குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழ் மொழி புறக்கணிப்பு எனப் பரவும் தவறான தகவல்

2023 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்கும் வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இந்தியில் இருப்பதாகப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 74வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநிலங்கள், யூனியன் பிரதேசம் மற்றும் ஒன்றிய அரசின் சார்பாக வாகனங்கள் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அதில், நாட்டின் கலாச்சாரம், கலை, ராணுவ வலிமை போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்படும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 17 வாகனங்களும், ஒன்றிய அரசின் சார்பில் 6 வாகனங்களும் இவ்வாண்டு அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன.
இந்த அணிவகுப்பிற்கான ஒத்திகை, கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில், தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்ற வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் இந்தியில் இருப்பதாகக் கூறி வருகின்றனர். இது குறித்து ‘நக்கீரன்’ பத்திரிகை தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் ’தமிழ்நாடு’ என்பது இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளது!” என டிவீட் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் ’தமிழ்நாடு’ என்பது இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளது!#RepublicDay2023 #TNGovt #தமிழ்நாடு #Nakkheeran pic.twitter.com/iLzzmD6LKI
— Nakkheeran (@nakkheeranweb) January 24, 2023
உண்மை என்ன ?
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாகனங்களில், மாநிலங்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெறுவது குறித்து, 2018ம் ஆண்டு ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டுள்ளது. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் விதிக்கப்படுவதுண்டு.
மேலும் படிக்க : குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியில் மொழி சர்ச்சை..!
அணிவகுப்பு வாகனத்தின் உயரம், அகலம், நீளம் மற்றும் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது முதற்கொண்டு ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும். வாகனத்தைத் தயார்ப்படுத்தி அனுப்பும் மாநிலங்கள் இதனைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி அனுப்பப்படும் வாகனத்தை பரிசோதனை செய்து அணிவகுப்பில் கலந்து கொள்ள உறுதி செய்ய ஒன்றிய அரசால் குழுக்களும் அமைக்கப்படும்.
அதேபோல் வாகனமானது, மாநிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள். மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள். மக்களின் கலாச்சார நிகழ்வு. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். சுற்றுச்சூழல், எதிர்கால பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
தமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் உள்ளதா ?
அணிவகுப்பு வாகனத்தில் மாநிலங்களின் பெயர் எப்படி இடம்பெற்றிருக்க வேண்டும் என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலங்கார வாகனத்தைத் தயார் செய்யும் மாநிலத்தின் பெயர் முன் பக்கத்தில் இந்தியிலும், பின் பக்கத்தில் ஆங்கிலத்திலும் இடம்பெற வேண்டும். அந்தந்த மாநில மொழியில் வாகனத்தின் வலது மற்றும் இடது பக்கங்களில் இடம்பெற வேண்டும்.
https://twitter.com/YOGESHWARANVT1/status/1617859448890097664?t=rG3sUwJ45Ty9xI9-s3LCFg&s=19
இந்த ஆண்டு தமிழ்நாடு சார்பில் பங்கேற்றுள்ள வாகனத்திலும் தமிழில் பெயர் இருப்பதை உறுதி செய்து ‘யோகேஸ்வரன்’ என்ற பத்திரிக்கையாளர் புகைப்படம் ஒன்றினை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அணிவகுப்பு ஒத்திகை வீடியோ ‘Don Update’ என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், தமிழ்நாடு என்ற பெயர் வாகனத்தின் இடது பக்கத்தில் தமிழிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும் இருப்பதைக் காண முடிகிறது.
"பெண்கள் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம்"
– இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழாவுக்கான அலங்கார ஊர்தி pic.twitter.com/hiawlh65s9
— DON Updates (@DonUpdates_in) January 23, 2023
இதிலிருந்து 74வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பாகப் பங்கேற்கும் வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் ‘தமிழில்’ இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாடு வாகனத்தின் மையப் பொருள் :
குடியரசு தின விழா தமிழ்நாடு அலங்கார ஊர்தி பெண் ஆளுமைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒளவையார், வீரமங்கை வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர்.முத்துலட்சுமி, தஞ்சை பாலசரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி , வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் ஆகியோர் சிலைகளும் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் இடம் பெற்றுள்ளது.
Link :