This article is from Jul 16, 2021

வன்முறை, கொரோனாவின் கோர முகத்தை உலகறியச் செய்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் தானிஷ் சித்திக்கி மரணம் !

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு புகைப்பட பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த தானிஷ் சித்திக்கி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆப்கானிய சிறப்புப் படைகளுக்கும், தலிபான் அமைப்பின் தாக்குதலுக்கு இடையில் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் ஆப்கன் வீரர் ஒருவரும் மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில், கொரோனா பேரழிவால் புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கொண்ட இன்னல்கள், கொரோனா மக்களை ஆட்டுவித்திருந்த போது இந்தியாவில் அவர்களுக்கு கிடைத்த மருத்துவ வசதி, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிக குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையில் உயிர் இழந்த கணக்கில் அடங்காத உயிர்களை அவர் எடுத்த ட்ரோன் புகைப்படங்கள் என ராய்ட்டர்ஸ் மல்டிமீடியா குழுவுக்கு தலைமை தாங்கி சித்திக்கி காட்சிப்படுத்திய உணர்ச்சிகள் ஏராளம்.

இந்தியாவை தாண்டி ஹாங்காங் போராட்டங்கள், ரோஹிங்யா போராட்டங்கள், ஈரானில் நடக்கின்ற வன்முறைகள் என உலகின் பல்வேறு நிகழ்வுகளின் உணர்வுகளை புகைப்படங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சென்ற சித்திக்கி அமெரிக்காவில் சிறந்த பொது சேவைக்காக வழங்கப்படும் Pulitzer விருதை வென்றுள்ளார்.

சித்திக்கியின் சமீபத்திய செய்தி அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அதில் ஆப்கானிய படைகள் ஏவ்வாறு தாலிபான் தாக்குதலுக்கு ஆளானது என எழுதியிருந்தார்.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கடைசியாக பகிரப்பட்ட பதிவு, ஆப்கன் படைகளுடன் புல்லட் ப்ரூஃப் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது அவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலை பதிவு செய்ததும், தொடர் வேலைகளுக்கு நடுவில் 15 நிமிடம் இளைப்பாறும் போது எடுக்கப்பட்டதும் தான்.

” நண்பர் சித்திக்கியின் மரணம் மிகவும் வருத்தமளிக்ககூடியதாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரை சந்தித்தேன்” என இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தானின் தூதர் ஃபரித் மமுண்ட்சே தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் சித்திக்கின் மரணம் குறித்தான முழு தகவல்களையும் உடனடியாக சேகரிக்கும் நடவிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

“தானிஷ் ஒரு சிறந்த பத்திரிகையாளர், அர்ப்பணிப்புள்ள கணவர் மற்றும் தந்தை. நாங்கள் மிகவும் நேசித்த சக ஊழியர். இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன ” என ராய்ட்டர்ஸின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader