கலப்பு திருமண பத்திரிகையை லவ் ஜிகாத் எனப் பரப்பிய வலதுசாரிகள்.. பயந்து நிகழ்ச்சியை நிறுத்திய குடும்பத்தார்கள் !

டெல்லியில் ஷரத்தா என்ற பெண்ணை கடந்த மே மாதம் அவரது காதலர் அஃப்தாப் பூனாவாலா என்பவர் கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வீசியுள்ளார். ஷரத்தா கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

கொலை செய்யப்பட்ட ஷரத்தா இந்து பெண், கொலையாளி அஃப்தாப் பூனாவாலா முஸ்லீம் என்பதால் ஷரத்தா கொலையை லவ் ஜிகாத் என வலதுசாரிகள் இந்திய அளவில் பரப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில முன்னணி ஊடகங்களும் கூட “லவ் ஜிகாத் ” என்ற தலைப்பிலேயே செய்திகளையும் வெளியிட செய்தன.

இதையடுத்து, ஷரத்தா-அஃப்தாப் சம்பவத்தை குறிப்பிட்டு இந்து பெண்கள் முஸ்லீம் ஆண்களை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ வேண்டாம் என்றும், லவ் ஜிகாத் என்றும் கூறி சமூக வலைதளங்களில் மீம்கள் வைரல் செய்யப்பட்டன.

இந்நிலையில்தான், சுதர்சன் எனும் இந்தி செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியரும், தீவிர வலதுசாரியுமான சுரேஷ் செளகான் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்து-முஸ்லீம் கலப்பு திருமணத்தின் பத்திரிகையை லவ் ஜிகாத் எனப் பதிவிட்டதால், அது வைரலாகி அந்த நிகழ்ச்சியை குடும்பத்தார்கள் நிறுத்தியே உள்ளனர்.

Twitter link | Archive link 

நவம்பர் 18ம் தேதி சுரேஷ் செளகான் டிவிட்டரில், ” கொலையாளி அஃப்தாபின் வாசையில் இம்ரான் மற்றும் திவ்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழ் பகிரங்கமாக வருகின்றன. அதே கிராமத்தைச் சேர்ந்த அஃப்தாப் ஷரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிய நெஞ்சை பிளக்கும் குற்றத்திற்குப் பிறகும் இது எப்படி நடக்கப் போகிறது ? ” என திருமண அழைப்பிதழை பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு திருமணம் அழைப்பிதழும், திருமணம் நடைபெறும் இடம் பற்றிய தகவலும் வைரலானதால் 2022 நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிராவின் வாசை பகுதியில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி நடைபெற இருந்த மண்டபத்தின் மேலாளர், ” திருமண நிகழ்ச்சியின் தகவல் பரவியதால் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து இரு வீட்டார் குடும்பத்தினரும் தொந்தரவிற்கு உள்ளாகி உள்ளனர். அதன்பின், அவர்கள் மண்டபத்திற்கு வந்து நிகழ்ச்சியை நிறுத்த உள்ளதாக கூறினர். ஆகையால், டெபாசிட் தொகையை திருப்பி அளித்தேன் ” என நியூஸ்லாண்டரி செய்தி தளத்திற்கு தெரிவித்து உள்ளார்.

இதுமட்டுமின்றி, ” இந்த திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது ” என மீண்டும் ட்விட்டரில் சுரேஷ் செளகான் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

மோடியின் ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் தீவிர வலதுசாரியான சுரேஷ் செளகான் தனது ட்விட்டர் பக்கம் மற்றும் செய்தி சேனலில் தொடர்ந்து போலிச் செய்திகளையும், வெறுப்பு பேசுக்களையும் பரப்பி வருகிறார்.

மேலும் படிக்க : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி என வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !

மேலும் படிக்க : தமிழக அரசு பள்ளியில் ருத்ராட்சம் அணிந்ததால் மாணவன் தாக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்ட இந்தி சேனல் !

இதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பாகிஸ்தான் கொடி, தமிழக அரசு பள்ளியில் ருத்ராட்சம் அணிந்ததால் மாணவன் தாக்கப்பட்டதாக அவர் பரப்பிய பொய் செய்திகள் குறித்து நாமும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

Please complete the required fields.
Back to top button
loader