சரவண பிரசாத் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக.. அவர் பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பு !

வலதுசாரி ஆதரவாளர் மற்றும் மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினருமான சரவண பிரசாத் பாலசுப்ரமணியம் என்பவரைப் பொய் செய்தி பரப்பியதற்காகத் தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நாளிதழில் வந்த செய்தியைத்தான் பகிர்ந்தார், அவர் ஒரு தேசபற்றாளர் என பாஜக மற்றும் வலதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பாக, சரவண பிரசாத் பரப்பிய போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து தனித்தனியாக யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தொகுப்பினை இக்கட்டுரையில் காண்போம். 

1. அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 திமுகவினர் கைது 

Archive link  

கடந்த மே மாதம் 29ம் தேதி சரவண பிரசாத் “அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 திமுகவினர் கைது” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தித்தாள் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த செய்தி 2021 மே 28-ம் தேதி தினமலர் இணையதளத்தில் ” அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 பேர் கைது ! ” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த செய்தியில் கைது செய்யப்பட்டவர்கள் திமுகவினர் எனத் தலைப்பிலோ அல்லது செய்தி உள்ளேயோ குறிப்பிடவில்லை. 

மேலும் படிக்க : அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய 5 திமுகவினர் கைதா ?

இது தொடர்பாகத் ‘தினமணி‘ வெளியிட்ட செய்தியிலும் அரசுப் பள்ளியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது என்றே உள்ளது. அந்த செய்தியில் திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது. சரவண பிரசாத்தின் இப்பதிவு குறித்து திருப்பூரைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் அளித்த புகாரின் பேரில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2. மணிமேகலை லவ்ஜிகாத்

Twitter link | Archive link 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த சின்னதிரை தொகுப்பாளர் மணிமேகலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஹுசேன் எனும் நடனக் கலைஞரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது காதலுக்கு மதமில்லை எனப் பதிவிட்ட மணிமேகலை, தற்போது இஸ்லாத்துக்கு மதம் மாறியதாகப் சரவண பிரசாத் பதிவிட்டிருந்தார்.

Archive link   

மேலும் படிக்க : குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறியதாக வதந்தி பரப்பும் வலதுசாரிகள் !

வலதுசாரிகளின் இத்தகைய பதிவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக 2020ல் மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில், யாரும் மதம் மாறவில்லை. ஹுசேன் என்னுடன் கோவிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எனப் பதிவிட்டு இருந்தார். மேலும், அவர்கள் புதிதாகக் கட்டத் தொடங்கிய வீட்டிற்கு இந்து முறைப்படி பாலக்கால் பூஜை செய்துள்ளதையும் காண முடிகிறது. 

3. யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீம்

Archive link 

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி யோகேந்திர யாதவின் உண்மையான பெயர் சலீம் என்றும், இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததாகவும் வீடியோ ஒன்றினை பரப்பினார். ஆனால், ‘Jist’ எனும் யூடியூபிற்கு யோகேந்திர யாதவ் அளித்த நேர்காணலில் சலீம் பெயரின் பின்னணி குறித்து அவர் விளக்கியுள்ளார். 

அதில், தனது தந்தைக்கு நேர்ந்த சில அனுபவங்களின் காரணமாக சலீம் என்ற இஸ்லாமியப் பெயரை எனக்கு வைத்தார். ஆனால், நீ இந்துவாக இருந்தும் சலீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று அனைவரும் என்னைக் கேட்பார்கள். நீ தத்தெடுக்கப்பட்டவன், நீ வளர்ப்பு மகன் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். பின்னர் பள்ளி சேரும்போது எனது பெயரை யோகேந்திர யாதவ் என மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க : அரசியல்வாதி யோகேந்திர யாதவ் தன் முஸ்லீம் பெயரை மறைத்து ஏமாற்றி வந்ததாக பொய் பரப்பும் வலதுசாரிகள் !

அவர் பேசியதின் ஒரு சிறு பகுதி மட்டும் எடிட் செய்து அவரது உண்மையான பெயர் சலீம் எனத் தவறாகப் பரப்பினார். இது குறித்து விரிவாக யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

4. பிரியமான பெண்ணை விரும்பலாமா? பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?

Archive Link

கவிஞர் வைரமுத்து “பிரியமான பெண்ணை விரும்பலாமா? பெரியம்மா பெண்ணை விரும்பலாமா?” எனச் சர்ச்சையாகப் பேசியதாக பாலிமர் நியூஸ் கார்டு ஒன்றினை பதிவிட்டிருந்தார். அப்படி எந்த நியூஸ் கார்டும் பாலிமர் நியூஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இல்லை. 

மேலும் படிக்க : பெரியம்மா பெண்ணை விரும்பலாமா ? என கவிஞர் வைரமுத்து சர்ச்சையாகப் பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

உண்மையில், பாடல் ஒலிப்பதிவு செய்யும்போது அந்த கூடத்தில் கவிஞர் ஏன் இருக்க வேண்டும் என தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றினை வைரமுத்து விளக்கியுள்ளார். ‘பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லை’ என அவர் எழுதிய வரியினை, ஒரு வட இந்தியப் பாடகர் பாடும் போது ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லை’ எனத் தவறாகப் பாடியுள்ளார். அப்போது அவர் அங்கு இருந்ததினால் அத்தவறினை உடனடியாக சரி செய்ததாகப் பேசியுள்ளார். அவர் பேசியதைத் தவறாகச் சித்தரித்த செய்தி கார்டை சரவண பிரசாத் பரப்பியுள்ளார். 

5. முதலமைச்சர் ஸ்டாலினை விட அவரது ஆசிரியருக்கு வயது குறைவு

Archive Link

இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை விட அவரது ஆசிரியருக்கு வயது குறைவு. பிறகு எப்படி ஸ்டாலினுக்கு ஆசிரியராக அவர் இருந்திருக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் பரப்பினார். ஸ்டாலினுக்கு வயது 70, அவரது ஆசிரியர் ஜெயராமன் பேசியது, அவரது நேர்காணல் போன்ற தகவல்களைக் கொண்டு அவரது வயது 83 என்பதும், அவர் ஸ்டாலினுக்கு ஆசிரியராக இருந்த போது 28 முதல் 30 வயது இருந்திருக்கும் என்றும் விரிவாகக் கட்டுரை வெளியிட்டுள்ளோம். 

மேலும் படிக்க : முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !

6. பொங்கல் பரிசு தொகுப்பு

Archive link 

தமிழ்நாடு அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கியது. ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட அப்பணத்தைக் கொண்டு, டாஸ்மார்கில் மது வாங்கியதாகப் புகைப்படம் ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க : பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

அப்படம் 2021ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைக் காண முடிகிறது. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக. அந்த பழைய புகைப்படத்தினை தற்போது எடுத்தது போல் பதிவிட்டுள்ளார்.

7. சாவர்க்கர் சிறை & செனாப் இரயில் பாதை 

Archive link 

மேலும், சாவர்கரின் சிறை மற்றும் நேருவின் சிறை என இரண்டு படங்களை ஒப்பிட்டு நேரு சிறையில் வசதிகளுடன் இருந்ததாகத் தவறான தகவலைப் பரப்பினார்.

மேலும் படிக்க : சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !

மேலும் படிக்க : இந்தியாவின் செனாப் பாலத்தில் நடத்தப்பட்ட இரயில் சோதனை ஓட்டம் எனப் பரப்பப்படும் சீனா வீடியோ

அதேபோல், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் நதியின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான இரயில் பாதையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் எனச் சீன வீடியோவினை பதிவிட்டிருந்தார். அவற்றின் உண்மைத் தன்மை குறித்த செய்திகளையும் வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு

மேலும் படிக்க : தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு

சரவண பிரசாத் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளே பல்வேறு பொய் செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி உள்ளனர். அதுகுறித்த தொகுப்பு கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader