இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !

இட ஒதுக்கீடு என்றாலே தவறு என்ற மனநிலை சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வந்தார்கள், அவற்றால் என்ன பயன், இட ஒதுக்கீட்டால் என்ன மாற்றம் என பேசினால் அதற்கான பதிவு நீண்டு கொண்டே செல்லும். சமீபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது.

இத்தனை ஆண்டு காலம் இடஒதுக்கீடு வழங்கியதால் பட்டியலின மக்கள் முன்னேறி விட்டதாகவும், அவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டில் பயன் பெறுவதாக பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்தவர்களும் குற்றம் சுமத்துவத்தை பார்க்க முடிந்தது. அவர்களுக்கான பதிலை பின்வருமாறு காணலாம்.

Advertisement

இளையதலைமுறை என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமூக வாரியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், 2017-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஓசி பிரிவினர் 3,255 பேர், பிசி பிரிவினர் 99,139 பேர், பிசி(முஸ்லீம்) 14,753 பேர், எம்பிசி 1,30,976 பேர், எஸ்சி 1,06,687 பேர், எஸ்சி(அருந்ததியர்) 19,752 பேர், எஸ்டி 4848 பேர், எஸ்எஸ் 1708 பேர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதேபோன்று 12-ம் வகுப்பில் படித்தவர்களில் சமூக பிரிவு வாரியாக உள்ளவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை படத்தில் காணலாம். தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களை வகுப்பு வாரியாக பிரித்து பார்க்கையில், ஓசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 74% பேர், பிசி பிரிவில் 40%, எம்பிசி பிரிவில் 25% பேர், பட்டியல் இனத்தவர் (எஸ்சி) 15% பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

Advertisement

தனியார் பள்ளிகளில் பணம் கட்டி படிக்க வைக்க முடியும் என்ற அளவிற்கு பொருளாதார வசதி கொண்டவர்கள் குறைவாக தான் இருப்பார்கள். ஆனால், முன்னேறிய வகுப்பினரில் 74% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். பட்டியலின மக்களில் 15% பேர் மட்டுமே தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டு யாருக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

2017-ல் 10-வகுப்பு எழுதிய மாணவர்களின் அடிப்படையில் வகுப்பு வாரியாக பார்க்கும் பொழுது ஓசி பிரிவினர் 3 சதவீதம், பிசி பிரிவினர் 37 சதவீதம், பிசி(முஸ்லீம்) 6 சதவீதம், எம்பிசி 27%, எஸ்சி 22%, எஸ்சி(அருந்ததியர்) 3%, எஸ்டி 1 %, எஸ்எஸ் 1 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

தற்பொழுது வரை உள்ள இடஒதுக்கீட்டின் படி, பொது பிரிவினருக்கு 31.00%, பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 % , பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.50% , மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு 20 %, எஸ்.சி-க்கு 15%, எஸ்.சி(அருந்ததியர்) 3%, எஸ்.டி-க்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பொது பிரிவில் ஒரு பிசி மாணவன் போட்டியிடும் பொழுது பிசி இடஒதுக்கீடு பிரிவில் மற்றொரு மாணவருக்கு வழி பிறக்கிறது. இதில், 3% மட்டுமே உள்ள ஓசி பிரிவினர் பொது பிரிவினருக்கு உண்டான 31% பிரிவில் போட்டியிட முடியவில்லையா என்ற கேள்வி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் பொழுது அது 3% உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு அதிக பலன் அளிக்கும் வாய்ப்பாக இருப்பது மட்டுமல்லாமல், பொது பிரிவில் உள்ள 31%-ல் சதவீத குறைப்பு ஏற்பட வழி வகுக்கும். அது பிற சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் பிற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அங்குள்ளவர்களை விட குறைவாகவே இருக்கிறது. பட்டியலின மக்கள் முன்னேறிய விட்டனர், அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு எனக் கூறுபவர்கள், பணம் கட்டி படிக்க கூடிய தனியார் பள்ளிகளில் அதிகம் எண்ணிக்கையில் படிப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆக, அதிலிருந்தே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறோம்.

எந்த சமூகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என கூறுபவர்களின் நிலையை மாற்ற வேண்டும், அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நினைத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close