ஈஷா பகுதி யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்படாததே குழப்பத்திற்கு காரணம் – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் !

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையம் வனப் பகுதியை ஆக்கிரமித்தும், யானைகளின் வழித்தட பாதையை மறித்தும் கட்டிடங்களை கட்டி உள்ளதாக பல ஆண்டுகளாக ஈஷா மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கு ஜக்கி வாசுதேவ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஈஷா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்ட வன அலுவலர் அளித்த பதிலில், ” ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்தால் வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்படவில்லை. வனப் பகுதியில் ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்தால் கட்டிடங்கள் கட்டப்படவில்லை. யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யவில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈஷா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த ஆர்.டி.ஐ தகவலை வைத்து ஈஷா அமைந்திருக்கும் பகுதியில் யானைகளின் வழித்தடங்களே இல்லை என பலரும் குறிப்பிட்டு வருவதாகவும், ஆர்.டி.ஐ பதிலில் அப்படி குறிப்பிடவில்லை, யானைகள் வழித்தடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றே கூறப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பூவுலவின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் கூறுகையில், ” இந்தியாவில் பல இடங்களில் யானைகளின் வாழ்விடங்கள்(habitats) மற்றும் வலசைபாதைகள்(migratory paths, corridors) இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. அந்த அறிவிப்பு வெளியாகினால் மட்டுமே இதுபோன்ற குழப்பங்கள் வராமல் இருக்கும். கோயம்புத்தூர் வனப் பகுதியில் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பு வெளியாகி ஈஷா பகுதியை அரசு கையகப்படுத்தி யானைகளின் வாழ்விடமாகவோ, வலசைபாதையாகவோ மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
ஈஷாவின் கட்டிடங்கள் யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வலசைபாதையை மறித்து தான் கட்டப்பட்டு இருக்கிறது என சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது, அதையே வனத்துறை அலுவலரும் கூறுகிறார். ஈஷா மீது டிமோலிசன் நோட்டீஸ் இருக்கு, சுற்றுசூழல் உள்ளிட்ட பல அனுமதிகளை பெறவில்லை. இவை அனைத்திற்கும் பொதுவாக அந்த பகுதி யானைகளின் வழித்தடமாக அறிவித்தால் மட்டுமே தீர்வாக இருக்கும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றி கூறுகையில், ” ஆர்.டி.ஐ கேள்வியில் ஈஷா அருகே அமைந்துள்ள யானைகள் வழித்தடம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, கோயம்புத்தூர் வனப் பிரிவில் யானைகள் வழித்தடம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனப் பதில் அளித்துள்ளனர். தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து இன்னும் அறிவிக்கவில்லை. யானைகளின் வழித்தடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கப்பட பகுதியாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது.
17.8.2012-ல் கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு எழுதிய கடிதம் ஈஷாவிற்கு எதிராக எழுதப்பட்ட முதல் புகார். அதில், ஈஷா அமைந்துள்ள பகுதி யானைகளின் வழித்தட பகுதி என்றும், இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியதால் யானைகள் மனிதர்கள் இடையேயான முரண்பாடு அதிகரித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
மலைசார்ந்த பகுதியில் அமைக்கப்படும் எந்த கட்டிடங்களுக்கும் HACA-விடம் முன் அனுமதி வாங்கிய பிறகே கட்டப்பட வேண்டும். ஈஷாவின் கட்டிடங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 1,44,000ச.மீ அளவில் உள்ளது. இங்குள்ள எந்த கட்டிடத்திற்கு HACA கமிட்டி உடைய எந்த அனுமதியும் வாங்கவில்லை.
ஈஷாவில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளால் வனப்பகுதியில் தொந்தரவுகள் ஏற்படுகிறது, எனவே அதை தடை செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் போடப்பட்ட வழக்கில், இது யானைகளின் வாழ்விடம் எனும் நிலைப்பாட்டை வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டது. இன்னும் யானைகளின் வழித்தடம் என சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதற்காக, அது யானைகளின் வழித்தடம் இல்லை என்று அர்த்தமாகிவிடாது ” எனக் கூறி இருந்தார்.
ஈஷா தொடர்பான ஆர்.டி.ஐ பதில் குறித்து பியூஸ் மனுஷ் வெளியிட்ட வீடியோவில், ” இந்த ஆர்.டி.ஐ பதிலால் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி யானைகளின் வாழ்விடம் இல்லை என்று ஆகிவிட போவதில்லை. யானைகள் ஒரு வாழ்விடத்தில் இருந்து மற்றொரு வாழ்விடத்திற்கு செல்லும் பகுதியே யானைகளின் வழித்தடங்கள். தமிழ்நாட்டில் எத்தனை யானை வழித்தடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விட்டால் கோயம்புத்தூரில் யானைகளே இல்லை எனக் கூறி விடுவார்கள். யானைகள் வாழ்விடத்தில் தான் ஜக்கி வாசுதேவ் இருக்கிறார். பட்டா நிலத்தில் சொல்லும் ஜக்கி அடிக்கும் கூத்தால் வனப் பகுதி மோசமடைந்து வருகிறது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
அரசு தரப்பில் வெளியான ஆர்.டி.ஐ பதில் ஈஷா ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில், ஈஷா அமைந்துள்ள கோயம்புத்தூர் மலைப்பகுதி மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வலசைபாதைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், அரசு அந்த அறிவிப்புகளை வெளியிட்டு யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வலசைபாதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.