்வேறு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், அரசுகளும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருந்தாலும், “ஒரு வாரமாக காத்துக்கொண்டு இருக்கிறேன்” , “மருந்து வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்” , “ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வருகிறது, கண்டிப்பாக ரெம்டெசிவிர் மருந்து தேவை” எனும் குரல்களால் அதிர்கிறது மருந்து விநியோக தளங்கள்.

உண்மையில் கொரோனாவிற்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்தின் பங்களிப்பு என்ன? அந்த மருந்துக்கு ஏன் இவ்வளவு தட்டுப்பாடு ? எனும் பல முக்கியமான கேள்விகளுக்கு தெளிவு ஏற்படுத்தும் வகையில் ரெம்டெசிவிர் மருந்து குறித்து உலகில் உள்ள மருத்துவர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

உலக சுகாதார மையம் (WHO) :

WHO-வின் தலைமை விஞ்ஞானி டாக்டர். சௌமியா சுவாமிநாதன் மற்றும் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.மரியா வான் கெர்கோவ் ரெம்டிசிவிர் மருந்து பற்றி தெரிவித்த கருத்து, “ மேற்கொண்ட ஐந்து மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளும் ரெம்டெசிவிர் மருந்தின் பயன்பாடு இறப்பைக் குறைக்கவோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளிடையே மருத்துவ ஆக்சிஜன் தேவையை குறைக்கவோ உதவவில்லை என்பதைக் காட்டுகிறது” எனக் கூறப்படுகிறது. இதனை முன்மொழியும் வகையிலேயே மருத்துவ வல்லுநர்களின் கருத்தும், இந்திய அரசின் கருத்தும் உள்ளது. 

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் :

“ரெம்டெசிவிர் மருந்து என்பது அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சோதனை மருந்தே! ஆக்சிஜன் தேவை உள்ள மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கலாம். இது உயிர்காக்கும் மருந்து இல்லை”. என கடந்த 2020 ஆம் ஆண்டே செய்தி வெளியிட்டது. அதனை மக்களுக்கு நினைவு கூறும் வகையில், விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறிய காணொளி ஒன்றையும் கடந்த மே 11, 2021-ல் வெளியிட்டது. 

இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர்.வி.கே.பால் ,” பல்வேறு மருத்துவர்கள் அறிகுறியற்ற, மிதமான அறிகுறிகள் உடைய பல நோயளிகளுக்கு வைரஸ் சீக்கிரம் அழித்துவிட வேண்டும் எனும் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஆனால் அந்த மருந்துக்கு அவ்வளவு திறன் இல்லை” என கூறியுள்ளார்.

தமிழக அரசு :

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (ஜூலை 2020), “ஆபத்தான நிலையில் உள்ள பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் திறனை ரெம்டெசிவிர் மருந்து காட்டுகிறது” எனத் தெரிவித்து இருந்தார். இது அமைச்சர் 2020-ல் கூறிய கருத்து.

அதன் பின்னர்  ICMR விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள்  உட்பட பலரும் மீண்டும் மீண்டும் ரெம்டெசிவிர் மருந்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அது ஒரு உயிர்காக்கும் மருந்து இல்லை என வலியுறுத்திய பிறகு தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர், டாக்டர் டி.எஸ்.செல்வணாயகம் “ ரெம்டெசிவிர் ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல, ஆனால் தனியார் மருத்துவர்கள் தேவையில்லாமல் இதை பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கோவிட் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஒரு அத்தியாவசிய மருந்து அல்ல” என கடந்த மே 4 2021-ல் அழுத்தமாக கூறியுள்ளார்.

கடந்த சில  நாட்களுக்கு முன்பு  இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசெர்ச்சின் (ICMR) நோய்கள் பரவல் மற்றும் தடுப்பு (epidemiology) விஞ்ஞானி திரு.கணேஷ் குமாரிடம் யூடர்ன் நடத்திய நேர்காணலில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவரை இறப்பில் இருந்து தடுக்கவும், செயற்கை முறையான ஆக்சிஜன் கொடுப்பதற்கான தேவையை தவிர்க்கவும், வென்டிலேட்டரில் உள்ள ஒருவரை சீக்கிரம் அதில் இருந்து மீட்பதற்கும் ரெம்டெசிவிரை விட ஸ்டெராய்டுகள் பெரிதும் உதவுகின்றன. ரெம்டெசிவிர் ஒரு அவசியமற்ற மருந்து.” என கூறினார்.

