ஆர்எஸ்எஸ் பதிவு ரீட்வீட், மாட்டுக்கறி பதிவு தேவையற்றது.. என்னதான் ஆச்சு சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்திற்கு !

சென்னை போக்குவரத்து காவல்துறையின் டிவிட்டர் பக்கத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த  ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் பற்றியப் பதிவை ரீடிவீட் செய்திருந்தது கண்டனத்தையும், சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 5ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. அந்த வீடியோவினை சமூக வலைத்தளங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதை காஷ்மீரி இந்து எனும் ட்விட்டர் பக்கம் பதிவிட்டு இருந்தது.

காஷ்மீரி இந்து ட்விட்டர் பதிவிட்ட வீடியோவினை கிரேட்டர் சென்னை டிராபிக் போலீஸ் (Greater Chennai Traffic Police) டிவிட்டர் பக்கம் ரீடிவிட் செய்துள்ளது. அதன்பின்னர் ரீடிவீட்டினை நீக்கவும் செய்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஆனால், இதே டிவிட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலப் பதிவு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினர் கோயம்பேட்டில் நடத்திய “இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம்”, “CMOTamilNadu” குறித்த பதிவுகளும் ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது. இதில் CMOTamilNadu குறித்த ரீடிவீட் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதே போன்று சில நாட்களுக்கு முன்னர், சென்னை காவல் துறையின் (GREATER CHENNAI POLICE) டிவிட்டர் பக்கத்தில் இருந்து செய்த கமண்ட் ஒன்று கண்டனத்திற்கு உள்ளானது. அபுபக்கர் என்பவர் மாட்டுக்கறி உணவின் புகைப்படத்தினை தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதற்கு சென்னை காவல் துறை “இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது. தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்” என கமண்ட் செய்திருந்தது. 

காவல்துறையின் இத்தகைய பதிவிற்கு திமுகவை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் முதற்கொண்டு கண்டனங்கள் தெரிவித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதையடுத்து, சென்னை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: “மாட்டுக்கறி” பதிவு தேவையற்றது எனப் பதிவிட்டு நீக்கிய சென்னை காவல்துறை கூறும் விளக்கம் !

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அனுமதி மறுப்பு : 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஜம்மு – காஷ்மீர் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஊர்வலத்தினை ஒழுங்குப்படுத்த மட்டுமே காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரமில்லை என தெரிவிக்கப்படிருந்தது.

இதனையடுத்து நிபந்தனைகளுடன் அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் பல இடதுசாரி அமைப்புகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதிக் கோரியது. 

இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது என தடை செய்யப்பட்டது. இதனால் சட்ட ஒழுங்கினை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ன் ஊர்வலம் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் மனித சங்கிலி பேரணி ஆகியவைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போக்குவரத்து காவல் துறையின் டிவிட்டர் பக்கம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணியினை ரீடிவிட் செய்ய அவசியம் என்ன, அங்கு பணியில் வலதுசாரிகள் நுழைந்து விட்டார்களா எனப் பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பட்டு வருகிறது. 

காவல் துறையினரின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் பதிவுகள் என்பது அத்துறையினரால் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ  தகவலாகவே பொதுமக்களால் எடுத்துக்கொள்ளப்படும்.

அப்படி இருக்கையில் காவல்துறையின் சமூக வலைத்தளப் பக்கங்களை நிர்வகிப்பது யார் ? இத்தகைய கவனக்குறைவான கையாளுகைக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விகள் எழத்தானே செய்யும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button