யார் இந்த நல்லோர் வட்டம் பாலு ? அரசியல் தரகரா, சமூக சேவகரா ?

தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க போவதாகவும், ஊழலுக்கு எதிராகவும் கூறி  களமிறங்கிய கமல்ஹாசன், சகாயம் உள்ளிட்டோர் அருகே ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் அரசியல் இடைத்தரகராக செயல்பட்டு வருவதாக அவரின் சில புகைப்படங்கள் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement

Archive link 

” இந்த படத்தில் இருக்கும் ஒல்லியான நபர் தீவிர ஆர்எஸ்எஸ் அரசியல் ப்ரோக்கர். பெயர் பாலு. இவர்தான் தமிழகத்தில் உள்ள திமுக எதிர்ப்பு கூட்டணிகளை செயல்படுத்தி வருகிறார். கமல், சகாயம், அமமுக, எடப்பாடிக்கு நாக்பூர் கட்டளைகளை கொண்டு சேர்ப்பதுதான் இவர் முக்கிய வேலை. தமிழர்களே பார்த்து சூதானமாக வோட்டு போடுங்கள். நாளைக்கு நம்ம தலைமுறையினருக்கு அது வாழ்வா சாவா முடிவு ” என பதிவின் நிலைத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

வைரல் செய்யப்படும் புகைப்படங்கள், பதிவுகள் தொடர்பாக நல்லோர் வட்டம் அமைப்பின்  பாலு அவர்களை தொடர்பு கொண்டு யூடர்ன் தரப்பில் எடுத்த பேட்டியில் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு :

கேள்வி : நீங்கள் ஆர்.எஸ்.எஸ்க்காரர் எனக் கூறுவது  உண்மையா, ஆடிட்டர் சத்யா என ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் உடன் நீங்கள் இருக்கும் புகைப்படங்கள் வந்துள்ளதே ?

Advertisement

பதில் : உண்மைதான். நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து இருக்கிறேன். ஆனால், அதுமாதிரியான விசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லை. ஆனால், ஆடிட்டர் சத்யா உள்ளிட்டோருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் உண்டு.

கேள்வி : உங்கள் அமைப்பில் ரவிசங்கர் ஜி, பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசி இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஆடிட்டர் சத்யா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருக்கிறது. இப்படி, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருக்கும் நபர் மாற்றம் தேவை எனக் கூறும் கமல், சகாயம் உள்ளிட்டோருடனும் இருக்கிறார். ஆக, அரசியல் சம்பந்தப்பட்டு செயல்படுகிறார் எனக் கேள்வி எழுப்புகிறார்களே ?

பதில் : அந்த 4 புகைப்படங்களில் சகாயம், கமல் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருக்கிறது. அது நியாயமான கேள்வி, எல்லோரும் எழக்கூடியது. ஆனால்,  அறிவார்ந்த ஒன்றுபட்ட ஒரு மக்கள் சக்தி உருவாக வேண்டும் என்பதே என் வேலை. மதம், அரசியல் என மக்களை பிரிக்கும் பெயரை நான் பயன்படுத்தமாட்டேன். நல்லவர்கள் ஒன்றுபட்டால் நாட்டில் தவறே நடக்காது என்பது என் நம்பிக்கை.

கேள்வி : இவர்கள் அனைவருக்கும் அரசியல்ரீதியாக ஆலோனை சொல்வதாகவும், அணி மாற்றுவதாக, இவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக நீங்கள் பேசியதாக எழும் கூற்றுக்கு உங்களின் நேரடி பதில் ?

பதில் : இல்லை. நல்லவர்கள் நிரந்தரமாக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டு கொண்டிருக்கிறேன். வேற எந்த அஜெண்டாவும் இல்லை. வருகின்ற தேர்தலில் நல்லோர் வட்டம் யாருக்கும் எந்தவித ஆதரவோ, ஒத்துழைப்போ அளிக்காது.

கேள்வி : அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஆனால், அமைப்பின் கூட்டங்களில் பேசியவர்களில் வலதுசாரி முகங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இடதுசாரி, திராவிடம் என மாற்று சிந்தனையார்கள் உள்ளதாக தெரியவில்லையே ?

பதில் : வலதுசாரி, இடதுசாரி என வேறுபாடு கிடையாது. என்னிடம் நேரில், அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக மேம்பாட்டிற்காக பணியாற்ற வர நினைப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.  

நல்லோர் வட்டம் அமைப்பின் பாலு அவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள், கமல், சகாயம் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையே என அவர் பேசும் போது அவற்றை உறுதி செய்து உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்க்காரரா என்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முன்பு இருந்ததாக கூறி இருக்கிறார். அவருடைய கூட்டங்களில் எல்லாம் வலதுசாரி சிந்தனையாளர்கள் அதிகம் பேசியும், முன்னிலைப்படுத்தப்பட்டு வந்ததும் தெரிய வருகிறது.

தமிழகத்தில் அரசியல் சார்பாக பேச்சு நடத்தி இருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு அறிவார்ந்த, நல்லவர்கள் நிரந்தரமாக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருவதாக அவர் ஒரு விளக்கம் அளித்து இருக்கிறார்.

நம்முடைய தேடலில், வைரல் செய்யப்படும் இந்த 4 புகைப்படங்களும் உண்மையே. அவர் முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து இருக்கிறார். தற்போது இல்லை என்கிறார். அரசியல்ரீதியான சித்தாந்தத்தில் செயல்படவில்லை, நல்லவர்களை ஒருங்கிணைப்பதுதான் என் வேலை எனச் சொல்கிறார். ஆனால், இன்றளவும் அவரின் இயக்கத்தில் வலதுசாரி சிந்தையாளர்கள், ரவிசங்கர் ஜி, பாஜகவின் அண்ணாமலை, ஆடிட்டர் சத்யகுமார் போன்றவர்கள் பேசியதையும் கவனிக்க முடிகிறது.

அதேபோல், இடதுசாரிகள், திராவிட சிந்தனையாளர்கள் தன்னை தேடி வரவில்லை, அப்படி வந்தால் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும், கட்சி பாகுபாடுடன் பழகவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

இதன் அடிப்படையில், அவர் தமிழகத்தில் அரசியல் இடைத்தரகராக செயல்பட்டாரா என்று நம்மால் சொல்ல முடியுமா என்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து இருக்கிறார் என்பதும், தற்போது ஆர்.எஸ்.எஸ் தொடர்பான மக்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதும் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், அதை வைத்தே அவர் இடைத்தரகராக செயல்பட்டார் என்றோ அல்லது செயல்படவில்லை என்றோ உறுதியாக சொல்ல முடியாது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button