இதைப்பற்றி ஸ்காட்லாந்தின் தேசிய சுகாதார சேவைகள் (என்.எச்.எஸ்) டாக்டர் அவிரல் வாட்சா இந்திய டுடே பத்திரிக்கையில் கூறுகையில், “ இங்கிலாந்தின் வழிகாட்டுதல்கள், ஸ்டான்போர்ட் அமெரிக்க வழிகாட்டுதல்கள் அல்லது WHO (உலக சுகாதார அமைப்பு) வழிகாட்டுதல்கள் கூட நோயாளியின் இறப்பு, நோயாளியின் இயந்திர காற்றோட்டம் தேவை, அல்லது வேறு எந்த முக்கியமான விளைவு காரணிகளிலும் எந்தவிதமான தாக்கத்தையும் (ரெம்டெசிவிர்) கொண்டிருப்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை” என்றே குறிப்பிட்டுள்ளார்.

ஏன் அந்த மருந்துக்கு இவ்வளவு  தட்டுப்பாடு ?

இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிப்பது மற்றும் அதை விநியோகம் செய்வதற்கான உரிமம் சிப்லா, டாக்டர்.ரெட்டி உட்பட 7 நிறுவனங்களிடம் உள்ளது. இந்த 7 நிறுவனங்களும் சேர்ந்து மாதத்திற்கு 38.80 லட்சம் குப்பிகளை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் குறைந்ததால், கடந்த 2020 டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மருந்து தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் 2021 மார்ச் மாதத்தில் இரண்டாம் அலை இந்தியாவில் வேகம் எடுத்த பொழுது மருந்து தயாரிப்புக்கு தேவையான 25 அடிப்படை மூல பொருட்கள் கிடைக்கவில்லை. இந்திய அரசு தற்போது உற்பத்தி எண்ணிக்கையை இரட்டிப்பு படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் மருந்தை தயாரித்து விநியோகம் செய்வதற்கு 25 நாட்கள் தேவைப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் குறையும் என சொல்லப்பட்டாலும் மாதத்திற்கு கிட்டத்தட்ட 75 லட்சம் குப்பிகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். 

இந்நிலையில் ICMRரின் நோய்கள் பரவல் மற்றும் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பிரப்தீப் கவுர் மக்கள் ரெம்டெசிவிர்க்காக கூட்டம் கூட்டமாக குவிவது ஊரடங்கை பயனற்றதாக செய்யும் என்றும், நோய் தொற்று கொத்து கொத்தாக பரவுவதற்கு வழிவகுக்கும் என சென்னை கீழ்பாக்கில் மக்கள் குவியும் காணொளியை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

மேலும், “அது ஒரு உயிர்காக்கும் மருந்து இல்லை. எனினும், அரசு உதவ விரும்பினால், ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு, மாநில அரசு என அனைவரும் மீண்டும் மீண்டும் மக்களிடம் கூறும் ஒருமித்த கருத்து, ரெம்டெசிவிர் “ ஒரு உயிர்காக்கும் மருந்தல்ல அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்பதே. அதற்காக அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து குறித்த மக்களின் பதற்றத்தை சரி செய்ய முடியும். 

Link :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715984

https://timesofindia.indiatimes.com/city/chennai/covid-19-remdesivir-shows-ability-to-save-critical-patients-tamil-nadu-health-minister-says/articleshow/77084805.cms

https://www.businesstoday.in/current/economy-politics/remdesivir-for-covid-19-patients-no-evidence-of-anti-viral-drugs-effectiveness-says-who/story/436459.html

https://twitter.com/kprabhdeep/status/1393463163954229249?s=20

https://youtu.be/ddH_DaqhY44

Please complete the required fields.




Back to top button
loader